Monday, October 23, 2023

வேதவதி தாரகை மாலை

முன்னொரு காலம் தன்னில் திருமகள் அம்சத் தோடு
வேதவ திநாமம் கொண்டோள் விட்ணுவைத் துணையாய்க் கொள்ள
தனிமையில் காட்டில் வாழ்ந்து கடுந்தவம் புரிந்து வந்தாள்
வான்வழி யாக வந்த இராவணன் காட்டில் உள்ள
கன்னியைக் கண்ணில் கண்டு கன்னிமேல் மையல் கொண்டு
அடைந்திடும் எண்ணத் தோடு அருகினில் சென்று பற்ற
கன்னியும் அதிர்ந்து நோக்கி அறிவிலா மூடா நீயும்
விரும்பிடாப் பெண்ணைத் தொட்டால் வெடித்திடும் தலைதான் என்றாள் 01

முற்காலத்தில் குசத்வஜர் என்ற முனிவர், இலக்குமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று திருமாலை நோக்கி தவமிருந்தார். அதன் காரணமாக இலட்சுமி வேதவதியாகப் பிறந்தார். இவ்வேதவதி தன் தந்தையின் ஆசைப்படி திருமாலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு காட்டில் தனிமையாகத் தவம் செய்து கொண்டிருந்தாள். ஒருநாள் இராவணன் தனது புஷ்பக விமானத்தில் ஆகாய வழியாக வந்து கொண்டிருந்த போது, வேதவதியைக் கண்ணில் கண்டு அவளிடம் மயங்கி, அவளை அடையும் நோக்கில் கையைப் பற்றி இழுக்க, தவம் களைந்த நிலையில் இராவணனைக் கண்டு அதிர்ந்து, அறிவிலாத மூடனே. நான் திருமாலை மணப்பதற்காக அவரை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கிறேன். நான் உன் ஆசைக்கு இனங்க மாட்டேன். நீ என்னைத் தொட்டதனால் நான் திருமாலுக்குத் தகுதியற்றவளாகி விட்டேன். இனி நான் உயிர்வாழ மாட்டேன். எந்தப் பெண்ணையும் அவள் விருப்பம் இல்லாமல் நீ தொட்டாலும் உன் தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபம் கொடுத்தாள்.

சாபமும் கொடுத்த தோடு மீண்டுமாய் அவத ரித்து
உன்னைநான் அழிப்பேன் என்று சூளுரை செய்து மாண்டாள்.
சாபமும் நினைவில் வைத்து அரசவை திரும்பி வந்தான்
காலமும் கடந்து செல்ல கற்பினள் வயிற்றில் வந்து
சாபமும் கொடுத்த நங்கை குழந்தையாய் அவத ரிக்க
பெற்றதை மறந்து விட்டு பெற்றதை மனதுள் எண்ணி
சோபுர நாதன் இல்லாள் வீட்டினில் பிறந்தாள் என்று
குழந்தையின் அழகைக் கண்டு இராவணன் மகிழ்ச்சி கொண்டான். 02

வேதவதி சாபம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நான் மீண்டும் இம்மண்ணில் பிறந்து வந்து உன்னை அழிப்பேன் என்று சபதமும் செய்து தீ மூட்டி இறந்து போனாள். இச்சாபத்தை நினைவில் வைத்துக்கொண்டு இராவணன் அரசவைக்குத் திரும்பி வந்தான். காலங்கள் உருண்டோடின. கற்பில் சிறந்தவனான மண்டோதரியும் கருவுற்றாள். இராவணனுக்குச் சாபம் கொடுத்த வேதவதி மண்டோதரியின் வயிற்றில் மகளாகப் பிறந்தாள். தான் முன்பு பெற்ற சாபத்தை மறந்த இராவணன், தான் பெற்ற இக்குழந்தை, சிவனின் இடப் பாகத்தில் உள்ள பார்வதியே தனக்கு மகளாகப் பிறந்தாள் என்று எண்ணி, குழந்தையின் அழகைக் கண்டு மகிழ்ந்தான்.

குழந்தைகள் பிறந்த தென்றால் சாதகம் கணித்தல் வேண்டும்
மகிழ்ச்சியில் ஆழ்ந்த மன்னன் எதிர்வரும் காலம் காண
குழந்தையின் குறிப்பு கொண்டு சாதகம் கணிக்கச் செய்தான்
சாதகம் ஆய்ந்து பார்த்த சோதிடர் விளம்ப லுற்றார்
குழந்தையின் பாதம் மண்ணில் பட்டது என்று சொன்னால்
அழிந்திடும் உன்தன் ஆவி நாட்டுடன் குடும்பம் என்றார்
குழந்தையின் பிறந்த நோக்கைச் சோதிடர் சொல்லக் கேட்டு
மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு அதிர்ச்சியில் உறைந்தார் இல்லேர் 03

தம் இல்லத்தில் குழந்தை பிறந்தால், அதற்குச் சாதகம் கணித்தல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனென்றால், குழந்தையின் பிறந்த பலனை வைத்துதான் அந்த குடும்பத்தில் எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை. இவ்வாறு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த இராவணன், குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள, அக்குழந்தையின் பிறந்தக் குறிப்புகளை வைத்து சாதகம் கணிக்க ஏற்பாடு செய்தான். குழந்தையின் பிறந்தக் குறிப்பை ஆராய்ந்த சோதிடர்கள், இக்குழந்தை வளர்ந்து அதன் கால்கள் இம்மண்ணில் பட்டால், நாடு, நகரம் மட்டுமன்றி அரசனாகிய தாங்களும் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அழிந்து விடுவீர்கள் என்று கூறினர். இவ்வாறு இக்குழந்தை எதற்காகப் பிறந்ததோ அதன் நோக்கத்தை அவர்கள் தெரிவித்தனர். இதனைக் கேட்ட இராவணனும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அழித்திடும் பிள்ளை நாமும் வளர்த்திட வேண்டாம் என்று
இராவணன் எண்ணி கொல்ல திட்டமும் தீட்டி நின்றான்
குழந்தையைக் கொன்றால் பாவம் சந்ததி இலாமல் போகும்
என்றுதன் மனைவி சொன்ன சொல்லையும் கேளா மன்னன்
இழிகுண மாமன் கையில் கொடுத்ததைக் கொல்லச் செய்தான்
இராவணன் வாய்ச்சொல் செய்வோன் அழகிய பேழை உள்ளே
குழந்தையை வைத்து மூடி அமைச்சனை அழைத்து ஏவி
நாட்டினை விட்டு தூக்கி எறிந்திட வேண்டும் என்றான் 04

