எண்ணம் சொல்லும் ஒன்றாய் ஆகி
மண்ணில் மாறா சிந்தை யோடு
பண்ணாய் பாட்டாய் சேர்தல் ஒன்று 01
கண்களின் ஈர்ப்பினால் உள்ளம் இணைந்து, நினைப்பிலும் சொல்லிலும் ஒன்றாகி, இவ்வுலகில் மாறாத சிந்தனையோடு, இசையோடு இணைந்த பாடலாய் தாங்களே சேர்ந்து வாழ்வது ஒருவகை திருமணம்
உறவுக ளாலே உரிமையைப் பெற்று
சிறந்தோர் எனஊர் விளம்ப - இறைவன்
நெருப்புசாட்சி யாக்கி திருமணம் செய்து
இருமனம் சேர்வது ஒன்று 02
சிறந்தோர் எனஊர் விளம்ப - இறைவன்
நெருப்புசாட்சி யாக்கி திருமணம் செய்து
இருமனம் சேர்வது ஒன்று 02
உறவினர்கள் அனைவரும் இணைந்து வரன்பார்த்து, சிறந்த குணங்களைப் பெற்றவர்கள் இவர்கள் என ஊரார் சொல்லும்படியாக, இறைவன் மற்றும் அக்கினியைச் சாட்சியாக வைத்து திருமணம் செய்து உரிமைகள் பெற்று இரண்டு மனங்களும் இணைவது ஒருவகைத் திருமணம்
ஆணும் பெண்ணும் கருத்தொரு மித்து
பேணும் பண்பே இல்லற மாகும்
காணும் இன்பம் சிந்தையில் வைத்தே
மாண்பு தோன்ற செயல்படல் நன்றே 03
பேணுதல் - மதித்தல் மாண்பு - பெருமை
திருமணமான கணவனும் மனைவியும் கருத்தால் ஒன்றுபட்டு ஒருவரை ஒருவா் மதித்து வாழ்வதே இல்லறம் எனப்படும். இல்லற வாழ்வு இனிதாய் அமைய வேண்டும் என்ற எண்ணம் மனதில் வைத்து பெருமை வரம்படி செயல்படுதல் வேண்டும்.
கணவன்மனைவி இருவரும் சேர்ந்து
கண்களின் காட்சியாகி ஒப்புரவு - பண்பினால்
இல்லறத் தேரை நகர்த்தி உறவுடன்
பிள்ளையோடு வாழ்தல் சிறப்பு04
பிள்ளையோடு வாழ்தல் சிறப்பு04
கணவனும் மனைவியும் சேர்ந்து இரண்டு கண்கள் ஒரு காட்சியாகவேண்டும். ஒற்றுமையாய் பண்பில் சிறந்து இல்லறம் என்னும் தேரை நகர்த்த வேண்டும். உறவுகளோடும் பிள்ளைகளோடும் இனிது வாழ்ந்து இல்லறத்தில் சிறக்க வேண்டும்.
விட்டுகொ டுத்தலே இல்லற மந்திரம்
சுட்டிடும் சொல்லிலும் அன்புநீர்ப் பாய்ச்சணும்
பட்டினி யாயினும் நிம்மதி சூழணும்
சட்டியில் உள்ளதை அன்புடன் உண்ணணும் 05
கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவணும் விட்டுக் கொடுத்துச் செல்வதே இல்லறத்தின் தாரக மந்திரமாகும். வார்த்தைகளில் சூடும் சொற்களை நீக்கி அன்பான சொற்களில் பேசவேண்டும். சோறுதண்ணி உண்ணாமல் இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்கவேண்டும். வீட்டில் இருப்பதை அனைவரும் அன்பாய் உண்டு மகிழவேண்டும்.
உற்றார் உறவினர் மூங்கிலாய் பற்றியும்
சுற்றம் இருப்பவர் அன்பினால் - சுற்றியும்
இன்முகம் காட்டியும் நற்சொலால் பேசியும்
நன்மனம் போற்றுதல் நன்று 06
இல்லறத்தில் இருப்பவர்கள், நட்பு வழி வந்தவர்களையும் இரத்த முறை சொந்தங்களையும் மூங்கில் போல பற்றிக்கொள்ள வேண்டும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை அன்பினால் அரவணைக்க வேண்டும. இவர்கள் அனைவரிடத்திலும் நல்ல உள்ளத்தோடு புன்னகை முகத்துடன் நல்ல சொற்களைப் பேசி பாதுகாத்தல் வேண்டும். அப்போதுதான் இல்லறம் நல்லறமாக அமையும் மன நிம்மதி இல்லத்தில் சூழும்.
