மணிகண்டன் மும்மணிக்கோவை
காப்பு
தவக்கோல நாயகன் வில்அம்பு
ஏந்தி
புவியில் மகிசி அழிக்க
– அவதரித்தோன்
ஓங்கு புகழ்பாட பாரதப்போர்
வென்றெடுத்த
பாண்டவர் நாயகி காப்பு
தவக்கோலத்தில் இருப்பவர். வில்லையும் அம்பையும் கையில் தாங்கியவர். மகிசி என்னும்
அரக்கியை அழிக்க பூமியில் பிறபெடுத்தவர். அத்தகைய மணிகண்டனின் புகழைக் கூறுகின்ற மும்மணிக்கோவை
என்னும் நூல் படைத்திட பாரதப் போரில் வெற்றிகொண்ட பஞ்ச பாண்டவர்களின் தலைவி பாஞ்சாலி
இருப்பாள் காப்பு.
அகத்தியர் சாபம்
முன்னொரு காலத்தில் தவத்தின்
மிக்க
முனிவர் ஒருவர் இருந்தார்
அவர்பெயர்
வரமுனி இவரின் தவத்தின்
பெருமை
அறிந்த அகத்தியர் அவரைக்
காண
அவர்குடில் வந்தார் வருவது
அறிந்தும்
தவத்தால் ஆணவம் கொண்ட முனிவர்
குருமுனி மதியா அவம தித்தார்
பொறுமை இழந்த தமிழ்முனி
அவரை
எருமைத் தலையுடன் பிறப்பாய்
என்று
சாபம் கொடுத்துப் புறப்பட
லானார்.
சாபம் பெற்ற வரமுனி தனது
தவறு உணர்ந்து விமோசனம்
வேண்டி
அவரைப் பணிந்தார் இட்ட சாபம்
திரும்பப் பெறுதல் இயலாது
மீண்டும்
பிறவி எடுத்து அன்புளம்
கொண்ட
திரிசடை துணையாள் ஆட்கொண்டு
விமோசனம் அடைவாய் என்றார் அகத்தியரே. 01
முன்பு ஒருகாலத்தில் தவவலிமை மிக்க முனிவர் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர்
வரமுனி. தவம் செய்து வரங்களைப் பெறுவதில் சிறப்புடையவர் என்பதால் இவரைக் காண அகத்தியர்
அவரது குடிசைக்கு வந்தார். குருமுனியான அகத்தியர் வருவரு அறிந்திருந்தும் தன்னுடைய
தவத்தின் அகந்தையினால் அவரைப் பொருட்படுத்தாமல் இருந்தார். கோபம் கொண்டதமிழ்முனி, நீ
எருமைத் தலையுடன் பிறப்பாய் என்று சாபம் கொடுத்து புறப்பட்டார். சாபம் பெற்ற வரமுனி
தன் தவறினை உணர்ந்து, சாபவிமோசனம் வேண்டி நின்றார். வரம் கொடுத்தது கொடுத்ததுதான் திரும்பப்பெற
இயலாது. மீண்டும் பிறந்து, அன்பு உள்ளம் கொண்ட தாயான ஈசனின் துணைவியான பார்வதி தேவியே
துர்க்கையாக அவதரிப்பாள் அவளாள் ஆட்கொள்ளப்பட்டுச் சாப விமோசனம் அடைவாய் என்றார்.
ரம்பனின் தவம்
அந்தநேரம் ரம்பன் அசுர தலைவன்
நெருப்புக் கடவுள் உளம்நினைத்து
- சர்வ
வலிமைகொண்ட பிள்ளை வரம்வேண்டி
ஒற்றை
விரலூன்றி செய்தான் தவம் 02
வரமுனி சாபம் பெற்ற அதே சமயம், ரம்பன் என்ற அசுர குலத் தலைவன்
யாரும் வெல்ல முடியாத வலிமை மிக்க பிள்ளை வரம்வேண்டி அக்னி தேவனை நினைத்து, நிலத்தில
ஒற்றை விரல் ஊன்றி தவம் செய்து கொண்டிருந்தான்
ரம்பன் பெற்ற வரம்
தவத்தால் மகிழ்ந்த நெருப்புக்
கடவுள் வரத்தினைக்கேள்
அவற்றை உனக்கு மகிழ்வாய்
அளிப்பேன் எனமொழிந்தார்
உவப்பில் சகல வலிமை மகவு
வேண்டுமென்றான்
எவர்முதல் கூடினும் அத்தகு பிள்ளை பிறந்திடுமே 03
ரம்பன் செய்த தவத்திற்கு மகிழ்ந்து நெருப்புக் கடவுளான அக்னி
தேவன் உனக்கு வேண்டிய வரத்தினைக் கேள் என்று சொல்ல, ரம்பன், தனக்கு யாராலும் வெல்ல
முடியாத மகன் வேண்டும் எனக் கேட்டான். அக்கினி தேவனும் முதலில் நீ எந்த உயிரினத்தைப்
பார்க்கிறாயோ அதன் மூலம் உனக்கு நீ கேட்ட பிள்ளை பிறப்பான் என்று வரமளித்தார்.
ரம்பன் பெற்ற பிள்ளைகள்
பிள்ளை வரத்தைப் பெற்ற ரம்பன்
கொள்ளை ஆசை கொண்டான் அவன்தான்
முதலில் கண்ட மகிஷினி என்னும்
மிதவேக காட்டு எருமை யோடு
தானும் எருமை உருவேற்று
பிள்ளை இரண்டு பெற்றெடுத் தானே 04
தான் நினைத்த வரத்தினைப் பெற்ற ரம்பன், மிகுதியான ஆசையினால்
தவத்தில் இருந்து வெளியே வந்தான். அவன் முதன் முதலில் கண்டது ஒரு காட்டெருமை. அதன்
பெயர் மகிஷினி என்பதாகும். தானும் ஒரு காட்டெருமையாக மாறி அதனுடன் சேர்ந்து, மகிஷாசுரன்,
மகிஷி என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தான்.