நாட்டையும் நம்மையும் அழிக்கும் பிள்ளையை வளர்க்க வேண்டாம் என்று இராவணன் முடிவு செய்து அதனைக் கொல்லவும் திட்டமிட்டான். அவன் மனைவி மண்டோதரி குழந்தையைக் கொல்வது பாவம். அதுமட்டுமன்றி நமக்குச் சந்ததியே இல்லாமல் போய்பிடும் என்று அழுது புலம்பினாள். இதனைக் கேளாத இராவணன் கொல்லவேண்டும் என்ற நோக்கில், தான் எது சொன்னாலும் அதனைச் செய்து முடிக்கும் தன் மாமனான மாரீசனிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தான். மாரீசன் அமைச்சன் ஒருவனை அழைத்து, அக்குழந்தையை ஓர் அழகிய பெட்டியில் வைத்து, இந்நாட்டைவிட்டு வேறு எங்கேயாவது போட்டுவிட்டு வரும்படி ஆனையிட்டான்.

அமைச்சனும் எடுத்துச் சென்று ஜனகனின் யாக பூமி
உழுதிடும் தருனம் தன்னில் எடுத்ததாய் பேழை நீட்ட
அமைதியும் வியப்பும் சூழ ஆர்வமாய் திறந்த பார்க்க
குறுகுறு பார்வை யோடு இருந்திடும் குழந்தை கண்டார்
அம்புசி லட்ச னங்கள் முழுவதும் நிரம்பப் பெற்று
ஒளிர்ந்திடும் பொன்னின் மேனி புன்னகை முகமும் கண்டு
அமரரின் காய கல்பம் கிடைத்ததாய் இறைவன் வேண்டி
ஜனகனும் சுனைனா பெற்று பரிவுடன் வளர்க்க ளானார். 05

அமைச்சன் குழந்தை இருக்கும் பெட்டியை எடுத்துச் சென்று சனகர் தன் நாட்டில் பொன்னேர் பூட்டி உழுது கொண்டிருக்கும் நேரம் பார்த்து, அந்நிலத்தில் கிடைத்ததாய் பெட்டியைக் கொடுக்க, அமைதியோடும் வியப்போடும் ஆர்வத்தோடும் அப்பெட்டியை ஜனகனும் அவனது மனைவி சுனைனாவும் திறந்துபார்த்தனர். அதில் குறுகுறு பார்வை பார்த்தபடியே ஒரு குழந்தை இருந்தது கண்டு வியந்தனர். அக்குழந்தை இலட்சுமியின் சிறப்பு அம்சங்களை முழுவதுமாய்ப் பெற்று, பொன்னிறமாய் ஒளிவிடும் உடலும் சிரித்த முகமும் கண்டு, தேவாமிர்தமே தமக்குக் கிடைத்ததாக இறைவனை வேண்டிக்கொண்டு, பரிவுடன் வளர்த்து வந்தனர்.

பாலொடு அன்னம் நெய்யும் பருப்புடன் கலந்து தந்து
தேனுறும் சுவைகள் ஊட்டி ஊனொடு உயிராய் எண்ணி
வேலொடு நின்று காத்து துன்பமும் நேரா வண்ணம்
பொறுப்புடை பெற்றோர் போல குழந்தையை வளர்த்து வந்தார்.
நூலொடு நெய்த ஆடை பொலிவுற விளங்கற் போல
சனகனின் செல்லப் பிள்ளை சானகி பெயரைக் கொண்டு
மாலவன் இதய நங்கை மருவுரு கொண்டு வந்து
பூமியின் மகளாய் தோன்றி சிறப்புடன் வளர்ந்து வந்தாள். 06

பால், நெய், பருப்பு கலந்த சோறும் தேன் போன்ற சுவையுடைய உணவுகளும் ஊட்டினர். உடம்பில் உள்ள உயிராக நினைத்து, வேலைக் கையில் கொண்டு துன்பம் வராமல் காத்து நிற்கும் வீரன் போல, சீதைக்கு எவ்வித துன்பமும் நேராமல் பொறுப்புடைய பெற்றவர்கள் போல சிறப்புடன் வளர்த்தனர். தேர்ந்தெடுத்த நூல் கொண்டு நெய்த ஆடை அழகாய் விளங்குவதுபோல, சனகனின் மகளும் சானகி என்னும் பெயரில் திருமால் இதயத்தில் வாசம் கொள்ளும் லட்சுமி, வேறு உருவம் கொண்டு பூமிக்கு வந்து சிறப்புடன் வளர்ந்து வந்தாள்.

நீண்டநாள் பயிரில் லாத நிலத்திலே நட்ட கன்று
மண்ணிலே உள்ள சந்தை முழுவதும் தானே ஏற்று
வேண்டிய படிவ ளர்ந்து செழுமையாய் இருத்தல் போல
சீதையும் சனகன் வீட்டில் மகிழ்வுடன் வளர்ந்து வந்தாள்
நீண்டநாள் பிள்ளை யில்லோன் கருவிழி உள்ளே வைத்து
தன்தொழில் மறந்து பிள்ளை வளர்ப்பிலே கவனம் கொண்டு
தீண்டிடும் தென்றல் காற்றால் தேகமும் நோகா வண்ணம்
மண்மகள் தீண்டா பாதம் நெஞ்சிலே வைத்துக் காத்தார் 07

நீண்ட நாட்களாக பயிர் இடப்படாத நிலத்தில் நடப்பட்ட கன்று, அந்த நிலத்தில் உள்ள அனைத்து சத்துக்களையும் தானே முழுமையாகப் பெற்று, அதன் விருப்பப்படி வளர்வதுபோல, சனகன் வீட்டில் சானகி எவ்வித குறைகளும் இல்லாமல் சிறப்புடன் வளர்ந்து வந்தாள். நீண்ட நாள் பிள்ளை இல்லாத குறையில் இருந்த சனகருக்கு சானகி கிடைத்ததும் கண்ணின் கருவிழிபோல பாதுகாத்து, தன்னுடைய அரச பணிகளையும் மறந்து பிள்ளையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். சானகியின் உடலைத் தீண்டும் தென்றல் காற்றினாலும் உடம்பு நோகாமலும் பூமித்தாயும் தன் மகளின் பாதம் தீண்டா வகையிலும் தன் நெஞ்சில் வைத்து காத்து வந்தார்.

