Monday, September 16, 2024

மங்கள வள்ளை

பெண்குலத்து மங்கையருள் பேரழகி யாகி
மண்மகளைப் பெற்றெடுத்த மெல்வயிறாள் நாமம்
கொண்டுமயன் மகளாக அவதாரம் செய்து
கொண்டவனின் பதிவிரதை யாகிதுணை நின்றாள் 01 

மந்தோதரி - மெல்லிய வயிறாள்

பெண் குலத்தில் சிறந்த பெண்ணாகவும் பேரழகியாகவும் விளங்கும் மண்டோதரி,  சீதையைத் தன் மணிவயிற்றில் சுமந்து பெற்றெடுத்தவள். மெல்லிய வயிறு (மந்தோதரி)  என்னும் பெயரைக் கொண்டவள். மயனின் மகளாகப் பிறந்தவள். இராவணனின் கற்புக்கரசி. குடும்ப வளர்ச்சிக்குக்  கணவனுக்குத் துணையாய் இருந்து செயல்படுபவள்.


முனிவருண்ண வைத்திருந்த பாலில் அரவமொன்று
நஞ்சு உமிழ்ந்துசெல்ல கண்டிருந்த - வஞ்சமில்லா
நீர்வாழ் தவளை துறவிகாக்க பால்விழுந்து
மாய்ந்துபின் ஆனது பெண்  02

அரவம் - பாம்பு

துறவி ஒருவர் அருந்த வைத்திருந்த பாலில், பாம்பொன்று விடத்தைக் கலந்துவிடுகிறது. அதைக் கண்ட தவளை ஒன்று, அந்தப் பாலில் விழுந்து இறந்துவிடுகிறது. பாலை அருந்துவதற்காக வந்த முனிவர், அதில் இறந்து கிடந்த தவளையைக் கண்டு, உண்மை உணர்ந்து அந்தத் தவளையை அழகியப் பெண்ணாகப் பிறக்கும்படி வரமளித்தார். அந்தத் தவளையே மண்டோதரி.

அழகிய தோற்றமும் அறிவுடை சிந்தையும்
விழைவுடை பார்வையும் வியந்திடும் நற்குணம்
தழைத்திடும் நன்மொழி இயல்பெனக் கொண்டவள்
அழகிலே மூழ்கிய இராவணன் ஏற்றனன் 03

அனைவரும் கவரும் தோற்றமும் அறிவு மிகுந்த சிந்தனையும் கொண்டவள். விரும்பத்தக்கப் பார்வையும் யாவரும் வியக்கும் நற்குணங்களும் கொண்டவள். துளிர்த்தெழும் நன்மொழிகளின் பிறப்பிடமாய் விளங்குபவள். இத்தகைய சிறப்பு மிக்க மண்டோதரியை இராவணன், அவள் அழகில் மூழ்கி காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டான்.

கணவனின் தீச்செயல் கண்டவள் ஆயினும்
கண்கண்ட தெய்வம் கணவனென் - றெண்ணி
அவன்வழிச் சென்றுநீதி யின்பாதை காட்ட
புறக்கனித்து சென்றான் அவன் 04

கணவனின் தீய செயல்கள் அனைத்தையும் அறிந்திருந்த போதிலும் கணவனே கண்கண்ட தெய்வமென நினைத்து அவனுடன் வாழ்கிறாள்.  நீதி நெறிகளை அறிந்த பெண்ணான மண்டோதரி, ராவணனை நீதியின் பாதைக்கு அழைத்துச் செல்ல முயல்கிறாள், ஆனால் ராவணன் எப்போதும் அவளது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதே இல்லை.

கொண்டவன் மொழியினை கருத்திலே நிறுத்துவாள்
கொண்டவன் நிழலென இருந்திட விரும்புவாள்
கொண்டவன் அசைவிலே செயலினை நகர்த்துவாள்
கொண்டவன் உயிரென சுவாசமாய் விளங்குவாள் 05

மண்டோதரி,  தான் திருமணம் செய்து கொண்ட இராவணனின்  வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவளாகவும் அவனின் நிழலாகவும் அவனின் செயல்பாடுகளே தன் செயல்பாடுகளாகவும் அவனையே உயிராகவும் கொண்டு தன் வாழ்க்கையை வாழ்கிறாள் 

நல்ல மனைவியாய் வாழ்ந்துதன் தாய்மையால்
பிள்ளைகள் பெற்று சிறப்பாய் - வளர்த்த
பரிவுடன் பாசமும் அன்பும் கலந்து
கருணையுள்ள நற்குணத்  தாய் 06

கணவனுக்கு நல்ல மனைவியாக வாழத்து தன்னுடைய தாய்மையின் காரணமாக பிள்ளைகளைப் பெற்று (மேகநாதன், அதிகயா மற்றும் அக்சயகுமாரர்) அன்பும் பரிவும் பாசமும் கலந்து சிறப்புடன் வளர்த்த கருணை உள்ளமும் நற்குணங்களும் கொண்ட தாய் மண்டோதரி.