மகிசாசுரன் தவம்
பெற்றமூத்த பிள்ளைபல ஆயிரம்
ஆண்டு
சுயம்புவை வேண்டி கடுந்தவம்
– செய்தான்
பிரம்மனும் பூரித்து உள்ளம்
இரங்கி
வரத்தினைகேள் என்றார் மகிழ்ந்து 05
சுயம்பு - பிரம்மன்
ரம்பன் பெற்றெடுத்த மூத்த பிள்ளையான மகிஷாசுரன், பத்தாயிரம்
ஆண்டுகள் பிரம்மனை நினைத்து கடுந்தவம் செய்தான். பிரம்மனும் உள்ளம் மகிழ்ந்து உனக்கு
வேண்டிய வரத்தினைக் கேள் மகிழ்வாய் தருகிறேன் என்றார்.
பிரம்மரின் கூற்று
மகிழ்ந்த அசுரன் தனக்கு
மரணம் இலாதவாழ்வு
மகிழ்வாய் அளிப்பாய் எனவரம்
கேட்டான், பிரம்மதேவர்
உகத்தில் பிறந்தால் ஒருநாள்
இறந்துதான் ஆகவேண்டும்
மகத்தான
வேறு வரம்கேள் எனசொன்னார் நான்முகனே 06
பிரம்மதேவர் கேட்டவரம் கொடுப்பதற்கு இசைந்ததால் மகிழ்ந்த
மகிஷாசுரன், தனக்கு மரணம் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்ற வரம் கேட்டான். இந்த உலகத்தில்
பிறந்தவர் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும். அதுதான் உலக நீதி. ஆகவே, வேறு வரம் கேள் தருகிறேன்
என்றார் பிரம்மதேவர்.
மகிசாசுரன் பெற்ற வரம்
நான்முகன் சொன்னதற்கு மாற்று வழிதேடி
ஆண்களால் தேவரால் பூத கனங்களால்
மிருகமென யாராலும் எனக்கு
மரணம்
வரக்கூடாது என்றவரம் வேண்டும்
என்றான்
பெண்கள் மென்மை யானவர்கள்
அவரால்
தனக்கு மரணம் வராது என்றநோக்கில்
இந்தவரம் கேட்டுப் பெற்றான்.
எந்தவரம்
கேட்டானோ அந்தவரம் அளித்தாரே 07
பிரம்மதேவர் சொன்னதைக் கேட்டு வேறு வழியைத் தேடினான். அப்போது,
கன்னிப் பெண்கள் மென்மையானவர்கள். பயந்த சுபாவம் உடையவர்கள். அவர்களால் தனக்கு எந்த
விதத்திலும் துன்பம் ஏற்படாது என்ற எண்ணத்தில, ஆண்களால், தேவர்களால், பூதகனங்களால்,
மிருகங்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.
மகிசாசுரன் செய்த கொடுமைகள்
அளித்த வரத்தால் தனக்கொன்றும்
நேராது
என்று விலங்குகள் தேவர்
– முனிவர்
மனிதர் எனப்பல ருக்கும்
கொடுமையும்
துன்பமும்
செய்தான் அவன் 08
பெற்ற வரத்தால் தனக்கு எந்த விதத்திலும் மரணம் ஏற்படாது என்று
நினைத்த மகிஷாசுரன், தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், மனிதர்கள், விலங்குகள் எனப் பல
உயிர்களுக்கும் பல்வேறு துன்பங்கள் கொடுத்து கொடுமைகள் செய்து வந்தான்.
தேவர்கள் முறையீடு
அவனின் செயலால் வருந்திய
தேவர் அனந்தனிடம்
அவத்தைகள் கூறி இதனில் இருந்து
விடுபடவும்
குவலயம் மூன்றும் அமைதி
பெறவும் வழிபகர்வீர்
கவலைகள்
போக்கியே தங்களைக் காத்திட வேண்டினரே 09
மகிஷாசுரனின் செயல்களால் துன்பம் அடைந்த தேவர்கள், தாங்கள்
படும் துன்பங்களைக் கூறி இதிலிருந்து விடுபடவும் மூன்று உலகம் அமைதி பெறவும் வழிசொல்ல
வேண்டுமென்றும் தங்களின் கவலைகளைப் போக்கிக் காக்க வேண்டுமென்றும் மிகாவிட்ணுவிடம்
தஞ்சம் அடைந்தனர்.
துர்கை அவதாரம்
வேண்டுதல் கேட்ட திருமால்
வரம்கொடுத்த
நான்முக னிடத்து வரத்தின்
தன்மை
அறிந்து கொண்டு பெண்ணால்
மட்டுமே
மரணம் நிகழும் பராசக்தி
யால்தான்
அழிக்க இயலும் என்றார் விட்ணு.