கால்வளை தண்டை யோடு கொலுசுகள் காலில் ஆட
மேகலை காஞ்சி எல்லாம் இடுப்பினை அணைத்து ஆட
மேலணி யாக கச்சை தாவணி அசைத்து ஆட
மோதிரம் அரும்பு வட்டப் பூவென விரலில் ஆட
தோல்வளை கடகம் காப்பு வளைவகை கையில் ஆட
கண்டிகை மிளகு மாலை ஆரமும் கழுத்தில் ஆட
ஓலைகள் விசிறி கொப்பு வல்லிகை காதில் ஆட
அரசிலை பதுமம் குஞ்சம் தலையினில் ஆட ஆடும் 08

சீதை, தளிர்நடையிட்டு ஓடி ஆடுகையில், கால்களில் உள்ள தண்டையும் கொலுசும் ஒளியெழுப்பி ஆடுகின்றன. மேலாடையாகக் கச்சையும் தாழ்வு அணியான தாவணியும் அணிய, அதனை இறுகப் பிடித்துக் கொள்ளும் அணிகளன்களான மேகலை, காஞ்சி இடையில் இருந்து ஆடுகின்றன. இவற்றோடு, கைவிரலில் அணிந்துள்ள மோதிரம், அரும்பு, வட்டப்பூவும் கைகளில் அணிந்துள்ள தோல்வளை, கடகம், காப்பு, வளையல் வகைகள் ஆகியனவும் கழுத்தில் அணிந்துள்ள, கண்டிகை, மிளகுமாலை, ஆரங்களும் காதுகளில் பலவகை ஓலைகள், விசிறி, கொப்பு, வல்லிகையும் தலையில் அணிந்துள்ள அரசிலை, பதுமம், குஞ்சமும் சேர்ந்து ஆடுகின்றன.

மூத்தவள் வந்த நேரம் சனகனின் நேச இல்லாள்
கருவினை தாங்கி பிள்ளை சிறப்புடன் பெற்றெ டுத்தாள்
ஆதவன் தந்த பிள்ளை அருந்தவப் புதல்வி என்று
வணங்கியே மகிழ்வு பொங்க ஊர்மிளா பெயரு மிட்டார்
பேதமி லாமல் பெற்றோர் இரண்டையும் இரண்டு கண்ணாய்
எண்ணியே வளர்த்து வந்தார் உடல்இணை உயிரைப் போல
பாதையும் பயணம் போல இருவரும் ஒருவ ராகி
யாவரும் போற்றும் வண்ணம் புகழுடன் வாழ்ந்து வந்தார் 09

மூத்த மகள் சானகி தனக்குக் கிடைத்த நேரத்தில் தன்னுடைய மனைவி சுனைனாவும் கருவுற்று, அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். விட்ணுவின் ஆசியினால் கிடைத்தற்கரிய இந்த பிள்ளை தனக்குப் பிறந்தது என்று அதற்கு ஊர்மிளை என்று பெயரும் இட்டனர். இரண்டு குழந்தைகளையும் இரண்டு கண்களாகக் கருதி பேதம் இல்லாமல் சிறப்புடன் வளர்த்து வந்தனர். இவ்விரு குழந்தைகளும் உடலோடு இணைந்த உயிரைப் போலவும் பாதையும் பயணமும் போலவும் இருவரும் ஒருவராய், நாட்டிலுள்ளோர் அனைவரும் புகழும்படியாகவும் போற்றும்படியாகவும் வளர்ந்து வந்தனர்.

தனுசினை தேவ நாதன் சனகரின் முன்னோ ருக்கு
தரவழி வழியாய் காத்து இறுதியில் சனகர் காத்தார்
சனகனின் மூத்த பிள்ளை தோழிக ளோடு பூவால்
செய்தபூப் பந்து ஆட பந்துருண் டோடி ஈசன்
தனுசுவின் கீழே செல்ல இடக்கையால் அதனைத் தூக்கி
வலக்கையால் எடுத்தாள் பந்தை இச்செயல் கண்டு றைந்த
சனகனார் பல்லோர் கூடி அசைத்திட அசையா வில்லை
எளிமையாய் தூக்கி னாளே வியப்புடன் மலைத்து நின்றார். 10

சிவன் தன்னுடைய வில்லை (தனுசு) இந்திரனுக்கு அளித்தார். இந்திரன் அதை, சனகரின் முன்னோருக்கு அளித்தார். இத்தனுசு வழிவழியாகப் பராமரிக்கப்பட்டு இறுதியில் சனகருக்கு அளிக்கப்பட்டது. சனகரும் அதனைப் பக்தியோடு தினமும் வழிபட்டு வந்தார். குழந்தையாக இருக்கும்போது ஒருநாள் சானகி, தன் தோழியரோடு பூவால் செய்த பந்தினைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். பந்து உருண்டோடி சிவ தனுசுவின் கீழ் சென்று மறைந்தது. இப்பந்தைத் தேடிச் சென்ற சீதை, வில்லின் கீழ் இருப்பதைக் கண்டு, தன்னடைய இடக்கையால் அதனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, வலக்கையால் பந்தினை எடுத்தாள். இதனைக் கண்ட தந்தை சனகர் மலைத்துப் போனார்.

தனுசுவின் வலிமை கண்டு மகளது செயலைக் கொண்டு
பலமிகு நங்கைக் கேற்ற நாயகன் எளிதோ? தேடல்
தனுசுவைத் தூக்கி நாணை ஏற்றிடும் வீர னுக்கே
தன்மகள் மணமு டித்து கொடுத்திட வேண்டு மென்று
சனகனார் திட்டம் தீட்டி குழம்பியே இருந்த நேரம்
தாடகை மாய்த்துக் காக்க வேள்வியை முடித்த பின்னர்
முனிவரின் அழைப்பை ஏற்று காடுகள் பலக டந்து
கவின்மிகு மிதிலை நோக்கி பணிவுடன் நடந்து வந்தார். 11

பத்தாயிரம் வீரர்கள் கூடி நகர்த்த முடியாத தனுசை, தன் மகள் ஒற்றைக் கையால் அதுவும் இடக்கையால் தூக்கிவிட்டாளே என்று வியந்து, இத்தகைய வலிமை மிக்க என் மகளுக்கு இவளைவிட வலிமை மிக்க ஒரு வீரனை எங்கே சென்று தேடுவேன் என்று குழப்பத்தில் ஆழ்ந்தார் சனகர். இந்தச் சிவ தனுசை தூக்கி நிறுத்தி நாணேற்றுவோருக்கே என்மகளை மணம் முடித்து கொடுக்கவேண்டும் என்ற துணிவு கொண்டார். அச்சமயம் இராமர், தாடகை வதம் செய்து விசுவாமித்திரர் யாகத்தைக் காத்து முடித்த பின்னர், முனிவரின் அழைப்பை ஏற்று அவர் பின்னே பணிவுடன் கடுமையான காடுகள் பல கடந்து அழகிய மிதிலை நகரம் வந்தார்.

