Thursday, September 26, 2024

குமரக் குழமகன்

தரணிகாக்க வந்த சிவபாலன் நெற்றி
நெருப்பில் உருவாகி பொய்கை தவழ்ந்தவேலன்
கார்த்திகை பெண்கள் வளர்க்க வளர்ந்தவனே
பார்வதி அன்னையால் சண்முக மானாவா
தேவர் குலம்காக்க வந்தவனே சித்தனே 05
தேனும் தினைமாவும் உண்பவனே கந்தனே
நம்பியவர்க் காத்திடும் இளையோனே சக்திபாலா
கொஞ்சி தமிழ்பேசும் பிள்ளையே தேவசேனா
மும்மூர்த்தி யான பரம்பொருளே சித்தனே
சந்தனம் குங்குமம் தேக மணந்திட 10
எங்கும் நிறைந்திருக்கும் பேரழகே முத்தப்பா
வேதப் பொருள்உரைத்த ஆசானே சேயோனே
பேதமின்றி பக்தர்க் கருள்வழங்கும் நாதா
அருண கிரிவென்றி மாலை கவிரா
யருயிர் காத்த மயிலா சலனே 15
பழத்திற்கு கோபித்து ஆண்டிவடி வானவனே
வேல்வடிவில் நின்று வினைதீர்ப் பவனே
தருமம் நிலநாட்ட வந்தவனே கந்த
புராண தலைவனே காந்தள் மலர்விரும்பி
செந்நிற மேனியனே சேவற் கொடியோனே 20
குன்றமர்ந்து காட்சி தரும்சிலம்பா தேசிகா 
யானை வளர்த்தமகள் தேவர் பரிசேற்றாய்
யானை அனுப்பி பயம்கொள்ள வைத்தவனே
வள்ளி மனம்கவர்ந்த தேவனே மால்மருகா
பிள்ளை எனநினைத்த சூரர் வதைத்தவனே 25 
கள்ளமில்லா பக்தர் கரம்கொண்டு காப்பவனே
ஆழிப் பதம்வருட செந்தூர் உரைபவனே
ஆழி உறைபவனின் அன்பு மருமகனே 
அன்னை மடியமர்ந்த முத்துக் குமரா
பணிந்து புகழரைத்தேன் நான் 30