மும்மூர்த் திகளும் ஒன்றாய்
இணைந்து
இந்திரன் முதலோர் தங்களின்
சக்தியை
ஒன்றாய் திரட்டி முக்குணத்
தோடு
பெண்உரு வாக்கி தங்களின்
ஆயுதம்
அளிக்க, சிங்க வாகினியாய்
அம்பாள்
தோற்றம் கொண்டெ ழுந்தாளே 10
தேவர்களின் வேண்டுதல்களைக் கேட்டு, வரம்கொடுத்த நான்முகன்
இடத்தில் வரத்தின் விவரங்களைக் கேட்டறிந்து, பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனுக்கு அழிவு
நேரும் என்பதை உணர்ந்து, சிவன், திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் தங்களின்
சக்திகளை ஒன்றாய் திரட்டி, தங்களின் ஆயுதங்கள் கொடுத்து ஆக்கிய பெண், சிம்ம வாகினியாய் திருமகளின் அம்சம் கொண்டு தோற்றம்
கொண்டாள்.
துர்கையின் தோற்றம்
கொண்ட உருகண்கள் மூன்றுகரம்
மூவாறு
சங்கொடு சக்கரம் சூலம்வில்
– அங்குசம்
கந்தம் பரசு கதைகடகம் அம்பு
தனுசுயாவும்
ஏற்றாள் படை 11
பெண் உருவம் கொண்ட துர்க்கா தேவி, மூன்று கண்கள், பதினெட்டு
கைகள் கொண்டு மகாலட்சுமியாய் காட்சி தந்தாள். அவள் கரங்களில், சங்கு, சக்கரம், சூலம்,
அம்பு, அங்குசம், பரசு, கதை, கடகம், அம்பு, தனுசு முதலான படைக் கருவிகளை ஏற்றாள்.
மகிசாசுர வதம்
படைபலம் கொண்ட மகிசா சுரனை
அரிஅமர்ந்தோள்
இடம்தெரி யாமல் அழிக்க நினைக்க
பலஉருவில்
உடல்உரு மாற்றி பலவித மாகபோர்
செய்தவனை
கடாவின்
உருவில் திரிசூலம் கொண்டு அழித்தனளே 12
மிகுதியான அசுரப் படைகளைக் கொண்ட மகிசாசுரனைச் சிம்ம வாகினி
அழிக்க நினைக்க, அவன் பல்வேறு உருவங்களைக் கொண்டு போர் செய்தான். இறுதியில் எருமைக்
கடாவின் உருவேற்று போர் செய்யும் போது தன்னுடைய சூலாயுதத்தால் சூரனைக் கொன்று மாய்த்தாள்.
மகிசியின் புலம்பலும் பெற்ற வரமும்
அழிந்த அண்ணனின் நிலைகண்டு
கலங்கி
விழுந்து புலம்பி புரண்டழுதாள்
மகிசி.
தமயன் இறப்பிற்கு காரண மான
இந்திரன் முதலோர் பழிவாங்க
எண்ணி
அதற்கான சக்தியும் இறப்பிலா
வாழ்வும்
பெற்றிட வேண்டி பிரம்மனை
நோக்கி
நீண்ட காலம் கடுந்தவம் புரிந்தாள்
நான்முகன் அவள்முன் தோன்றி
என்ன
வரம்வேண்டும் என்று கேட்டார் மகிசி
வரமாய் தனது சகோதரனை கொன்றவரை
அழிக்கும் சக்தி வேண்டும்
என்றும்
தனக்கு யாராலும் எதனாலும்
மரணம்
நேரக் கூடாது என்றும் வேண்டினாள்.
நான்முகன் இயற்கையை வெல்ல
யாராலும்
முடியாது வேறு வரம்கேள்
என்றார்.
சற்று நிதானம் கொண்டு தன்அழிவு
இருஆண் களுக்கு பிறக்கும்
குழந்தையால்
மரணம் நேர வேண்டும் என்றுமக்
குழந்தை மனிதனாய்ப் பிறக்க
வேண்டும்
பன்னிரண் டாண்டு ஒருவ ருக்கு
பணிவிடை செய்ய வேண்டும்
அதன்பிறகே
என்இறப்பு நிகழ வேண்டும்
தேவர்
உலகம் கைப்பற்றி ஆளவேண்டும்
என்னுடல் ரோமங்கள் நான்நினைத்த
நேரத்தில்
எனைபோல் மாற வேண்டும் வேண்டா
மென்றால் மறைதல் வேண்டும்
எனப்பல
வரங்கள் வேண்டு மென்று கேட்டாள்
அவ்வாறே வரம்தந்து மறைந்தார்
பிரம்மர்.
இவ்வா றவள்வரம் கேட்ட தற்கு
பிள்ளையை ஆண்களால் பெற்றெடுக்க
இயலாது
அதுவும் பூமியில் மனிதனாய்
வாழ இயலா தென்ற எண்ணமே.
13
அண்ணன் மகிசாசுரன் துர்காதேவியால் இறந்தான் என்ற செய்திகேட்டு
கலங்கினாள். விழுந்து புரண்டு புலம்பி அழுதாள். அண்ணன் அழிவிற்குக் காரணமானவர்களை வழிவாங்க
நினைத்தாள். அதற்கான சக்தியும் இறப்பிலா வாழ்வும் பெற்றிட பிரம்மனை நோக்கி பல ஆயிரம்
ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். தவத்தை வியந்த பிரம்மதேவர் அவள்முன் தோன்றி என்னவரம்
வேண்டும் என்று கேட்டார். அதற்கு மகிசி, எனது சகோதரனைக் கொன்றவர்களை அழிக்கும் சக்தி
வேண்டும். தேவர்களாலும் மனிதர்களாலும் விலங்காலும் எந்த நோயாலும் அழிவில்லாத வரம்வேண்டும்
என்றாள். அதற்கு நான்முகன், இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. பிறந்தவர் இறந்தே ஆகவேண்டும்.
இதைவிடுத்து வேறுவரம் கேள் என்றார்.
