Friday, October 20, 2023

நாமக்கல் ஆஞ்சநேயர் அலங்கார பஞ்சகம்

காப்பு

இருவிழி திறந்து கைகூப்பி நின்று
நரஅரி பார்க்கும் திறனது கண்டு
இராமனின் பக்தன் புகழ்ந்துநான் பாட
திரௌபதி அம்மன் மகிழ்வுடன் காப்பாள்

இராமனின் பக்தனான அனுமன் திறந்த இரண்டு விழிகளால் நரசிங்க முர்த்தியைக் கண்டு இருகரம் கூப்பி வணங்கும்  திறத்தினைக் கண்டு ஆஞ்சநேயன்மேல் நான்பாடும் அலங்கார பஞ்சகம் என்னும் நூலை திரௌபதி அம்மன் மகிழ்வுடன் காப்பாளாக.

வெண்பா

கற்பு சிறப்பினள் அஞ்சனை மைந்தா
பரிதி கனியென்று உண்ண - விரைந்தவா
ஆழி அணைகட்ட கோவர்த் தனகிரி
தாங்கினாய் என்னசொல்வேன் நான்  01

கற்பில் சிறந்த அஞ்சனையின் மைந்தனே. சூரியனைக் கனி  என்று பரித்து உண்ணச் சென்றாய் நீ. இலங்கைக்குச் செல்ல கடலிலே அணைக் கட்டுவதற்காகக் கோவர்த்தன மலையைப் பெயர்த்து எடுத்து வந்தவனே. உன் செயலை நான் என்னவென்று செல்வேன்.

கட்டளைக் கலித்துறை

நான்முகன் தந்தை அவதாரம் செய்து மனைவிதேடி
நான்கு திசையும் அலைந்து இறுதியில் வாயுமைந்தா
கோன்உனை கண்டு வரவேண்டும் என்று அனுப்பிவைக்க
மான்விழி நங்கை இருக்கும் இடம்தேடி சென்றனையே 02

நான்கு முகங்களை உடைய பிரம்மாவின் தந்தை இராமனாய் அவதாரம் செய்து தன்னுடைய மனைவியை காணாது, காட்டில் நான்கு திசைகளிலும் தேடி அலைந்து, இறுதியில் வாயுமைந்தனான உன்னிடத்தில் அரசனான இராமன் சீதையைக் கண்டுவரவேண்டும் என்று தன் மோதிரத்தைத் தந்து அனுப்ப, மான்விழி கொண்ட நங்கையாம் சீதை இருக்கும் இடம்தேடிச் சென்றாய்.

ஆசிரியப்பா

சென்று இடம்தேடி கண்டு வந்தவனே!
நினைத்தி ருந்தாள் கற்பினளை நீயே !
மீட்டு வந்தி ருப்பாய்; தலைவனுக்
கிழுக்கென சேதி சொல்ல வந்தாயே!
இளையோன் உயிர்காக்கும் சஞ்சீவி கொண்டுவந்து
மீண்டும் இடம்வைத்து திரும்பி வருகையில்
கிடைத்த திருமால் நிறம்கொண்ட பெரிய
சாளக் கிராமம் கொண்டு வந்தாய்!
பறந்துவரும் வேளையில் விடியல் கண்டு
சந்தியா வந்தனம் செய்யகீழே வைத்தாய்;
கடன்மு டித்து கையெடுக்க; வாரா
நிலைகண்டு வியந்து நின்றாய்; இராமன்
கடமை முடித்து என்னை எடுத்துச்
செல்லென்று வானொலி கேட்டு விட்டுச் 
சென்றாய்இராமன் துணையாய்ப் போரில் 
வென்று திரும்ப சாளக் கிராமம்
நரஅரியாய் வளர்ந்து நிற்கக் கண்டு
வியந்து கைகூப்பி வணங்கி நின்றாயே! 03