கணவனின் பாதைகள் மாறிய பொழுதெலாம்
துணைவனாய் மனைவியாய் தோழியாய் இறைவனாய்
குணகளைக் கூறியே நல்வழி படுத்தினாள்
பணிவுடன் பல்வகை சூழலில் முயன்றனள் 07

மண்டோதரி, தன் கணவன் பல்வேறு சூழல்களில் பாதை மாறி தவறாக நடந்து கொள்ளும்போது, உற்ற நண்பனாகவும் நல்ல மனைவியாகவும் தோழியாகவும் கடவுளாகவும் இருந்து, பணிவுடன் நற்குணங்களைக் கூறி நல்வழிப் படுத்தினாள்.

விளக்கின் ஒளியால் இருளது ஓடும்
விளக்காய் இருந்து குடும்பம் - வளர
உழைக்கும் திறமே குலமகள் பண்பாம்
தழைக்க உழைத்தாள் அவள் 08

விளக்கில் இருந்து வரும் ஒளி அங்குள்ள இருளை அகற்றும். விளக்கின் ஒளிபோல இருந்து குடும்ப வளர்ச்சிக்கு உழைக்கும் திறம் குடும்பத்து பெண்களின் பண்பாகும். மண்டோதரியும் தன்னுடைய குடும்பம் தழைத்து வளர உழைத்தாள்.
 
நாரணன் மணந்திட எண்ணிய வேதவதி
ஆரணி யத்திடை மாதவம் செய்துவந்தாள்
தேரிலே உலவிய ராவணன் கண்டவளின்
வாரண பலத்துடன் கூந்தலைப் பற்றினானே 09

குஷத்வஜா முனிவரின் மகள் வேதவதி நாராயணனைத் திருமணம் செய்திட நினைத்து காட்டில் கடுந்தவம் செய்து வந்தாள். அந்த வழியே புஷ்பக விமானத்தில் சென்றுகொண்டிருந்த இராவணன் கண்களில் பட்டுவிட அவளின் அழகிலே மயங்கிய இராவணன் அடைந்திட நினைத்து, காதல் மொழியிலே பேசி நெருங்கினான். இணங்க மறுத்த அவளின் கூந்தலை யானை பலத்துடன் பற்றி இழுத்தான்.

இதனை அறிந்ததும் பெண்ணின நல்லாள்
குடும்பம் சிறந்திட வேண்டின் -  கொடுமைகள்
செய்தல் தவிர்த்திட வேண்டும் கொடியபாவம்
பெண்ணை வதைத்தலா கும்.  10

இதனை அறிந்த பெண்ணினத்தின் நல்லாள் ஆன மண்டோதரி விரைந்து தடுத்து, பாவத்தில் கொடிய பாவம் பெண்ணைத் துன்பப்படுத்துதல் குடும்பம் சிறப்பாக அமைய வேண்டுமானால் இவ்வாறு கொடுமைகள் செய்வதைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினாள்.

தங்கையின் சூழ்ச்சியால் சீதையைக் கவர்ந்தான்
பொங்கிடும் ஆசையால் எல்லையைக் கடந்தான்
இங்ஙனம் செய்வது நீதியின் முறையா?
மங்கையில் இல்லிலே விட்டிட பகர்ந்தாள். 11

இராவணன் தன் தங்கை சூர்ப்பணகையின் சூழ்ச்சியில் விழுந்து, சீதையைக் கவர்ந்து வந்தான். அவனிள் அழகிலே மயங்கி எல்லை கடந்த ஆசை மேல் எழும்ப அடைய எண்ணினான். இதனை அறிந்த மண்டோதரி தடுத்து, நீங்கள் செய்யும் செயல் அறத்திற்கு எதிரானது சீதையை அவளின் இல்லத்திலே கொண்டுபோய் விட்டுவிடு என்று மன்றாடினாள்.

ராவணன் தன்னை மணம்செய்ய வற்புறுத்த
சீதை மறுத்தபோது வாளெடுத்து - கோதை
தலையறுக்க ஓங்கிய கைப்பிடித்து காத்து
தவறென சொன்னாள் அவள். 12

இராவணன், சீதா தேவியிடம் தன்னை மணம் புரிந்து கொள்ளாவிடில், கொன்று விடுவதாக மிரட்டினான். சீதா தேவி மறுத்த போது, சீதா தேவியின் தலையை துண்டிப்பதற்காக தன்னுடைய வாளை ஓங்கினான். ஆனால், மண்டோதரி இராவணனின் கையைப் பிடித்து இது தவறான செயல், பாவச் செயல் எனத் தடுத்து நிறுத்தினாள்.