அதற்கு மகிசி
சற்று நிதானமாக யோசித்து, இரு ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தையால் எனக்கு மரணம் நேரவேண்டும்.
அக்குழந்தை மனிதனாய்ப் பிறக்கவேண்டும். அது, பன்னிரண்டு ஆண்டு காலம் ஒருவருக்குப் பணிவிடைகள்
செய்ய வேண்டும். அதன் பிறகே அவனாள் என் இறப்பு நிகழவேண்டும். மேலும் என் உடல் ரோமங்கள்
நான் நினைத்த நேரத்தில் என்னைப் போல மாறவேண்டும். நான் மறைய வேண்டும் என்றால் அவை மறைந்துவிட
வேண்டும் இத்தகைய வரம் எனக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற்றாள். அவ்வாறே வரம் தந்து
மறைந்தார் நான்முகன்.
மகிசி இவ்வாறு
வரம் கேட்டதற்கு காரணம், ஆண்களால் பிள்ளைகளைப் பெற்றெடுக்க இயலாது. அவ்வாறு பிறந்தாலும்
அது பூமியில் மனிதனாய் வாழ இயலாது என்று நினைத்ததேயாகும்.
மகிசிபடை
எண்ணியதைப் பெற்ற மகிழ்ச்சியில்
யாராலும்
தன்னை அழிக்க இயலாது – என்று
பெருமிதம் கொண்டுரோமத் தாலே
தனைபோல்
பெரும்படை
செய்தாள் அவள் 14
தான் நினைத்த வரத்தினைப் பெற்ற மகிழ்ச்சியில் மகிசி, தன்னை
யாராலும் அழிக்க இயலாது என்ற பெருமிதம் கொண்டாள். மேலும் தன்னுடைய ரோமத்தால் தன்னைப்
போலவே பெரும்படைகளை உருவாக்கினாள்.
தேவர்களின் தலைமறைவு
அவளின் படைகள் அதிர்வலை
யோடு பெரும்புயலாய்
புவிவிட்டு தேவர் உலகம்
விரைவாய் நகர்ந்தனவே
அவளின் வருகை அறிந்தவர்
பெற்ற வரத்தினாலே
அவளுட னான எதிர்ப்பினை விட்டு
மறைந்தனரே 15
மகிசி தனது ரோமத்தால் தன்னைப் போலவே பல ஆயிரக் கணக்கான மகிசி
படைகளை உருவாக்கினாள். பின்னர், பூமியை விட்டு பெரும்புயலாய், ஆரவாரத்தோடு இந்திரலோகம்
சென்றாள். இவளின் வருகையை அறிந்த தேவேந்திரன் முதலான தேவர்கள் எதிர்ந்துப் போராட எண்ணினான்.
ஆனால், தேவகுரு பிரகஸ்பதி இந்திரனைத் தடுத்து நிறுத்தி, அவள் பெற்ற வரத்தின் தன்மையை
கூறி, அவளை எதிர்க்கும் காலம் வரும்வரை தேவர்கள் அனைவரும் இந்திரலோகம் விட்டு பாதுகாப்பான
இடத்திற்குச் செல்லுங்கள் என்று ஆலோசனை வழங்க, அனைவரும் மறைந்து கொண்டனர்.
தேவகுரு ஆலோசனை
மறைந்தது கண்டு இந்திர உலகின்
அரசி யாகி அசுரர் துணையால்
மூன்று உலகையும் ஆளத் தொடங்கினாள்
தேவ நாதர் இதனைக் கண்டு
வெகுண்டு இயலாமை எண்ணி வருந்தி
அரக்கி வெல்லும் வழிகள்
கேட்டார்.
இந்திரன் கேள்விக்கு தேவகுரு,
அவளெடுத்த
இந்தப் பிறவியின் நோக்கம்
மொழிந்தார்
முந்தைய பிறவியில் தத்தாத்
ரேயரின்
மனைவி யாக லீலாவதி என்னும்
பெயரில் வாழ்ந்து வந்தாள்தன்
கணவனுக்கு
அவள்மேல் அன்பு இருந்தது
ஆனால்
சிற்றின்ப ஆசை இல்லை ஒருநாள்
தன்மனைவி இடம்நான் பிறவி
எடுத்ததன்
நோக்கம் முடிந்தது விடைகொடு
சந்நியாசம்
போகிறேன் எனச்சொல்ல நாதனே
அவதார
நோக்கம் முடியலாம் எனினும்
இல்லறத்தில்
நல்ல கணவனாய் மனைவிக் கின்பம்
தரும்நோக்கம் இன்னும் முடிய
வில்லை
அவ்வா றிருக்க உங்கள் அவதாரம்
எப்படி நிறைவு பெறுமென மொழிந்தாள்
சிற்றின்பம் என்பது ஒருமாயை
அதற்கு
முக்கி யத்துவம் கொடுக்க
வேண்டாம்
என்று உபதேசம் செய்ய ஏற்கவில்லை
என்னுடைய ஆசை முழுமை பெற்றபின்
என்னை விட்டுச் செல்லுங்கள்
அதுவரை
விடைபெற அனுமதிக்க மாட்டேன்
என்றாள்.
தடையாய் இருக்கும்நீ அடுத்த
பிறவியில்
எருமையாய் பிறப்பாய் எனசாபம்
விடுத்தார்.
