Sunday, June 2, 2024

இராம யாண்டுநிலை

உலக உயிர்கள் சிறபுடன் வாழ
பலகை படைத்த பரமன் - விலங்கு
மனிதர் அவதாரம் ஏற்றுதான் கொண்ட
பணிமுடித்தான் வாழ்கபல் லாண்டு 01

உலகத்தில் உள்ள உயிர்கள் சிறப்புடன் வாழ்வதற்காக பல கைகளைக் கொண்ட திருமால், மீன், ஆமை, பன்றி, சிங்கம் என்ற விலங்குகளாகவும் வாமனன், பரசுராமன், ராமன், பலராமன் கிருஷ்ணன் ஆகிய மனிதர்களாகவும் அவதாரம் எடுத்து, தாம் எடுத்த அவதாரத்தின் பணியைச் சிறப்பாக முடித்தார். அவர் பல்லாண்டு வாழட்டும்.

தந்தைசொல் ஏற்று சடாமுடி கட்டி
வனம்புகுந்து வேடன் குரங்கின - மன்னன்
இலங்கைவாழ் வீடனன் யாவரையும் தம்பி
என்றனன் வாழ்கபல் லாண்டு 02

தந்தை தசரதன் சொல்லைத் தட்டாமல் ஏற்று, முனிவன்போல சடை முடித்துக் கட்டி, காட்டிற்குச் சென்று அங்கு கங்கைக் கரையில் உள்ள வேடனை நான்காம் தம்பியாகவும் குரங்கினத்தின் தலைவனான சுக்கிரீவனை ஐந்தாவது தம்பியாகவும் இலங்கையில் உள்ள இராவணனின் தம்பி விபீடனனை ஆறாவது தம்பியாகவும் ஏற்று உறவு கொண்ட ராமபிரான் பல்லாண்டு வாழ்க.

பூவுறையும் செல்வமகள் நிஞ்சினிலே வைத்தவனாம்
கான்மேவி தன்துணையை மீட்டெடுத்து - தேன்மேவும்
மாலைசூடி நாடாண்ட சீதாராம் மாருதியின்
தோழனேநீ  வாழ்கபல் லாண்டு 03

தாமரைப் பூவில் அமர்ந்த செல்வத்திற்கு அதிபதியான இலட்சுமியைத் தன் நெஞ்சில் வைத்தவன். காடு சென்று, கடத்திச் சென்ற இராவணனை வென்று தன்னுடைய துணையான சீதையை மீட்டுவந்து, தேன் சிந்தும் மாலையைத் தன் மார்பில் சூடி நல்லாட்சி நடத்தய சீத்தா ராமா. அனுமானின் தோழனே நீ வாழ்க பல்லாண்டு. 

வெற்றிஎனும் சொல்லின் பொருளான ராமா
உறவுகளைத் தாவிப் பிடித்து - பிறப்புடன்
ஒப்பிட்டு காத்தாய் உறவுமுறை உன்னால்
தழைத்தது வாழ்கபல் லாண்டு 04

வெற்றி என்ற சொல்லின் பொருளாக விளங்கும் ராமபிரானே. உறவுகளைத் தாவி பிடிப்பதிலும் உறவுமுறைகள் வைத்து அழைப்பதிலும் நீயே சிறந்தவன். இப்பூமியில் உறவு முறைகள் உன்னால் தழைத்து விளங்குகிறது. நீ பல்லாண்டு வாழ்வாயாக.

தசரதன் உள்ளம் கவர்ந்த தனையா
தவமுனி வேள்விகாக்க  சென்று - சிவதனுசு
நாணேற்றி வென்று மணமுடித்த சானகி
ராமாநீ வாழ்கபல் லாண்டு 05

உன் தந்தையாகிய தசரதனின் உள்ளம் கவர்ந்த மகனே. விசுவாமித்திரர் யாகம் காக்கச் சென்று, எவராலும் தூக்கி நிறுத்தி நாணேற்ற முடியாத சிவதனுசை நாணேற்றி போட்டியில் வென்று சானகியை திருமணம் செய்துகொண்ட சானகி ராமா நீ பல்லாண்டு வாழ்வாயாக.

