Wednesday, September 25, 2024

வீர தமிழரசி வேலுநாச்சியார்

பெண்ணென்றால் மென்மையென்று
பேதையர்கள் சொன்னதுண்டு
மண்ணாளும் பெண்ணிங்கே
மண்காத்த கதைகேளீர்
அன்னியர்கள் நம்நாட்டை
ஆளவந்த போதினிலே
தன்னந்த னியாயிருந்து
வென்றெடுத்த கதைகேளீர்
பெண்ணினத்தின் அடையாளம்
வீரத்தின் விளைநிலமே
விண்முட்டும் புகழ்கொண்ட
வீரநங்கை கதைகேளீர்
ஆண்துணை இல்லையென்றால்
அஞ்சுகின்ற பெண்களுண்டு
ஆணாக மாறிபகை
விரட்டியவள் கதைகேளீர்
சிவகங்கைச் சீமையிலே
வாளெடுத்த வீரமங்கை
புவனமெங்கும் புகழ்பரவி
பெருமைகொள்ளும் கதைகேளீர்
இந்நாளில் சுதந்திரமாய்
எல்லோரும் வாழ்வதற்கு
முந்நாளில் வரலாறாய்
ஆனமங்கை கதைகேளீர்.