நிறைவேறா ஆசையில் இருந்த
அவளும்
அடுத்து பிறப்பிலும் என்துணை
யாகி
கிடைக்கும் சுகத்தை அனுபவிப்
பீரே
எனஎதிர் சாபம் விடுத்து
தனது பிறவியை அவள்முடித்
தாளே 16
இந்திர லோகம் விட்டு தேவர்கள் அனைவரும் மறைந்து கொண்டதை அறிந்த
மகிசி, அசுரர்கள் அனைவரையும் வரவழைத்து தானே அரசியாகி வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம்
மூன்றையும் ஆளத் தொடங்கினாள். இந்நிகழ்வை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் இந்திரன் அரக்கியை
வெற்றி கொள்ளும் வழிகள் என்ன என்பதை தேவ குருவிடம் கேட்க, அவள் எடுத்த இந்தப் பிறவியின் நோக்கத்தைச் சொல்லத் தொடங்கினார்.
முந்தைய பிறவியில்
லீலாவதி என்னும் பெயரில் தத்தாத்ரேயரின் மனைவியாக வாழந்து வந்தாள். இவருக்கு அவள்மேல்
அளவற்ற பாசம் இருந்தது. ஆனால் சிற்றின்பத்தின் மேல் ஆசை இல்லை. ஒருநாள் தத்தாத்ரேயர்
தன் மனைவியிடம் நான் இந்தப் பிறவி எடுத்ததன் நோக்கம் முடிந்தது. எனக்கு விடைகொடு நான்
சந்நியாசம் போகிறேன் என்று சொன்னார். அதற்கு அவள் மனைவி நாதனே, உங்கள் அவதார நோக்கம்
முடிந்திருக்கலாம். இல்லறத்தில் நல்ல கணவனாய் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய இல்லற இன்பம்
(சிற்றின்பம்) தரும் நோக்கம் இன்னும் முடியவில்லை. மனைவிக்குக் கிடைக்க வேண்டிய இல்லற
இன்பம் அளித்த பின்பே இப்பிறவி முழுமை அடையும் என்றாள்.
இல்லற இன்பம்
என்பது ஒரு மாயை. அதற்கு அவ்வளவு முக்தியத்துவம் தரவேண்டாம் என்று உபதேசிக்க அதை அவள்
ஏற்கவில்லை. இவ்வாறு இருவருக்கும் விவாதங்கள் நடைபெறும் நிலையில் கோபமுற்ற தத்தாத்ரேயர்,
நான் மோட்சம் அடைய தடையாய் இருக்கும் நீ அடுத்த பிறவியில் காட்டெருமையாய் பிறப்பாய்
என்று சாபம் கொடுத்தார். நிறைவேறாத ஆசையில் இருந்த லீலாவதியும் அடுத்த பிறவியிலும்
நீயே என் துணையாய் வந்து இந்தப் பிறவியில் அனுபவிக்காத சுகத்தை என்னுடந் சேர்ந்து அனுபவிப்பாய்
என எதிர் சாபம் விடுத்து அவள்வாழ்வை முடித்துக் கொண்டாள்.
மகிசி யார்?
அவளே மகிசி அவளை அழிக்க
அவள்வரத் தன்மை அறிந்து
- அவளை
எதிர்த்திட வேண்டும் பிரம்மரை
கேட்டு
விதிஅறிவோம் என்றார் குரு. 17
லீலாவதியே மீண்டும் மகிசியாகப் பிறந்திருக்கிறாள். அவளை,
நாம் எதிர்த்துப் போரிட வேண்டும என்றால், பிரம்ம தேவரிடம் அவள் எத்தகைய வரங்கள் பெற்றாள்
என்பதைக் கேட்டறிய வேண்டும் என்றார் தேவகுரு.
பிரம்மதேவரைக் காணல்
குருவுடன் இந்திரன் தேவர்
அனைவரும் ஒன்றிணைந்து
பிரம்மர் இருக்கும் இடத்தை
அடைந்து நிலைபகர்ந்து
வரத்தின் விவரம் எதுவெனக்
கேட்க திசைமுகனும்
வரத்தின் விவரமும் தீர்க்கும்
வழியும் விளம்பினாரே 18
தேவகுருவின் ஆலோசனைகளைக் கேட்டுணர்ந்த தேவேந்திரன், தேவர்கள்
அனைவரையும் அழைத்துக் கொண்டு பிரம்மர் இருக்கும் இடமான சத்தியலோகம் சென்றனர். அவரைக்
கண்டு வணங்கி, மகிசியிடம் தாங்களின் நிலைகளைக் கூறி, அவளுக்குத் தாங்கள் கொடுத்த வரம்
யாது என்பதை கேட்டனர். பிரம்மதேவரும் கொடுத்த வரங்களையும் அதற்கான தீர்வுகளையும் கூறினார்.
சுந்தர மகிசன் தோற்றமும் செயல்களும்
விளம்பிய ஆலாசனை பேரில்
சிவனுடன்
உலக மளந்தோன் காணச் சென்றனர்
வந்த நோக்கம் அறிந்த மாதவன்
சிந்தையில் மூழ்கி உணர்ந்து
பின்னர்
இணைந்து மூவரும் தங்களின்
சக்தியால்
சுந்தர மகிசனை மீண்டுமாய்
படைத்து
மகிசியோ டிணைந்து முந்தைய
பிறவியில்
நிரைவேறா ஆசைகள் முழுமையாய்த்
தீர்த்து
இறுதியில் தேவலோகம் விட்டு
பூமிக்கு
அழைத்துசெல் மொட்சமங்கே
அளிப்போம் என்றனர்.