பால்கனி மேலே நின்று தோழிய ரோடு ஆட
வீசிய பந்து சென்று மாளிகை தாண்டி வீழ
மாலவன் தோள்மேல் பட்டு தரையினில் விழுந்து ஓட
பந்தினைக் கையில் கொண்டு மாளிகை நோக்கி காண
பால்கனி தாண்டி சென்ற திசையினை சீதை நோக்க
இருவரின் பார்வை அம்பு ஒருவரை ஒருவர் தாக்க
மாலவன் சீதை கண்கள் வலிமையாய்ப் பற்றிக் கொள்ள
கத்தியும் இரத்த மின்றி இருதயம் மாற லாட்சி 12

சீதை, மாளிகையின் பால்கனியில் தன் தோழிகளோடு பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தாள். பந்தை ஓங்கி அடிக்க, அது மாளிகை தாண்டி கீழே நடந்து வந்துக் கொண்டிருந்த இராமன் தோள்மீதுபட்டு தரையில் விழுந்து ஓடியது. இராமன் அப்பூப்பந்தைத் தன் கையில் எடுத்து, பந்து வந்த திசை நோக்கிப் பார்த்தார். பால்கனியைத் தாண்டி விழுந்த பந்தைக் காண சீதை கீழ்நோக்கிப் பார்த்தாள். இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இராமன், சீதை ஆகியோரின் பார்வைகள் ஒன்றையொன்று பற்றிக் கொள்ள கத்தியும் இரத்தமும் இல்லாமல் இருதயங்கள் இடம் மாறின.

ஒருநொடி பார்வை யாலே பிறவிகள் கொண்ட பந்தம்
மறுநொடி வந்து சேர்ந்து பிணைத்தது உள்ளம் ரெண்டை
இருவரும் ஒன்றாய் ஆன உணர்வுடன் கடந்து சென்றார்.
சனகனின் முன்பாய் சென்று ராமனின் பெருமை கூற
திருமகன் இவனே எந்தன் மருமகன் ஆக வேண்டும்
நினைப்பினை நெஞ்சில் வைத்து தனுசுவின் விவரம் சொன்னார்
அரசனின் குறிப்பு ணர்ந்து முனிவரும் ஆசி தந்து
வில்லினில் நாணை ஏற்றி முறித்திட பெருமை கொண்டார். 13

இராமனும் சீதையும் பார்த்த அந்த ஒருநொடிப் பொழுதிலேயே, பல பிறவிகளில் இவர்கள் கொண்ட பந்தம் இருவரையும் இணைத்தது. இருவரும் ஒருவராய் ஆன உணர்வுடன் இருவரும் கடந்து சென்றனர். சனகரின் முன்பாக அழைத்து வந்து, இராமரின் பெருமைகளை விசுவாமித்திரர் கூறினார். இப்பெருமைகள் அனைத்தையும் கேட்டறிந்த சனகர், இராமரே தன் மருமகளாக வரவேண்டும் என்ற நினைப்பை நெஞ்சில் வைத்து, சிவதனுசுவின் விவரம் கூறினார். சனகரின் குறிப்பினை உணர்ந்த முனிவர், இராமனுக்கு ஆசிகள் வழங்கி சுயம்வரத்தில் வில்லினில் நாண் ஏற்றுமாறு ஆணையிட்டார். இராமரும் தனுசினை தூக்கி நிறுத்தி நாணேற்றி வெற்றி பெற்றார்.

சனகனின் அழைப்பை ஏற்று தசரதன் வந்து மைந்தர்
நால்வரின் திரும ணத்தை நடத்தியே அழைத்துச் சென்றார்
முன்னொரு சென்மம் வேண்டி கிடைத்ததன் பயனால் இன்று
கண்ணனே கணவ னாக பெற்றனள் சீதை நன்று
தன்கடன் முடிப்ப தற்கு நேரமும் பார்த்தி ருந்தாள்
தசரதன் மைந்த னுக்கு மணிமுடி சூட எண்ணி
தினங்களைக் குறித்து சொல்ல மந்தரை சூழ்ச்சி யாலே
காணகம் செல்ல ராமன் காவியும் அணிந்து நின்றான் 14

சனகர், இராமன் வெற்றிச் செய்தியைத் தசரதனுக்குச் சொல்லி அனுப்பினார். சனகரின் அழைப்பை ஏற்று வந்த தசரதன், இரானுக்கு சீதை, இலக்குவணனுக்கு ஊர்மிளா, பரதனுக்கு மாண்டவி, சத்துருக்கணனுக்கு சுருதகீர்த்தி எனத் தன் நான்கு மகன்களுக்கும் சனகர் அவரது சகோதரர் ஆகியோரின் மகள்களைத் திருமணம் முடித்து அயோத்திக்கு அழைத்துச் சென்றார். சீதை முற்பிறவியில் வேதவதியாய் பிறந்து, பிரம்மரை நோக்கி தவமிருந்து திருமாலே தனக்குக் கணவனாக அமைய வேண்டும் என வரம் கேட்க, அதற்குப் பிரம்மர் அடுத்தப் பிறவியில் இது நடக்கும் என வரம் கொடுத்தார். அதன் பயனாகவே இன்று இராமனைக் கரம்பிடித்தாள் சீதை. எனினும் வேதவதியாய் இருந்து இராவணனுக்கு அளித்த சாபத்தை நிறைவேற்றுவதற்கான காலமும் நேரமும் பார்த்திருந்தாள். முடிசூட்டி ஆட்சிப் பொறுப்பை இராமனுக்கு அளிக்கவேண்டும் என நினைத்து அதற்கான நாளைக் குறித்து நாட்டு மக்களுக்கு அறிவித்தார் தசரதன். இதனைக் கேட்ட மந்தரையான கூனி, கைகேயின் மனதை மாற்றினாள். அதன் காரணமாக, இராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தசரதனிடன் அடம்பிடித்தாள். இதனைக் கேட்டறிந்த இராமர் காடு செல்வதற்கு காவி உடையணிந்து ஆயத்தமானார்.