சீதை இருக்கும் இடம்தேடிச் சென்று கண்டுவந்து சொன்னவனே. நீ நினைத்திருந்தால் சீதையினை அப்போதே மீட்டுக் கொண்டுவந்திருப்பாய். அது உன் தலைவனான இராமனுக்கு இழுக்கென்று விட்டுவிட்டாய். இராமனின் தம்பி இலக்குவனின் உயிரைக் காக்க சஞ்சீவி மலையை எடுத்துவந்து உயிரைக் காத்தப் பின்னர், அம்மலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு திரும்பும் வழியில் கிடைத்த திருமாலின் நிறம்கொண்ட பெரிய சாளக் கிராமம் ஒன்றைக் கையில் எடுத்து வந்தாய். வான்வழியே பறந்து வந்து கொண்டிருக்க பொழுது விடிந்ததைக் கண்டு, சந்தியா வந்தனம் செய்ய அதை ஓரிடத்தில் வைத்து, தன் பணியை முடித்து அதை எடுக்க நினைத்தாய். சாளாக் கிராமம் கையில் எடுக்க முடியாத நிலையில் விழித்துப் பார்க்க, இராமனக்குச் செய்யவேண்டிய பணிகளை முடித்துவிட்டு வரும்போது என்னை எடுத்துச் செல் என்று வானத்தில் இருந்து ஓர் ஒலி கேட்க, அதை அப்படியே விட்டுச் சென்று, இராமனுக்குத் துணையாய் இருந்து போரில் வெற்றிபெற்றுத் திரும்பி வந்து பார்க்க, அச்சாளாக்கிராமம் பெரிய நரசிங்க மூர்த்தியாய் வளர்ந்து நின்றிருந்தது கண்டு, வியந்து வணங்கி நின்றாய்.

ஆசிரியவிருத்தம்

நின்மார்பைத் திறந்து காட்டி பக்திக்கு உருவம் தந்தாய்
நின்வாலை நீட்டி பீமன் தமையனென்ற உண்மை சொன்னாய்
தனஞ்செயனின் கொடியாய் நின்று பாண்டவர்க்கு வெற்றி தந்தாய்
தன்உருவை மாற்றிக் கொள்ளும் திறத்தினாலே சீதை மீட்டாய் 04

உன்னுடைய மார்பினைத் திறந்து அதில் இராமன் சீதையின் உருவம் காட்டி, ஒரு பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைச் சொன்னாய். பீமன் செல்லும் வழியின் உன்னுடைய வாலை வழியில் நீட்டி, அவனது சகோதரன் நீ என்பதைச் சொன்னாய். பாரதப்போரில் அர்ச்சுனனின் தேரின் கொடியாக இருந்து, அவனுக்கு வரும் தாக்குதல்களைத் தாங்கி, பாண்டவர்களுக்கு வெற்றியை பெற்றுத் தந்தாய். உன்னுடைய உருவம் மாற்றிக்கொள்ளும் திறத்தினால் சீதையைக் கண்டுபிடித்து மீட்டெடுக்க வழிவகை செய்தாய்.

வண்ணம்

சீதைமனம் கவர்ந்தவனே சிரஞ்சீவி யானவனே;
பாதையினை புறம்தள்ளி வான்வழியே சென்றவனே;
கீதையினை முழுவதுமாய் கேட்டிருந்த புண்ணியனே
பேதமின்றி வணங்குகின்றோம் காத்திடுவாய் எங்களையே; 05

சாலை வழியாகச் செல்லாமல் வான்வழியாக இலங்கை சென்று, தன்னைக் காக்க யார் வருவார்கள் என்று மனக்கவலை கொண்டு சீதையின் உள்ளத்தைக் கவர்ந்து சிரஞ்சீவியாய் இருக்கும் வரத்தினைப் பெற்றவனே. மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்குச் சொன்ன கீதையினை நீயும் உடனிருந்து கேட்கும் புண்ணியத்தைச் செய்தவனே. பேதம் இன்றி அனைவரும் உன்னை வணங்குகின்றோம் உங்களைக் காத்திடுவாய் மாருதியே.