அழகிய மகிசன் மகிசியைக்
காண
முற்பிறவி பந்தத்தில் கண்டதும்
காதல்வர
இருவரும் மணம்செய்து இல்லற
இன்பத்தில்
மூழ்கி திளைத்து கரைகண்
டிருந்தனர்
தந்தையர் சொல்வழி பின்நாளில்
துணையைப் பூமிக்கு வந்தார்
அழைத்தே 19
உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டமானால அறன், அரியால் மட்டுமே
முடியும் எனவே அவர்களைச் சென்று பாருங்கள் என்று பிரம்மதேவர் கூறிய ஆலோசனைகளைக் கேட்டு
அதன்படி, சிவன் இருக்கும் இடமான கயிலாயம் சென்றனர். அவர் தாங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்
என்பதை நான் அறிவேன் இதற்கான தீர்வை காக்கும் கடவுளான திருமாலால்தான் முடியும் வாருங்கள்
அவரிடம் செல்வோம் என சிவனுடன் அனைவரையும் வைகுந்தம் அழைத்துச் சென்றனர். அங்கு திருமால்,
எதற்காக அனைவரும் வந்திருக்கிறீர்கள் என ஒன்றும் தெரியாதவர்போல் கேட்க, தேவநாதன் விவரங்களைக்
கூறி தங்களைக் காக்கும்படி வேண்டினான்.
மெல்லிய சிரிப்புடன், மகிசியின் முற்பிறவி சாபத்தை அறிந்த
திருமால், அவள் சிற்றின்ப ஆசை நிறைவேறாமல் இறந்ததனால் அதனை அடையும் பொருட்டு, சிவன்,
திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் கைகளை இணைத்து தத்தாத்ரேயரை மீண்டுமாய்,
சுந்தர மகிசனாய் படைத்தனர். அச்சுந்தர மகிசனிடம் மகிசி, முற்பிறவியில் உனக்களித்த சாபத்தின்படி,
தேவலோகம் சென்று மகிசியை மணம்செய்து இருவரும் சிற்றின்பத்தில் முழுமையாகத் திளைத்து,
இறுதியில் அவளைப் பூமிக்கு அழைத்துச் செல். அங்கு அவளுக்கு மோட்சம் கிடைக்கும் என்றுகூறி
தேவலோகம் அனுப்பி வைத்தனர்.
தேவலோகத்தை அரசட்சி செய்து கொண்டிருக்கும் மகிசி, சுந்தரமகிசனை
நேரில் கண்டதும் முந்தைய பிறவி பந்தத்தாலே கண்டதும் காதல் கொண்டனர். அதன்பின் இருவரும்
திருமணம் செய்துகொண்டு, சிற்றின்ப இன்பத்தில் மூழ்கி கரைகண்டனர். அதன்பின், தந்தையர்
சொற்படி இருவரும் பூமிக்கு வந்தனர்.
பத்மாசுரன் வரம்
அச்சமயம் பத்மா சுரன்தவம்
செய்தான்
விசுவும் வரத்தை கொடுக்க
- இசைந்தார்
கரம்தலை வைக்க எரிந்திட
வேண்டும்
வரத்தினைப் பெற்றான் மகிழ்ந்து
20
அதேசமயம் பத்மாசரன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்துகொண்டிருந்தான்.
அவன்முன் தோன்றிய விசுவநாதர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். நான் எவர் தலையில்
கை வைக்கிறேனோ? அவர் சாம்பலாக வேண்டும் என்ற வரத்தை வேண்டி பெற்றான் அசுரன்.
மகிழ்வுடன் பெற்ற வரத்தினை
பத்மா சுரன்உடனே
மகேசன் இடத்திலே சோதிக்க
எண்ணி விரைந்தனனே
மகேசன் பயந்தோடி ஐவேலங்
காயில் ஒளிந்துகொண்டு
முகுந்தா அபயம் எனக்கூக்
குரலிட்டு வேண்டினரே 21
வரம் பெற்ற மகிழ்ச்சியில் அதனை யாரிடத்திலாவது சோதிக்க எண்ணினான்.
அருகில் இருந்த சிவன் தலையிலேயே கைவைத்து பார்த்துவிடுவோம் என்று சிவனை நோக்கி ஓடினான்.
அவன் தலையில் கை வைத்தாலும் சிவன் அழியாமாட்டார். அவ்வாறு நடக்காவிட்டால் வரம் பொய்யாகிவிடும்
என்று நினைத்து அகப்படாமல் அவரும் ஓடினார். அசுரன் விடாது துரத்த, அங்கிருந்த ஐவேலங்
காயில் ஒளிந்து கொண்டார். பிறகு தன்னைக் காக்கும்படி திருமாலுக்கு அபயம் விடுத்தார்.
பத்மாசுரன் அழிவு
வேண்டுதல் கேட்ட நாரணன்
விரைந்து
தாங்கிய மோகினி அவதாரம்
கொண்டு
வாங்கிய அரக்கன் முன்னர்
தோன்றி
தன்னெழில் காட்டி மயங்கச்
செய்தார்
தன்னிலை மறந்த அசுரன் மோகினி
அழகில் மயங்கி தன்தொழில்
மறந்து
விழைவுடன் நெருங்கி ஆசை
கொண்டு
மணம்செய் துன்னுடன் வாழ
வேண்டும்
என்னை மணக்க உனக்கு சம்மதமா?