தந்தை முடிசூட எண்ணிய நாளிலே
மந்தரை சூழ்ச்சியால் நாடுதந்து - முந்தை
அனுபவம் போக்கில் வனம்சென்று  வாழ
முனைந்தவா வாழ்கபல் லாண்டு 06

திருமணம் முடிந்த கையோடு உனக்கு முடி சூட்டுவிழா நடத்தி அரசு பொறுப்பு ஏற்கச் செய்யும் நேரத்தில் கூனி என்னும் மந்தரையின் சூழ்ச்சியால் பரதனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, முன்பு விசுவாமித்திரர் வனத்திற்கு அழைத்துச் சென்ற முன் அனுபவத்தினால் காடு சென்று வாழத் தொடங்கிய ராமா வாழ்க பல்லாண்டு.

தந்தை சிநேகிதன் சீதையின் உற்றதுணை
சண்டையிட்டு ஒற்றை சிறகிழந்தோன் - கண்டு
உளமுருகி கொண்டுசென்ற சேதிகேட்டு மோட்சம்
அளித்தவா வாழ்கபல் லாண்டு 07

தசரதனின்  நெருங்கிய நண்பனும் இராமன் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும் போது சீதையைத் தனியே விட்டு விட்டு இராமன் இலட்சுமனன் வேட்டைக்குச் சென்ற போது சீதைக்குத் துணையாக இருந்தவனுமாகிய சடாயு. சீதையைக் கடத்திச் செல்லும் போது இராவணனோடு சண்டையிட்டு, அவனால் ஒரு சிறகை இழந்தவன். இச்சடாயுவின் நிலையைக் கண்ட உள்ளம் உருகி, சீதை இராவணன் கொண்டு சென்ற திசையினைக் கேட்டறிந்து மோட்சம் கொடுத்த இராமனனே பல்லாண்டு வாழ்வாயாக.

கல்மரம் கொண்டு கடலின் நடுவே
பலமிகுந்த பாலம் அமைத்து - இலங்கை
நகர்புகுந்து மாற்றார் பகைவென்று மீட்டு
நகர்வந்தாய் வாழ்கபல் லாண்டு 08

கற்களையும் மரங்களையும் கொண்டு ஆர்ப்பரிக்கும் நடுக்கடலில் பலம் கொண்ட பாலம் அமைத்து இலங்கை நகர் சென்று, இராவணன் முதலானப் பகைவர்களை வென்று, சீதையினை மீட்டு ஆயோத்தி நகரம் வந்தவனே பல்லாண்டு வாழ்வாயாக.

சுவைத்து பதம்பார்த்து நற்பழத்தை தேர்ந்து
இவையிவை ராமன் விரும்பி  - சுவைத்துண்பார்
என்று கொடுத்த துறவி சபரிக் 
கருள்புரிந்தோய் வாழ்கபல் லாண்டு 09

இவையிவை இராபிரான் சுவைத்து மகிழ்ந்து விரும்பி உண்பார் என்று, பழங்களைப் பறிக்கும்போதே சுவைத்து பதம்பார்த்து நல்ல பழங்களைத் தேர்வு செய்து உண்ணக் கொடுத்த சபரியின் உண்மையான பக்தியை உணர்ந்து அருள்புரிந்தவனே வாழ்க பல்லாண்டு, 

பதினான்கு ஆண்டு வனவாசம் ஏற்று
அவதாரம் கொண்டசெயல் வென்று - புவியாள
பட்டமேற்று சோதர ரோடுஆளும் ராமா
உனைப்பணிந்தேன் வாழ்கபல் லாண்டு 10

பதினான்கு ஆண்டுகாலம் வனவாசம் சென்று, இராம அவதாரம் மேற்கொள்வதற்குக் காரணமாக இருந்த, இராவண வதம் முடித்து, அயோத்தி நகரத்தை ஆள்வதற்காக பட்டம் கட்டி சகோதரரோடு நல்லாட்சி நடத்தும் ராமா உன்னை வணங்குகின்றேன் பல்லாண்டு வாழ்வாயாக.