அனுமனும் தொழுதிடும் அற்புத பிறவியாள்
தினம்தினம் அறநெறி முறையிலே நடப்பவள்
மனைவியாய் பலமுறை அறிவுரைப் பகர்ந்தவள்
கனவிலும் பிறரினை நினைந்திடாக் குலமகள் 13

சீதையைவிட அழகிலே சிறந்த மண்டோதரி, அனுமனும் வணங்கித் தொழும் அற்புதமான பிறவி. ஒவ்வொரு நாளும் அற நெறிகளின் படி தன் வாழ்க்கை முறையை அமைத்து நடப்பவள். மனைவியாய் இருந்து பலமுறை தன் கணவனுக்கு அறிவுரைகளைச் சொல்லி திருத்த முயற்சித்தவள். கனவிலும் பிற ஆடவனை நினைக்காதக் கற்புக்கரசி.

குலமகள் சீதையை ராமனிடம் தந்து
அழிவிலி ருந்துகாக்க சொன்னாள் - மொழிகள்
செவிகொள்ளா போது வருந்தி இறைவன்
வணங்கிகாக்க வேண்டிபணிந் தாள் 14 

அமைதியான முறையில் குலமகளான சீதையை இராமனிடம் திருப்பி அனுப்பி வரும் மாபெரும் அழிவிலிருந்து காக்கும்படி தன் கணவர் இராவணனிடம் மண்டோதரி பலமுறைத் அறிவித்தாள். அவளின் சொற்களைச் செவிகளில் இராவணன் ஏற்காத வருந்தி, பணிந்து இறைவனிடம் தங்களைக் காக்கும்படி வேண்டினாள்.

இராவணன் மணந்திட மயனிடம் பெண்கேட்க
வரனது சாதகப் பொருத்தமும் பார்க்கையிலே
இருவரின் முதல்சிசு குலத்தினை மாய்த்திடுமே
பரம்பரை செழித்திட குழந்தையைக் கொல்என்றார். 15

மண்டோதரியை மணந்து கொள்ள வேண்டும் என்று மாயாசுரரிடம் இராவணன் பெண் கேட்டுக் கொண்ட போது, அவருடைய ஜாதக கணிப்பின் படி, இந்த தம்பதிகளுக்குப் பிறக்கும் முதல் குழந்தை இராவணனின் வம்சத்தை அழித்து விடும் ஆகையால் முதல் குழந்தை பிறந்தவுடன் அதைக் கொன்று விட வேண்டும் என்று மயன் எச்சரிக்கை விடுத்தார்

குழந்தை பிறந்ததும் கொன்றிட எண்ணிய
இல்லான் தடுத்து மகவினைக் - கொல்வது
பாவம் குலமே இலாதுபோகும் விட்டிட 
வேண்டி அழுதாள் அவள் 16

இல்லான் - கணவன்

தங்களுக்குப் பிறந்த முதல் குழந்தையைக் கொல்லத் துணிந்த தன்னுடைய கணவன் இராவணனைத் தடுத்து, குழந்தையைக் கொல்வது மாபாவம் அது நம் குலத்தையே அழித்து, நமக்குச் சந்ததியே இல்லாமல் செய்துவிடும் இக்குழந்தையைக் கொள்ள வேண்டாம் உயிரோடு விட்டுவிடு என்று மன்றாடி அழுது புலம்பினாள் தாய்மை குணம் கொண்ட மண்டோதரி. 

பெற்ற பிள்ளை உற்றார் உறவினர்
சுற்றம் யாவும் மாய்ந்தார் போதிலும்
பற்றி வந்த சீதை விட்டிடு
மற்ற யாவும் நம்மோ டிருக்குமே. 17

நாம் பெற்ற பிள்ளைகள் நம்மோடு வாழ்ந்தவர் நம் உறவினர் எல்லோரும் இறந்துவிட்டனர். இப்போதாவது சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிடு. இனி இருப்பது அனைத்தும் நம்மோடு இருக்கும் என்றாள் மண்டோதரி.

போரின் இறுதியில் ராவணன் மாய்தபின்
வீர மரணம் அடைந்தவீட்டுக் -  காரருடல்
மேல்விழுந்து ஆரத்தழுவி ஏங்கி உயிர்நீத்து
நீள்புகழ் பெற்றாள் அவள் 18

இராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த போரின் இறுதியில் இராவணன் இராம பாணம் பாய்ந்து இறந்தான். வீர மரணம் அடைந்த தன்னுடைய கணவனின் உடல்மேல் விழுந்து புரண்டு புலம்பி அழது ஆரத் தழுவி ஏக்கம் கொண்டு பின் தன்னுயிரை நீத்து அழியாப் புகழை அடைந்தாள் மண்டோதரி.