வனம்புகும் நேரம் பார்த்து சானகி அருகே வந்து
ஆடினோம் ஒன்றாய் சேர்ந்து பருகினோம் ஒன்றாய் நீரை
உன்மனை வந்த பின்னே ருதுவென நானும் ஆனேன்
இருவரும் ஒன்றாய் ஆனோம் விட்டுநீ பிரிதல் நன்றோ?
உன்னுடன் வருவேன் நானும் பணிவிடை செய்வேன் நாளும்
என்றவள் அடம்பி டித்து வேண்டுதல் பணித்து நின்றாள்
மன்னவன் மனைவி யோடு சோதரன் துணையாய் ஏற்று
வில்லினைக் கரத்தில் தாங்கி விதிவழி நடந்து சென்றான். 15

இராமன் காவி உடை அணிந்து காட்டிற்குச் செல்ல தயாரானபோது, சீதை இராமன் அருகில் வந்து, நான் உன்னை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டு வந்தேன். நாம் இருவரும் ஒன்றாகவே விளையாடினோம். ஒரே பாத்திரத்தில் நீர் அருந்தினோம். உன்னைத் திருமணம் செய்து வந்த பிறகுதான் நான் வயதுக்கு வந்தேன். இப்படி நாம் இருவரும் ஒருவராய் மாறிவிட்ட நிலையில் என்னை அயோத்தியில் விட்டு விட்டு நீமட்டும் காட்டிற்குச் செய்லவது நியாயமா? என பலவாராகக் கூறி, நீ இருக்கும் இடம்தான் எனக்கு அயோத்தி. உன்னுடன் நானும்தான் வருவேன். உனக்குத் தேவையான பணி விடைகளை நாளும் செய்வேன் என்று அடம்பிடித்தாள். அதன் பிறகு, இராமன் தன் மனைவி சீதையுடன் கையில் வில் ஏந்தின், இலக்குவணன் துணையோடு விதிவிட்ட வழியில் காட்டிற்குச் சென்றார்.

குகனது அன்பைப் பெற்று கங்கையின் கரையைத் தாண்டி
அழகிய வனத்தில் சின்ன குடிசையும் அமைத்துக் கொண்டு
சகோதரன் காவல் காக்க இனிதவர் கழித்து வந்தார்.
அரக்கனின் அன்புத் தங்கை சூர்ப்பனா அங்கு வந்து
முகுந்தனின் அழகில் சொக்கி மணந்திட வேண்டி நின்றாள்.
மறுத்திட கோபம் கொண்டு சீதையை தாக்கச் சென்றாள்.
சகோதரன் அண்ணி காக்க எண்ணியே கத்தி வீசிட
அரக்கியின் மூக்க றுத்து கத்தியும் வீழ்ந்த தங்கே 16

வேடனான குகனின் அன்பைப் பெற்று, அவன் படகில் ஏறி கங்கைக் கரையைக் கடந்து சென்றனர். பஞ்சவடி என்ற அழகிய இடத்தில் ஜடாயுவின் உதவுயோடு சிறிய குடிசை அமைத்து, சகோதரன் இலக்குவணன் காவல் காக்க இனிதாய் பொழுதைக் கழித்தனர். ஒருநாள் அரக்கன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை அங்கு வந்து இராமனைக் கண்டு அவனது அழகில் மயங்கி தன்னைத் திருமனம் செய்து கொள்ளும்படி வேண்டினாள். இராமன், நான் திருமணம் ஆனவன் உன்னை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுத்துக் கூற, அங்கிருக்கும் சீதையைக் கண்டு இவ்வளவு அழகு மிக்க பெண் இருக்க என்னை எப்படி இவன் திருமணம் செய்து கொள்வான். இவளை அழித்து விட்டாள் என்னை திருமணம் செய்து கொள்வான் அல்லவா? என்று நினைத்து, சீதையைத் தாக்க முயன்றாள். அந்த நேரம் தன் சகோதரனின் இல்லாளைக் காக்க எண்ணிய இலக்குவணன், தன் கையில் உள்ள கத்தியை அரக்கியை நோக்கி வீச, அது அவள் மூக்கை அறுத்து எறிந்தது.

அழுதவள் அண்ணன் நோக்கி நடந்ததைக் கூறி நின்று
அழகிலே மிக்க சீதை கவர்ந்திட வேண்டு மென்றாள்.
அழிவவன் அறிந்தி டாமல் அவளது சொல்லைக் கேட்டு
பெண்மகள் கடத்த திட்டம் வகுத்தனன் பொய்மா னோடு
வழிமுறை யாவும் தேர்ந்த வனமகள் மானைக் கேட்டு
கணவனை அனுப்பி பின்னர் மைத்துனன் அனுப்பி வைத்தாள்.
அழிக்கநான் பிறப்பே னென்று மொழிந்ததை நினைவு கூர்ந்து
இராவணன் கவரச் சென்று அவன்வர வேண்டி நின்றாள் 17

மூக்கு அறுபட்ட நிலையில் சூர்ப்பனகை தன் அண்ணனான இராவணனனிடம் சென்று, பஞ்சவடியில் நடந்த அனைத்தையும் சொன்னாள். மேலும், சீதையின் அழகை விவரித்து அவளைக் கவர்ந்து வரும்படியும் திட்டம் தீட்டிக் கொடுத்தாள். தன்னை அழிக்கும் ஒரு சக்தி காட்டில் வந்து குடிசை போட்டு காத்துக் கொண்டிருக்கிறது என்று அறியாத இராவணன், தன் தங்கையின் சொல்லைக் கோட்டு, சீதையைக் கடத்தத் திட்டம் தீட்டி, மாரீசனைப் பொய்மானாய் அங்குச் செல்லும்படி ஆணையிட்டான். அங்கு வந்திருப்பது இராவணன், அவனை அழிக்கத்தான் கணவனோடு கானகம் வந்துள்ளோம். இவன் வழியாகத்தான் இலங்கை சென்று தன் கணவன் துணையோடு இராவணனை அழிக்க முடியும் என்று திட்டமிட்டு, அந்த மான் வேண்டும் என்று முதலில் தன் கணவனையும் பிறகு தன் மைத்துணனையும் அனுப்பி வைத்து, இராவணன் கவர்ந்து செல்ல அவனுடன் சென்று தன் கணவனுக்காக இலங்கையில் காத்திருந்தாள்.