இந்தப் பிறவியில் வந்த உறவிலை
முந்தைப் பிறவியின் வந்த உறவிது
சிந்தை பதிந்திட வேண்டும் உறவினர்
வந்த உறவினைப் போற்றல் கடமையே 07
கணவன் மனைவி உறவென்பது திடீரென்று ஒரு நாளில் தோன்றியதன்று. முந்தைய பிறவியின் எச்சம் இந்தப் பிறவியின் தொடர்ச்சியாகிறது. இதனை கணவன் மனைவி என்ற உறவில் வந்தவர்கள் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தம் சுற்றமாகிய உறவினையும் போற்றி வாழ்வது கடமையாகும்.
கணவன் மனைவி உடலழகு வற்றிய
பின்பும் முதல்நாள் போல - மனமொன்றி
சேர்ந்துடன் அன்புகாட்டி வாழுதல் வேண்டும்
பாரில் அவர்க்கே சிறப்பு 08
கணவன் மனைவி இருவரும் உடல் அழகு வற்றி கிழப்பருவம் ஏய்திய பின்பும் திருமணமான முதல்நாள் எவ்வாறு அன்பு செலுத்தினரோ அவ்வாறே மனம் ஒத்து சேர்ந்து அன்பு செலுத்தி வாழ்தல் வேண்டும். அப்படி வாழ்பவரையே இந்த உலகம் போற்றும்.
இருவரின் உழைப்பிலே குடும்பமும் சிறக்கணும்
இருவரும் இணைந்துதன் கடமையைச் செய்யணும்
இருவரும் இருவராய் இருப்பது தவிர்க்கணும்
இருவரும் ஒருவராய் இருப்பதை விரும்பணும் 09
கணவன் மனைவி இருவரின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்துதல் வேண்டும். இருவரும் இணைந்தே தங்களின் கடமைகளைச் செய்தல் வேண்டும். கணவன் மனைவி தனித்தனி என்றில்லாமல் உடலும் உயிரும்போல இருவரும் ஒன்றே என்பதை உணர்ந்து வாழ்தல் வேண்டும்.
ஒருவரே செல்வத்தை ஈட்டிய போதும்
பிரிவினை இன்றி இருவர் - புரிதலில்
நன்முறை யாக குடும்பம் நடத்தியும்
நல்வழி வாழ்தல் சிறப்பு 10
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டும் சம்பாதிக்கிறார் என்ற போதும், இது என்பணம் என்சம்பாத்தியம் என்று சொல்லாமல் இருவரும் புரிந்துகொண்டு நல்லமுறையில் குடும்பம் நடத்தி நல்ல வழியில் வாழ்வதே சிறப்புடையதாகும்.
குடும்பம் என்றதும் குழந்தையும் உடன்வரும்
குடும்ப வாழ்வினர் சிறப்பது குழந்தையால்
குடும்பம் மகிழ்ந்திடும் குழந்தைகள் ஒலிகளில்
கடவுள் உலவிடும் மழலையின் வடிவிலே 11
குடும்பம் என்ற உடனேயே கணவன் மனைவியோடு குழந்தைகளும் உடன் சேர்ந்து விடுவர். குடும்பத்தில் வாழ்பவர்க்கு குழந்தைகளாலேயே சிறப்பு உண்டாகும். குழந்தைகளின் அமுத மொழிகளில் குடும்பமே மகிழ்ச்சி கொள்ளும். வீட்டில், குழந்தையின் வடிவத்தில் தெய்வம் உலவிடும்.
நம்மில் இருந்துநம்மால் வந்தவர் பிள்ளைகள்
நம்மின் பிரதியாய் வாழ்ந்திடும் - நம்மவர்
வாழ்க்கையின் அர்த்தமாய் உள்ள அவர்களுக்காய்
வாழ்தலே பெற்றோர் சிறப்பு 12
பிள்ளைகள், கணவன் மனைவி இருவருள்ளும் இருந்து வந்தவர். இருவரின் முயற்சியால் வந்தவர். கணவன் மனைவியின் நகலாய் தோன்றி நம்முடன் வாழும் நமக்குரியவர். அவர்களின் வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்றி, அவர்களுக்காக வாழ்வதே பெற்றோரின் சிறப்பாகும்.
