Wednesday, May 15, 2024

வெற்றியின் ரகசியம்

அன்பும் அருளும் உடையவர் நெஞ்சம்
இன்பம் விளையும் தோட்டம் அங்கு
தென்றல் விளையாடி புன்னகைபூ பூக்குமே. 01

கடமையைச் செய்பவன் கடவுளின் மருஉரு
திடம்பட செய்திட வேண்டும் அதனால்
கிடைத்திடும் மதிப்புகள் உயர்த்திடும் உனையே 02

சரித்திரம் படைப்பவர் இறந்துமே வாழ்கிறார்
துறைஎது வாகினும் புதுமைகள் படைத்திடு
திறமையை உலகினர் அறிந்திட செயல்படு. 03

தன்னைத் தாழ்த்தி பிறரை உயர்த்துவோன்
விண்ணைத் தொட்ட புகழினை எய்துவான்
எண்ணிய தெல்லாம் பெற்றிடு வானே 04

நல்லவர் வழியினில் நடப்பது சிறப்பு
நல்லவர் அறிவும் சிந்தையும் இருந்தால்
எல்லாப் புகழும் கைவச மாகுமே 05

பண்பெனப் படுவது மற்றவர் மதித்தல்
உண்மையும் உழைப்பும் பொதுநலப் பேக்கும்
இருந்தால் போதும் பெரியவர் மதிப்பர். 06

மரங்கள் நாட்டின் வளங்கள் அந்த
மரங்களை வளர்க்கணும் நமது கரங்கள்
ஒருமர மேணும் நட்டு வளர்த்திடு. 07

வரப்பினை நீர்நிறைத்தால் நாட்டினை அதுஉயர்த்தும்
வரப்புகள் இலாப்போய் விடின்உண வில்லை
வரப்பொடு உறவாடு உணவுக்கு வழிதேடு 08