Saturday, May 25, 2024

திரௌபதியம்மன் திருநயனப்பத்து

கண்டவர் மயங்கும் சுடர்விழிகள்
          மானென மருண்டு எத்திசையும்
வண்டெனப் பறந்து தான்விரும்பும்
          அந்தனன் கண்டு மயங்கியதே
புண்ணியம் செய்த காரணத்தால்
          பார்த்தனே வென்று மாலையிட்டான் 
எண்ணிய கணவன் கிடைத்ததினால்
          எண்ணிலா மகிழ்ச்சி பொங்கியதே 01

காண்பவரை மயங்கும் ஒளிவீசும் ஆற்றலுடைய திரௌபதியின் கண்கள், மான்போல மருண்டு, வண்டுபோல எல்லாதிசைகளிலும் சென்று, தான் விரும்பும் அந்தன வடிவில் வந்த அர்ச்சுனனைக் கண்டு மயக்கம் கொண்டன. திரௌபதி முன் சென்மத்தில் செய்த புண்ணியத்தின் காரணமாகவே அர்ச்சுனன் போட்டியில் வென்று மணமாலை சூடினான். தான் நினைத்தவனே தனக்குக் கணவனாக அமைந்ததால் அவள் உள்ளத்தில் என்னற்ற மகிழ்ச்சி  பொங்கியது.

நெருப்பினில் மலர்ந்த புதுமலராய்
          தனித்துவ மாகப் பிறந்தவளாம்
துருபதன் ஏகக் குமாரத்தி
          துய்மனின் அன்புச் சகோதரிநம்
உரத்தினில் வாழும் திரௌபதியின்
          அருள்தரும் கடைக்கண் பார்வைபட்டால்
திருவுடன் கல்வி மதிப்புஎன
          அனைத்துமே நமக்குக் கிடைத்திடுமே 02

யசர், உபயாசர் செய்த யாக நெருப்பில் இருந்து பருவப் பெண்ணாகத் தோன்றி, தனித்துவம் பெற்ற, துருபதனின் ஒரே மகளும் திட்டத்துய்மனின் அன்புச் சகேதரியுமான திரௌபதி, என் நெஞ்சத்தில் வாழுகிறாள். அவளின் கடைக்கண் பார்வை நம்மீது விழுந்தால் பொருட் செல்வம்,  கல்விச் செல்வம், மதிப்பு, மரியாதை என அனைத்தும் நமக்குக் கிடைக்கும். 

கணவரின் பகடை ஆட்டத்தில்
          உடமையாய் தன்னை இழந்தபின்னே
பெண்ணைவைத் தாட உரிமையுண்டோ?
          அவையினில் கேட்ட வீரமங்கை
கண்கடை பார்வை நமக்கிருந்தால்
          நிலம்மனை புதிதாய் வாங்கிடலாம்
எண்ணிய யாவும் நடந்தேறும்
          உறவுகள் நம்மை சூழ்ந்திடுமே 03

தன் கணவர் (தருமர்) ஆடிய சூதாட்டத்தில் பணயப் பொருளாய் தன்னை வைத்து இழந்தபின்னர், பெண்ணான என்னை வைத்து ஆடுவதற்கு உரிமை உண்டா? என பல வேந்தர்கள் முன்னிலையில் கேட்ட வீரமங்கையான திரௌபதியின் கடைக்கண் பார்வை நமக்கிருந்தால், புதிய நிலம், வீட்டுமனைகள் வாங்கிடலாம். நாம் நினைத்தது யாவும் நடக்கும். உறவுனர்களும் நம்முடன் இணைந்து வாழ்வர்.