வந்தது பொய்மான் என்று அறிந்தபின் குடிலை நோக்கி
வந்தவர் காணா தெங்கும் கூக்குரல் இட்டு தேட
முந்தைய பட்சி நாதன் நடந்ததை எடுத்துச் சொல்ல
குறிப்புகள் நோக்கி நள்ளாள் தடத்தினில் பெயர்ந்து சென்றார்.
சிந்தையில் மூழ்கி சென்ற இருவரைப் பிடித்து உண்ண
எண்ணிய கபந்தன் மாய்த்து அவனது கூற்றின் பேரில்
மந்தியின் தலைவன் தங்கி இருந்திடும் மலைக்கு வந்தார்.
இருவரும் உதவி வேண்ட இருவரும் ஒப்புக் கொண்டார். 18

அங்கு வந்தது பொய்மான் என்று அறிந்த பின்னர் இராமன், இலக்குவணன் ஆகிய இருவரும் குடிலை நோக்கி விரைந்து வந்தனர். அங்கு சீதை இல்லாதது கண்டு எல்லா இடங்களிலும் கூக்குரல் இட்டுத் தேடினர். அவ்வாறு தேடிக் கொண்டு காட்டின் வழியில் செல்லும் போது, முன்பு குடிசைப் போட்டுக் கொண்டு இங்கு தங்குங்கள் என்று கூறிய பட்சிகளின் அரசன் சடாயூ, இராவணன் சீதை கவர்ந்து சென்றதையும் தான் அவனோடு போரிட்டு ஒரு சிறகினை இழந்ததையும் சொன்னார். பிறகு தன் மனைவி அடையாளத்திற்காகத் தன் ஆபரணங்களைக் கழட்டிப் போட்டுச் சென்ற வழித் தடத்தில் இருவரும் சென்றனர். சீதையின் மீது சிந்தனையை வைத்து, அக்காட்டில் நடந்து சென்ற இராம, இலக்குவணர்களை பிடித்து உண்ண, தலையும் கழுத்தும் கால்கள் அற்ற, மார்பில் ஒற்றைக் கண்ணும் வறிற்றில் அகண்ட வாயும் கொண்ட கபந்தன் என்னும் ஓர் அரக்கன் முயன்றான். இராம, இலக்குவணர் இருவரும் அவனுக்கு மோட்சம் கொடுத்து, அவனது ஆலோசனையின் பேரில், தன் அண்ணனுக்குப் பயந்து வாழ்ந்துவரும் குரங்குகளின் அரசனான சுக்கீரிவன் இருக்குமிடம் சென்று, உதவி கேட்டனர். அதற்கு சில நிபந்தனைகளோடு ஒப்புக் கொண்டார் சுக்கீரிவன்.

நாட்டினில் மகுடம் சூடி அரியணை ஏற்ற பின்னர்
ஒப்புதல் செய்தற் கேற்ப இராமனின் இல்லாள் சீதை
தேடிட படைகள் அனுப்ப இலங்கையில் இருக்கக் கேட்டு
அனுமனை அனுப்பி தூதாய் அறிந்திட செய்தார் அங்கே
ஆடிடும் கடல்நீர் தாண்டி இலங்கையை அடைந்து அன்னை
அரக்கியர் நடுவே கண்ணீர் பெருகிட இருக்கக் கண்டார்
தேடிய செல்வம் கண்ணில் கிடைத்தபின் மகிழ்ச்சி பொங்க
அருகினில் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். 19

இராமர் சுக்கீரிவரிடம் சீதையைத் தேட உதவி கேட்க, சுக்கீரிவன் அண்ணனான வாலியைக் கொன்று நாட்டையும் மனைவியையும் மீட்டுத் தந்தால் சீதையைத் தேட உதவுவதாக ஒப்புக் கொண்டார். அவர் ஒப்புக் கொண்டதுபோல் இராமர் செயல்முடித்து சுக்கீரிவனுக்கு முடிசூட்டி அரியணை ஏற்றினார். அதன் பிறகு சுக்கீரீவன் தன் அமைச்சர்களான சாம்பவான், அனுமன் ஆகியோரை அனுப்பி எல்லா இடங்களிலும் தேடினார். சீதை இலங்கையில் இருப்பதை அறிந்து, உண்மை நிலவரம் கண்டுவர எண்ணி, அனுமானை தூதாய் அனுப்பினார். அவ்வாறே அனுமான் கடலைத் தாண்டி இலங்கைச் சென்று, அரக்கியர் நடுவே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் அன்னையை அடையாளம் கண்டு, தேடிய செல்வம் கண்ணில் கண்ட மகிழ்ச்சி கொண்டு, சீதையின் அருகில் சென்று தான் யார் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

அரக்கரின் பிடியில் உள்ள அன்னையைக் காக்க எண்ணி
தன்னுடன் வருக என்று வேண்டிய படியே நின்றார்.
இராவணன் இறப்பைக் காண பிறவியைக் கொண்டேன் மைந்தா
கற்பினால் அவனை அன்றே அழித்தெனைக் காத்தி ருப்பேன்
இராமனால் மாய வேண்டும் என்பதே எந்தன் ஆசை
விரும்பிடா பெண்ணைத் தொட்டால் அழிவதால் ஒன்றும் செய்யான்
விரைந்துநீ சென்று அங்கே ஆறுதல் சொல்ல வேண்டும்
போரினால் வென்று என்னை மீட்டிட சொல்ல வேண்டும். 20

அரக்கியர் பிடியில் இருக்கும் சீதையைக் காக்க நினைத்து, தன்னுடன் வருமாறு வேண்டி நின்றார். மகனே, இராவணனின் இறப்பைக் காணவே இப்பிறவி கொண்டேன். என் கற்வினால் அவனை அழித்திருக்க முடியும். ஆனால் என் துணைவனால் அவன் மாயவேண்டும் என்பதே என் ஆசை. அதற்காகவே நான் காத்திருக்கிறேன். விரும்பிடாத பெண்ணைத் தொட்டால் அழிவது உறுதி. ஆகவே அவன் என்னை ஏதும் செய்ய மாட்டான். விரைந்து அங்கே என்னவருக்கு சென்று ஆறுதல் சொல்ல வேண்டும். போரில் அவனை வென்று என்னை மீட்டுச் செல்லும்படி கூறுவாய் என்றாள்.

