வழியோடி பெருங்கடலில் மோட்சம் கொள்ளும்
திங்களுடன் சூரியனும் உன்னைக் காண
இரவுபகல் மாறிமாறி வந்து போவர்
எங்கிருக்கும் மனிதரினம் ஒன்று கூடி
உன்னருளைப் பெருவதற்காய்ப் போட்டி போடும்
சங்குசக்ரம் கைக்கொண்ட வெண்ணி யம்மா
உலகமக்கள் நலம்பெறவே ஆடீர் ஊசல் 01
இரண்டு கரைகளையும் தழுவிக்கொண்டு ஓடிவரும் தொண்டி ஆற்று நீரானது, உன் பாதங்களைத் தொட்டு வணங்கி, செல்லும் வழியில் சென்று பெரிய கடலில் மோட்சம் அடையும். சந்திரனும் சூரியனும் உன்னைக் காண்பதற்காக இரவிலும் பகலிலும் வந்து வந்து போவர். உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி உனது அருளைப் பெறுவதற்காகப் போட்டிப் போட்டு கொண்டு முந்தி வருவர். சங்கு சக்கரங்களைக் கையில் வைத்திருக்கும் வெண்ணியம்மனே உலக மக்கள் நலமுடன் வாழ்வதற்காக ஊசல் ஆடுவாயாக.
தித்திக்கும் செங்கருப்பாய் வாழ்வு தந்து
தெகிட்டாத தேன்போல கல்வி செல்வம்
எத்திசையும் சென்றுபெயர் ஈட்டுகின்ற
வான்புகழைத் தந்தருளும் அன்புத் தாயே
சித்தமெல்லாம் உன்னைவைத்து வணங்கு கின்றோம்
சிறப்பான உன்னழகைக் காண வந்தோம்
முத்துமணி ஆரமெல்லாம் அங்கம் பூட்டி
ஊர்மக்கள் நலம்பெறவே ஆடீர் ஊசல் 02
உலகமெல்லாம் சக்திமயம் சக்தி இன்றேல்
உலகுயிர்கள் பூமியிலே பிறப்ப துண்டோ?
மலைமகளும் கலைமகளும் ஒன்று சேர்ந்த
அலைமகளின் வேற்றுருவாய் காக்க வந்து
அலைமோதும் கரைமீது அமர்ந்த தாயே
அதிசயங்கள் படைக்கின்ற வெண்ணி யம்மா
தலைகிரீடம் காதணியும் அசைந்து ஆட
தரணியெங்கும் புகழ்பரவ ஆடீர் ஊசல் 03
திருமாலின் ஓரங்க மாக வந்து
படைக்கருவி கரங்களிலே இனிது தாங்கி
திருமகளின் மற்றுமொரு உருவம் ஏற்று
திருவுருவாய் இரட்டணையில் அமர்ந்த தாயே
வரம்கேட்டு வந்தவர்க்கு அள்ளி தந்து
வறுமையினை போக்கிஅவர் வாழ்வு காக்கும்
பெரும்பொருளே கற்பகமே தண்டை ஆட
பௌர்ணமியில் எழுந்தருளி ஆடீர் ஊசல் 04
கரம்நான்கு கொண்டவளே கருணைத் தாயே
உயிர்வருத்தும் பிணிநீக்கி ஆவி காப்பாய்
அருள்மழையில் நனைவதற்கு ஓடி வந்தோம்
ஆட்கொண்டு காட்சிதந்து இன்ப மூட்டு
இரவுபகல் பாராமல் அருள்வ ழங்கி
அனைவரையும் காக்கின்ற வெண்ணி யம்மா
பருத்திபட்டு ஆடைகட்டி ஒட்டி யானம்
சின்னப்பூ அசைந்தாட ஆடீர் ஊசல் 05
உலகாளும் ஓர்உருவே உன்னை யன்றி
எங்களையார் காப்பாரோ சொல்வா நீயே
பலகாலம் வீற்றிருந்து அருள்வ ழங்கும்
உனைவணங்கி அருள்பெறவே வந்தோம் நாங்கள்
மலைபோன்ற துன்பங்கள் தும்ச மாக்கி
மகிழ்ச்சியினை இல்லத்தில் நிலைக்கச் செய்வாய்
தலையணியும் தோளணியும் அசைந்து ஆட
காண்பவர்கள் மலைத்திடவே ஆடீர் ஊசல் 06
மனிதமனம் சுயனலமாம் கடலில் மூழ்கி
மீண்டுவர முடியாமல் தவிக்கு தம்மா
முன்னோர்சொல் மதியாமல் இளையோர் கூட்டம்
தான்நினைத்த படிவாழ எண்ணு தம்மா
கன்னியருள் ஒருத்தியான வெண்ணி யம்மா
நிலைமாற்றி நல்வாழ்வு தந்தி டம்மா
கனகமணி முத்துமாலை கழுத்தி லாட
கடைக்கண்ணால் அருள்வழங்கி ஆடீர் ஊசர் 07
நீலநிறம் கொண்டவளே நீலி சூலி
நிம்மதியைத் தருபவளே அன்னை தேவி
கோலவிழி கொண்டவனே புஞ்செய் மாரி
தாமரைப்பூ அமர்ந்தவளே வெண்ணி யம்மா
சேலுலவும் ஆற்றங்கரை அமர்ந்து பக்தர்
நெஞ்சுறைந்து அருள்பொழிந்து காப்பாய் தாயே
மாலையோடு அணிமணிகள் அசைந்து ஆடும்
அழகுகாண வந்துநின்றார் ஆடீர் ஊசல் 08
விளைநிலங்கள் மிகுதியாக இருக்கும் ஊராம்
இரட்டணையில் கோவில்கொண் டவெண்ணி யம்மா
களைநீக்கி பயிர்வளர்க்கும் உழவன் போல
பிழைநீக்கி அருள்வழங்கும் அன்னை நீயே
ஒளிவீசி கவர்ந்திழுக்கும் வதனம் கொண்டு
வருவோர்க்கு அருள்வழங்கும் அருமைத் தாயே
மிளகுமாலை கண்டமாலை கழுத்தில் ஆட
மிடுக்கான தோற்றத்தில் ஆடீர் ஊசல் 09
தாயென்றால் இரக்ககுணம் அவளுக் குண்டு
இரக்கமில்லா மனிதருக்கும் அருள்வ ழங்கு.
சேயெனவே நெருங்கிவரும் மக்கட் கெல்லாம்
சிரமமில்லா பெருவாழ்வு அளிப்பாய் தாயே
மாயவலை சூழ்ந்தபோதும் அவற்றை நீக்கி
மாறுபாடு இல்லாமல் வாழச் செய்வாய்
ஆயமுடன் உன்னழக்கைக் காண வந்தோம்
புன்னகைகள் சிந்திடவே ஆடீர் ஊசல் 10