ஐவரின் மனைவி யாகிவந்து
          ஐவரின் மனதைப் புரிந்துகொண்டு
ஐவரின் பிள்ளை சுமந்துபெற்ற
          ஐவரின் இல்லாள் திரௌபதியின்
மைவிழிக் கண்ணின் கடைப்பார்வை
          பட்டதும் உள்ளம் தெளிவடையும்
காவியத் தலைவி அருள்பெற்று
          வழக்குகள் சாத கமாகிடுமே 04

ஐந்துபேரின் மனைவியான பாஞ்சாலி, கணவர்களின் மனதைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கு ஒரு குழந்தையென, ஐவருக்கும் ஐந்து குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். இத்தகைய குணம்மிக்க திரௌபதியின் மை பூசிய விழிகளை உடைய கண்களின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டவுடன் நமது உள்ளம் தெளிவடையும் மகாபாரதத்தின் கதையின் தலைவியான அவளின் திருவருள் கிடைக்கப்பெற்று நம் வழக்குகள் அனைத்தும் சாதகமாக முடியும்.

நீரிலே ஆடை தொலைந்துவிட
          தேடிய கண்ணன் நிலைகண்டு
சீருடை கிழித்து தந்துமானம்
          காத்தவள் கடைக்கண் அருட்பார்வை
சார்த்திய பழியைத் துடைத்தெடுக்கும்
          தடைகளை உடைத்து வெற்றிதரும்
நேர்கிற யாவும் நன்மைதரும்
          நீதியும் நம்மை நெருங்கிடுமே 05

ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீர் விளையாட்டில் ஈடுபட்டனர்.  பிறகு பாண்டவர்கள் அனைவரும் குளித்துவிட்டு கரையேறினர். கிருஷ்ணன் நீரிலேயே எதையோ தேடிக் கொண்டிருந்தார். பெண்கள் பகுதியில் கடைசியாக கரையேறிய திரௌபதி, கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறார் என நின்று யோசித்தாள். அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும் போது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார் என யூகம் செய்து, உடனே தன் அழகிய புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். திரௌபதி கொடுத்த புளவையின் ஒருபகுதி துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான். அத்தகைய திரௌபதியின் கடைக்கண் பார்வையானது, நம்மீது சுமத்தப்பட்ட வீண்பழியை நீக்கும். வருகின்ற தடைகளை உடைத்து வெற்றியைத் தந்திடும். நடைபெறும் செயல்கள் அனைத்தும் நன்மையை உண்டாக்கும். நமக்குக் கிடைக்க வேண்டிய நீதியும் கிடைக்கும்.

ஐவரை மணந்தும் வேற்றுவரை
          மனதிலும் நினையா கற்புடையாள்
ஐவருள் ஒருத்தி யாய்விளங்கும்
          திரௌபதி கடைக்கண் அருளிருந்தால்
மூவகை கடவுள் அருள்கிடைக்கும்
          மரணமும் வென்று வாழ்த்திடலாம்
காவலாய் முன்னோர் துணையிருப்பர்
          உடல்மனச் சோர்வு நீங்கிடுமே    06

தருமர், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என ஐந்து போரை திரௌபதி திருமணம் செய்திருந்தாலும், இந்த ஐந்துபோரைத் தவிர வேறு ஆடவரை மனதாலும் நினையாத கற்புடையவள்.  மேலும் புராணங்களில் கற்புடைய பெண்களாகக் கருதப்படும், ஸ்ரீராமரின் மனைவி சீதை, வாலியின் மனைவி தாரை, கௌதம முனிவரின் மனைவி அகலிகை, இராவணனின் மனைவி மண்டோதரி ஆகியோரின் வரிசையில் பாண்டவர்களின் மனைவி திரௌபதியும் இடபெற்றவள். அத்தகைய கற்புடையாளின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்யும் கடவுளரின் ஆசி முழுமையாகக் கிடைக்கப் பெறுவர். மரணத்தை வென்று வாழுவர். காவலாக நமது முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவார். உடல், மனம் சோர்வின்றி இயங்குவர்.