அன்னையின் சொல்லைக் கேட்டு அடுத்ததாய் தந்தை நோக்கி
கண்டனன் கண்ணால் என்றே கற்பினள் நிலையைச் சொன்னார்
மனைவியின் பரிசை ஏற்று அவளது துயரைத் தீர்ப்பேன்
சூளுரை கொண்டெ ழுந்தார் விபீடனன் அங்கே வந்து
அன்னவம் உதவி யோடு அணைகளைக் கட்டி அங்கு
செல்லலாம் என்று ரைக்க சாகரா வணங்கி நின்றார்
அனுமதி தந்த தோடு நளனது பேரைச் சொல்லி
அவனொரு கட்டு மானன் கட்டிடு அவனால் என்றார். 21

அன்னை சீதையின் சொல்லைக் கேட்டு, தந்தையிடம் சென்று சென்று, கண்ணால் கண்ட தகவல்களை அனுமன் சொன்னார். ராமர், மனைவி தந்தனுப்பிய பரிசினை ஏற்று, இராவணன் என் வில்லால் மாய்வான் எனச் சபதம் செய்தார். அதே நேரத்தில் இராவணன் தம்பி விபீடனன் அங்கு வந்து தஞ்சம் அடைந்து, இலங்கை செல்ல வேண்டும் என்றால் கடலரசன் உதவியோடு அணைகட்டி அங்கு செல்ல வேண்டும் என்று கூறினான். அதன்படி இராமர் கடலரசனை வணங்கி, அணைகட்ட அனுமதி தருமாறு வேண்டி நின்றார். கடலரசன் அனுமதி தந்ததோடு உங்கள் வானரக் கூட்டத்தில் நளன் என்போன் நல்ல திறமை வாய்ந்த பொறியாளன். அவனைக் கொண்டு அணைக் கட்டிக்கொள் என்றான்.

வானர கூட்டம் எல்லாம் ராமரின் பெயரைக் கல்லில்
பொறித்ததைக் கடலில் இட்டார் கரடியும் குதிரை யானை
அனிலொடு பிறவும் தன்னால் இயன்றது செய்து பாலம்
அமைத்தன வீரர் யாவும் அதன்வழி இலங்கை சென்றார்
இனியவன் மீண்டும் தூது அனுப்பினான் ஏற்க வில்லை
இராமனின் ஏவற் காக யாவரும் காத்தி ருந்தார்
அனுமனும் நளனும் நீலன் சாம்பவான் முதலாய் பல்லோர்
தலைமையில் வீரர் நிற்க படையினை முடுக்கி விட்டார் 22

இச்செய்தியைக் கேட்ட உடன் வானரக் கூட்டம் எல்லாம் கல்லில் இராமரின் பெயரை எழுதி கடலில் இட்டனர். அவ்வணைக் கட்டுவதற்கு கரடி, குதிரை, யானை, அனில் என அனைத்தும் தன்னால் இயன்ற வேலைகளைச் செய்தன. பாலம் கட்டி முடித்தபின் வீரர்கள் அனைவரும் அதன் வழியே இலங்கை நகர் அடைந்தனர். இராமர் மீட்டும் சீதையை விட்டு விடும்படி தூது அனுப்பினார். இராவணன் ஏற்கவில்லை. போர் செய்ய இராமரின் கட்டளைக்காக வீரர்கள் அனைவரும் காத்திருந்தனர். அனுமன், நளன், நீலன், சாம்பவான் முதலானோர் தலைமையில் பல்லாயிரக் கணக்கான வானர வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து தயார் நிலையில் இருந்தனர்.

போர்க்களம் தன்னில் வீரர் போரிட எத்த னிக்க
தளபதி ஏவல் ஏற்று இருபடை மோதல் கொண்டார்
வீரரின் பேரி ரைச்சல் விண்ணகம் அதிரக் கண்டார்
வானரக் கூட்டத் தோடு மானிடர் மோதித் தோற்றார்
பாரினை ஆளும் வேந்தன் இராமனின் அம்பு பட்டு
மணிமுடி துறந்து நின்றான் நாளைவா பணிக்கச் சென்றான்
தேரிலே வந்த வீரன் தெருவொடு போனாற் போல
கடன்கொடுத் தார்நெஞ் சம்போல் கலங்கியே சென்றான் வேந்தன் 23

போர் வீரர்கள் ஆராவாரம் செய்து கொண்டு தயார் நிலையில் இருக்க, தளபதியின் கட்டளை ஏற்று இருபெரும் படைகளும் மோதிக்கொண்டன. போர் வீரர்களின் சத்தம் வானுலகைத் தாண்டி சென்று அதிர்ந்தது. வானரக் கூட்டத்தோடு மனிதக் கூட்டம் மோதி தோற்றுப் போயினர். இராமரின் அம்பு பட்டு, இராவணன் தலைக்கவசம் கீழே விழுந்தது. ஆயுதங்கள் இன்றி இருந்த இராவணனை இராமர் இன்று போய் நாளை ஆயுதங்களுடன் வா என்று திருப்பி அனுப்பினார். தேரில் வந்த இராவணன் கால்நடையாய், கடன் கொடுத்தவர் நெஞ்சம் போல கலங்கியே கோட்டை நோக்கி சென்றான்.