என்று கேட்டான் அதற்கு மோகினி
சம்மதம் ஆனால் என்னை விடுத்துவேறு
எந்தப் பெண்ணையும் பார்க்கவோ
நினைக்கவோ
மாட்டாய் என்பதை நான்எப்படி
நம்புவது
ஆண்மக னானநீ வேறுபெண்ணைத்
தேடிப்
போகமாட்டாய் என்பது என்ன
நிச்சயம்
உன்தலையில் அடித்து சத்தியம்செய்
அப்போது
உன்னை நம்புகிறேன் என்றதும்
வரம்பெற்ற
சிந்தை ஏதும் இல்லாமல் தலையில்
கைவைத்தான் அந்த நொடியே
சாம்பலானான்
அரக்கன் அழிந்த சேதி சொல்ல
அழகிய மோகினி வடிவி லேயே
திருமால் சென்று விவரம்
சொல்ல
ஐவேலங் காயில் மறைந்து இருந்த
திரிசடை வெளியே வந்துகண்டு
அழகில்
மயங்கி அவருடன் கூடி
அழகிய ஆண்மகன் பெற்றெடுத்
தாரே 22
தனது மைத்துனர் தன்னைக் காக்க வேண்டி அழைக்க, விரைந்து வந்தார்.
அசுரனின் வரத்தையும் அவன் செய்கையையும் அறிந்த அவர், இப்படியே போனால் தன்னையும் சோதிக்க
வருவான். ஆகவே, அவனை மயக்க மோகினி வடிவில் வந்தார். தன்னுடைய அழகைக் காட்டி அவனை மயக்கினார்.
தன்நிலை மறந்த அசுரன் மோகினி அழகில் மயங்கி விருப்பம் கொண்டு அவள்பின் சென்றான். தன்னைத்
திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினான். அதற்கு மோகினி நான் உன்னைத் திருமணம் செய்து
கொள்ள விரும்பிகிறேன். ஆனால், நீ என்னை விட்டுவிட்டு வேற பெண்ணைத் தேடிப் போக மாட்டாய்
என்பதை நான் எப்படி நம்புவது? அவ்வாறு போக மாட்டேன் என்று உன் தலையில் அடித்துச் சத்தியம்
செய். அப்போது நான் நம்புகிறேன் உன்னையே திருமணம் செய்துகொள்கிறேன் என்றாள். வரம்பெற்ற
சிந்தை இல்லத பத்மாசுரன், தன் தலையில் கைவைக்க அந்த நொடியே சாம்பலானான்.
அரக்கன் அழிந்த செய்தி சொல்ல மோகினி வடிவிலேயே சிவனைத் தேடி
திருமால் செல்ல, ஐவேலங்காயில் மறைந்திருந்த சிவன் வெளியே வந்தார். அருகில் நிற்கும்
மோகினி மீது ஆசை கொண்டு அவளைக் கட்டித் தழுவினார். அதனால் அவ்விருவருக்கும் அழகிய ஆண்குழந்தை
பிறந்தது.
குழந்தை அழுகுரல் கேட்டல்
பெற்ற குழந்தையைப் பம்பைநதி
ஓடும்
கரையில் மணிமாலை சூட்டி
- அரசன்
வரும்வழியில் விட்டு சென்றனர்
பிள்ளை
குரல்கேட்டு சென்றான் வியந்து 23
அரிக்கும் அரனுக்கும் பிறந்த அரிஅரசுதனை, பம்பை நதி ஓடும்
கரையில், சிவன் தன் கழுத்தில் இருந்த மணிமாலையை அக்குழந்தைக்கு அணிவித்து, பந்தள நாட்டை
ஆண்டுவரும் பாண்டிய மன்னன் இராசசேகரன் வரும் வழியில் கிடத்திச் சென்றனர். குழந்தையின்
அழுகுரல் கேட்டு, அத்திசை நோக்கி, இங்கு எப்படி குழந்தையின் குரல் என வியந்து சென்றான்.
குழந்தையைக் காணல்
வியந்து குழந்தையை கண்டு
புறமெங்கும் பெற்றவரை
நயந்து படையுடன் தேடி எவரும்
கிடைத்திடாத
பயத்தில் இருக்கையில் வானின்
குரல்கேட்டு குழந்தையினை
பெயர்ந்து மனையகம் கொண்டு சிறப்பாய் வளர்த்தனனே 24
அங்கு குழந்தையைக் கண்டு, தனது படைகளுடன் அக்கம் பக்கம் தேடி,
எவரும் இல்லாத நிலையில், இக்குழந்தை எப்படி வந்தது? யார் இங்கு கொண்டுவந்து போட்டிருப்பார்கள்.
அல்லது இது பூதங்களின் சித்து வேலையாக இருக்குமோ? என்று பலவாராக யோசிக்கலானான். அதன்பின்,
வானிலிருந்து இந்தக் குழந்தையை உன் இல்லத்திற்கு எடுத்துச் சொல். இக்குழந்தையால் உனக்குப்
பல நன்மைகள் ஏற்படும். உன் புகழும் வெளிப்படும் என்று குரல் கேட்க, அக்குழந்தையை அரண்மனைக்கு
எடுத்துச் சென்று சிறப்புற வளர்த்து வந்தான்.
மணிகண்டன் வரலாறு
வளர்ந்துவரும் குழந்தை கல்வி
யோடு
கலைகளையும் சிறப்பாய் கற்றுத்
தேர்ந்தான்
கல்வி வழங்கிய குருநாதர்
இக்குழந்தை
தெய்வக் குழந்தையாகும் குறுகிய
காலத்தில்
கலைகள் யாவையும் திறம்படக்
கற்றான்
வில்வித்தையில் இவனை வெல்ல
யாராலும்
இயலாது என்று அரசனிடம் கூறினார்.
வியந்த அரசரும் கற்றுக்
கொடுத்த
குருவுக்கு மகனின் கையால்
தட்சனை
வழங்க சொன்னார் பெற்றுக்
கொண்டகுரு
வழங்கிய செல்வம் வறுமையைப்
போக்கும்
மனக்குறை போக்க நீஒன்று
செய்யவேண்டும்
என்மகன் பிறவியில் குருடனாய்
ஊமையாய்
பிறந்தான் அவனைப் பேசவும்
பார்க்கவும்
வைப்பது உன்னால் மட்டுமே
முடியும்
அதுவே எனக்கு நிம்மதி தருமென்றார்.