நாளும் வளரும் குழந்தைகள் காத்து
நாளும் அறிவை அவர்களுக் கூட்டி
நாளும் சிறப்பாய் பரிவினைக் காட்டி
நாளும் செழிப்பாய் இருந்திடச் செய்வீர் 13
ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் தம் பிள்ளைகளை பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான அறிவை ஊட்டி, சிப்புடனும் பரிவுடனும் அன்பு காட்சி குறைகள் இன்றி மனக் கவலைகள் இன்றி செழிப்பாக வைத்திருக்க வேண்டும்.
எண்ணும் எழுத்தும் அறிமுகம் செய்துவாழ
எல்லா வளமும் அளித்திடும் - கல்வியைத்
தந்து அருகில் இருந்து வழிநடத்தி
சுற்றம் மதித்திட வாழ் 14
பெற்றவர்கள், தங்களின் குழந்தைகளுக்கு எண்ணையும் எழுத்தையும் கற்பித்து, அவர்கள் வாழ்வதற்குத் தேவையான வளங்களைக் கொடுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கி, அவர்களுடன் வாழ்ந்து, நல்வழிப்படுத்தி, உற்றார் உறவினர் மதிக்கும்படியாக வாழ்தல் வேண்டும்.
வாழையடி வாழையென வளர்ந்துவரும் பிள்ளைகளின்
வாழ்வைசெம்மை யாக்கிடவே இணைதேர்ந்து சேர்ந்திடணும்
வாழ்க்கையெனும் மாலைக்குள் புதுஉறவை கோர்த்திடணும்
வாழ்வென்னும் நாற்றெடுத்து புதுஇடத்தில் நட்டிடணும் 15
வாழை அடி வாழை என நமக்குப் பின்னால் வரும் சந்ததியான தம் பிள்ளைகளின் வாழ்க்கை செம்மையாக அமைய, அவர்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணைதேடி தெரிவுசெய்து, வாழ்க்கையாகிய மாலையில் புது உறவாய் சோர்த்து, ஓரிடத்தில் உள்ள நாற்றை வேறிடத்தில் நடுவதுபோல தம் குடும்பத்தில இணைத்து ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
புதிய உறவை நமது உறுப்பாய்
நினைத்து குடும்ப பழக்கம் - அனைத்தும்
நயமாய் பகர்ந்துள்ளம் நோகா வழிகாட்டி
சொல்முளேதும் குத்தா நடத்து 16
தன்னுடைய குடும்பத்தில் புதியதாக வந்துள்ள தன் பிள்ளைகளின் துணையை நமது உடலின் உள்ள ஓர் உறுப்பாக நினைத்து, நம்முடைய குடும்பப் பழக்க வழக்கங்களை சொல் என்னும் முள் குத்தாமலும் உள்ளம் துன்புறாமலும் நயமாக எடுத்துச் சொல்லி வழிநடத்துதல் வேண்டும்.
தன்மக்கள் மழலையுடன் பெரும்பொழுதை கழிக்கவேண்டும்
கனிவான மொழிபேசி உறவுடனே பழகவேண்டும்
பனைமரமாய் உயர்ந்தாலும் பணிபோடு இருக்கவேண்டும்
தனைசூழ்ந்த உறவுதனை தலைபோல மதிக்கவேண்டும் 17
தன்னுடைய பேரக் குழந்தைகளுடன் இனிமையான முறையில் பொழுதைக் கழிக்கவேண்டும். அன்பான கனிவான சொற்களைப் பேசி உறவுகளுடன் பழகவேண்டும். பனைமரம்போல் நீண்ட புகழ் இருந்தாலும் சொல்லாலும் செயலாலும் பணிவு கொள்ளவேண்டும். தன்னைச் சுற்றியுள்ள உறவுகயை நம்முடைய தலையைப் போல எண்ணி மதிக்க வேண்டும்.
அன்பினைத் தன்துணை யாக்கி உறவுகள்
அண்டி இருந்திடல் வேண்டும் - துணையுடன்
சேர்ந்து கடமைகள் செய்து பெருமைகள்
தோன்ற செயல்படு வாய். 18
அன்பைத் துணையாகக் கொண்டு உறவுகளுடன் சேர்ந்து வாழ்தல் வேண்டும். தன்னுடைய துணையோடு சேர்த்து இல்லறக் கடமைகள் செய்த பெருமைகள் தோன்ற நடந்திட வேண்டும்.