ஒருத்தியின் சாபம் காக்க விலங்கொடு பறவை மக்கள்
எனப்பலர் கைவேல் கொண்டு போர்க்களம் நேரில் கண்டு
இராவணன் மக்கள் ஏழு பேரையும் எதிர்த்து கொன்றார்
இராமனால் கும்ப கர்ணன் இராவனண் மாய்ந்து போனார்
வரம்தரும் சொர்க்க பூமி வான்தொடும் மாடம் கூடம்
பொன்னிழை இட்டு செய்த வியத்தகு சாள ரங்கள்
வரப்பிலா மரங்கள் குன்று எனபல நிறைந்த நாடு
அனைத்துமே அழிந்து போச்சி திறமெலாம் குறைய லாட்சி 24

சீதையின் சாபம் பலித்திட வேண்டும் என்பதற்காக வானரங்கள், சாம்பவான், சடாயூ, வீரர்கள் என பலதரப்பட்டவரும் கையில் வேல் கொண்டு போர்களம் சென்று போரிட்டனர். இப்போரில் இராவணனின் குமார்களான, மேகநாதன், அதிகாயன் ஆகியோர் இலடசுமணனாலும், திரிசிரன், அக்ஷயகுமாரன் அனுமனாலும் நராந்தகன், தேவாந்தகன் அங்கதனாலும் பிரஹஸ்தன் நீளனாலும் கொல்லப்பட்டனர். இராவணன், கும்பகர்ணன் ஆகியோர் இராமரால் கொல்லப்பட்டனர். வானைத் தொடும் அளவு உளர்ந்த மாட மாளிகைகள், பொன் இழைத்து செய்யப்பட்ட வியப்பூட்டும் சாளரங்கள், எல்லை இல்லாத மர வகைகள், அழகிய குன்றுகள் பச்சை நிறைந்த கேட்ட வரம் தரும் வயல்வெளிகளைக் கொண்ட சொர்க்க பூமியான இலங்கை இப்போரினால் அழிந்து போனது. அதன் வளம் எல்லாம் குன்றிப் போனது.

பெண்ணவள் கற்புத் தீயில் யாவையும் அழிந்த தின்று
மாயவன் அம்பு மங்கை சூளுரை முடித்து வைக்கும்
பெண்ணினால் முடியா போதும் இறையருள் துணையாய் கொண்டு
உரியவ ரோடு அந்த நீதியைக் காத்து நிற்கும்
பெண்மகள் விருப்பம் இன்றி அடைந்திடும் எண்ணத் தோடு
உடல்மணம் நோகும் வண்ணம் செயலினைச் செய்தி டாதீர்
கண்டவர் வியக்கும் வண்ணம் கற்பெனும் ஆயு தங்கள்
உன்னொடு சுற்றம் யாவும் அழிவது திண்ண மிங்கே 25

சீதையின் கற்புத் தீயானது இலங்கையில் உள்ள அனைத்தையும் அழித்தது. இராமரின் அம்பானது, சீதை வேதவதியாய் இருந்து உன்னை மாய்ப்பேன் என்ற சாபத்தை முடித்து வைத்தது. யாரைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவமிருந்தாளோ? அவராலேயே இன்று நீதி காக்கப்பட்டது. ஆண்களே, பெண் விருப்பம் இல்லாமல் அவளை அடைந்திட நினைக்காதீர். அவள் மனதையும் உடலையும் நோகடிக்கும் செயலைச் செய்யாதீர். அவ்வாறு செய்தால், உலகமே வியக்கும் வண்ணம் அவளது கற்பு என்னும் ஆயுதம் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் அழிப்பது உறுதி.

போரினை முடித்து வைத்து நாட்டையும் சீர்ப டுத்தி
தன்னையே சரண டைந்த நல்லவன் ஆள தந்தார்
போரிலே பக்கம் நின்ற தம்மவர் அன்பு காட்டி
அவரவர் நாடு சென்று ஆண்டிட பணித்து நின்றார்
சீர்வளர் சிறப்பு மிக்க துணையவள் மீட்டு வந்து
பரதனால் காத்த நாட்டை மணிமுடி சூடி ஏற்றார்
காரிகை பிறந்த நோக்கம் இனிதுடன் முடித்த பின்னர்
சுற்றமும் சூழ நாடு சென்றவள் அரசி யானாள். 26

இராமர், இராவணனுடனானப் போர் முடிந்தபின், இலங்கையை சீர்படுத்தி, தன்னை சரணடைந்த விபீடனனை நாடாளச் செய்தார். போரில் தனக்குப் பக்க துணையாய் இருந்து வெற்றிபெறச் செய்த தோழர்களுக்கு அன்பு காட்டி, அவரவர் நாடு சென்று ஆண்டிடப் பணித்தார். பெருமை மிக்க தன்னுடைய துணையான சீதையை மீட்டு வந்து, பரதனால் காத்து வந்த நாட்டில் முடிசூடி அரசப் பதவியை ஏற்றார். சீதையும் தான் பிறந்த இப்பிறவியின் நோக்கம் இனிதுடன் முடிந்த பின்னர், சுற்றம் சூழ தன் கணவரோடு அயோத்தி வந்து அரசியாகப் பட்டமேற்றாள்.

மண்ணிலே நம்மை வெல்வோர் இருந்திட மாட்டார் என்று
ஆணவம் கொண்டே உங்கள் செய்கைகள் செய்ய வேண்டாம்
மண்ணையே ஆளும் செல்வம் உன்னுடன் இருந்த போதும்
மதியிலா செய்கை செய்து உன்புகழ் மாய்க்க வேண்டாம்
பெண்ணெனின் மென்மை என்றும் வலிமைகள் இல்லை என்றும்
ஆண்மகன் என்ற நோக்கில் அழிவுகள் தேட வேண்டாம்
பெண்ணென மண்ணில் வந்து நம்முடன் வாழ்வோர் எல்லாம்
அன்னையாய் தோழி தங்கை மகளென எண்ணி வாழ்வீர் 27

இந்த நில உலகில் நம்மை வெல்ல யாரும் இல்லை என்று ஆணவம் கொண்டு உங்கள் செயல்களைச் செய்ய வேண்டாம். உலகையே ஆளும் அதிகாரமும் செல்வமும் இருந்தாலும் அறிவில்லாத செயல்களைச் செய்து உங்கள் புகழை அழித்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் மென்மையானவர்கள் என்றும் அவர்களுக்கு போதிய வலிமை இல்லை என்றும் தாம் ஆண் என்ற எண்ணத்திலும் உங்கள் அழிவை நீங்களேத் தேடிக்கொள்ள வேண்டாம். பெண்ணாய் பிறந்து நம்முடன் வாழ்வோரை, அன்னையாக, தோழியாக, தங்கையாக, மகளாக நினைத்து வாழுங்கள்.

#வேதவதி_தாரகை_மாலை
#இரட்டணை_நாராயணகவி