ஆண்உரு ஏற்ற சிகண்டிதங்கை
          துய்மனின் யாக உடன்பிறப்பு
கண்ணணின் உள்ளம் கவர்இளையாள்
          குந்திமாத் ரிபாண்டு மருமகளாம்
 மண்ணினை வென்ற கிருட்டிணையின்
          கடைவிழிப் பார்வை அருள்திறத்தால்
எண்ணிய யாவும் கைகூடும்
          ஏற்றமும் வாழ்வில் நடந்தேறும் 07

பாரதப் போரில் வெற்றி பெற்று தன் நாட்டை மீட்ட திரௌபதி, பெண்ணாக இருந்து ஆணாக மாறிய சிகண்டியின் தங்கை. யாகத் தீயில் திட்டத்துய்மனுடன் பிறந்தவள். பாரதப் போர் வெற்றிக்குக் காரணமான கிருஷ்ணனின் மனதைக் கவர்ந்த உடன்பிறவா சகோதரி. குந்தி, மாதரி, பாண்டுவின் மருமகள். இவளின் கடைக்கண் பார்வை அருள்திறத்தால், நாம் நினைத்த செயல்கள் யாவும் கைக்கு வந்து சேரும். வாழ்க்கையில் எண்ணற்ற முன்னேற்றங்கள் நடக்கும்.

துன்பமும் நம்மை விட்டோடும்
          கவலையும் துணையாய்ப் பறந்தோடும்
முன்னைய வினைகள் யாவையுமே
          செல்லாக் காசாய் இருந்துவிடும்
நினைத்தது யாவும் நடந்தேறும்
          நிம்மதி வந்து குடியேறும்
நினைவினில் வாழும் யாகசேனி
          கடைவிழிப் பார்வை பட்டதுமே 08


என் நினைவினில் வாழும் யாகசேனியின் கடைக்கண் பார்வை பட்டால், துன்பம் நம்மை விட்டு ஓடும். கவலையும் அதற்குத் துணையாகப் பறந்து ஒடும். நாம் செய்த முன் சென்ம தீவினைகளும் செல்லாத காசாய் பயனற்றுப் போகும். நாம் நினைத்த அனைத்தும் நிறைவேறும். நம்வீட்டில் நிம்மதி குடிபுகும்.

வறுமைகள் நீங்கச் செய்திடுமே
          திருமண யோகம் அளித்திடுமே
பொறுப்புகள் நமக்குக் கிடைத்திடுமே
          உயர்நிலைப்  பதவி வழங்கிடுமே
திறமையை எங்கும் பரப்பிடுமே
          தொழிலினை விருத்தி செய்திடுமே
சிறப்புடன் கண்ணன் உளம்கவர்ந்த
          கிருட்டிணை கடைக்கண் அருள்பார்வை 09

கண்ணனின் உள்ளத்தைக் கவர்ந்த கிருட்டிணையின் கடைக்கண் பார்வை, நமது வறுமையை நீங்கச் செய்யும். திருமணயோகம் அளிக்கும். புதிய பொறுப்புகள் நமக்கு கிடைத்திட செய்யும். பதவி உயர்வை அளிக்கும். திறமைகளை வெளி உலகத்திற்குக் காட்டிடும். செய்யும் தொழிலினை விரிவுபடுத்தும்.

வான்மழை பூமி இறங்கிவரும்
          வளமுடன் பயிர்கள் செழிப்படையும்
மானிடர் வறுமை மறைந்தோடும்
          மனம்மகிழ் செயல்கள் நிறைவேறும்
வானுயர் வெற்றி வந்தடையும்
          திரௌபதி கடைக்கண் பார்வையினால்
மான்விழி யாளின் அருள்பெறவே
          அனுதினம் துதித்து வணங்கிடுவீர்    10

திரௌபதி அம்மனின் கடைக்கண் பார்வையினால், வானத்தில் இருக்கும் மழையானது பூமிக்கு இறங்கிவரும். பயிர்வகைகளும் வளமாகச் செழித்து வளரும். மனிதர்களின் வறுமை இல்லாமல் போய்விடும், வான் அளவிலான வெற்றி நம்மை வந்து சேரும். ஆகவே திரௌவதி அம்மனின் அருளைப் பெற, போற்றி துதித்து வணங்குங்கள்.