மணிகண்டன் குருமகன் அருகில்
சென்று
தலையில் கைவைக்க ஆசிகள்
வழங்க
குறைகள் நிங்கி பேசபார்க்க
செய்தான்
குருவின் உள்ளம் பூரிப்பு
எய்த
இந்நிகழ்வை யாரிடமும் சொல்லிட
வேண்டாம்
பன்னிரண் டாண்டுகள் கடந்த
பின்னே
என்னுடைய புகழை யாவரும்
அறிவர்
உண்மை அதுவரை தெரியா திருக்கட்டும்
என்று கூறி அரண்மனை வந்து
தன்னுடைய தந்தைக்கு ஒருசேவகன்
போல
பணிவிடை செய்து ஆண்டுகள்
கழித்தார்.
பின்னை நாளிள் தன்னுடை தாய்க்கு
ஒருமகன் பிறந்தான் அவன்பெயர்
ராசராசன்
இருவரும் ஒருவராய் உடன்வளர்ந்
தனரே
அரசரும் வயது முதிர்ச்சியால்
மூத்த
மகனுக்கு மணிமுடி சூட்டி
அரசு
பொறுப்பு வழங்கிட எண்ணி
நாள்குறிதார்
இதனை ஏற்க இயலா அமைச்சன்
ஊரும் பேரும் தெரியா ஒருவன்
ஆள அவன்கீழ் அமைச்சனாய்
இருத்தல்
அவமானம் அதைவிடுத்து அவன்அழித்து
நாட்டின்
பொறுப்பை நானேற்க வேண்டும்
என்று
மணிகண்டன் அழிக்கும் வழிமுறை
ஆய்ந்தான்.
பின்னர் துர்மந்திர வாதிகளை
அழித்து
ஏதேனும் ஒருநோய் வரும்படி
செய்து
தீர்த்துக் கட்டும்படி கேட்டுக்
கொள்ள
பணத்தாசை கொண்ட மந்திர வாதிகள்
குணமிலா அமைச்சன் சொற்படி
நடந்தனர்
அதனால் வெப்புநோயால் பலவீன
மடைந்தார்
இதனால் மனமுடைந்த அரசன்
சிவனிடம்
தன்மகனைக் காக்கும்படி வேண்டி
நின்றார்
மன்னன் மேலும் என்மகன் நோயை
போக்கு வோர்க்கு பரிசுகள்
வழங்கும்
நோக்கில் அறிவிப்பு தந்தார்
பல்லோர்
வந்தும் முயன்றனர் இந்நோய்
இயற்கை
யான தல்ல என்பதால் தோன்றனர்
மன்னன் வருத்தம் மிகுதி
யானது
என்மகனை நீயே வந்து காக்கவேண்டும
திரிபுரன் நோக்கி வேண்டி
நின்றார்
அரசனின் மொழிகள் கொண்ட தோடு
வந்த காரியம் நடந்திட சிவனே
முனிவராய் வந்து நோயினை
நீக்கினார்.
திட்டம் தோற்றது என்று வருந்தி
அடுத்தென்ன செய்யலாம் என்றோ
சித்தான்
அரசி இடத்து உங்கள் மகனிருக்க
வளர்ப்பு மகனை அரசாள நீங்கள்
ஒப்புக் கொன்டீர் அப்படி
நடந்தால்
உங்கள் மகனும் வளர்ந்து
அவனுக்கு
சேவகம் செய்தே வாழ வேண்டும்
நாடாள முடியாது என்று பகர
அரசியும் அதற்கு என்னசெய்ய
வேண்டும்
என்றுகேட்க, நீங்கள் தீரா
தலைவலி
வந்ததுபோல் நடியுங்கள் அரசர்
அழைக்கும்
வைத்தியர்க்கு பணம்கொடுத்
திந்நோய்க்கு மருந்து
புலிப்பாலில் தான்செய்ய
செய்யவேண்டும் அதற்குப்
புலிப்பால் தேவை எனச்சொல்ல
சொல்வோம்.
காட்டிற்குச் சென்று புலிப்பால்
கொண்டுவர
யாரும் முன்வர மாட்டார்கள்
மணிகண்டன்
உங்கள் மேல்உள்ள பாசத்தில்
செல்வான்
அங்கு புலிகள் அவனைக் கொண்டுவிடும்
என்ற ஆலோசனை வழங்கினான்
அமைச்சன்.
அதன்படியே செல்ல முற்பட
அரசர்
ஒருபையில் தேங்கா உணவுப்
பொருள்என
இருமுடி கட்டி இதுஉன்னை
காக்குமென்றார்
இருமுடி யோடு வில்லம்பு
ஏந்தி
வனம்நோக்கி சென்றார் காடு
சென்று
பம்பா நதிக்கரை ஓய்வு கொள்ள
முனிவர் ரிசிகள் அறிந்து
வணங்கி
எங்களைக் காக்கும் இறையே
பொன்ன
லம்பல மேட்டுல் ஆலயம் அமைத்தோம்
அங்கமர்ந்து ஆசிகள் தருக
வென்றனர்
முனிவர்கள் ஆசையை நிறைவேற்றி
வைத்தார்.
அச்சமயம், இந்திரன் விரட்டி
அடித்த
அசுரர் மகிசிதேடி உன்மை
மொழிந்தனர்.
சுந்தர மகிசன் மீதுள ஆசை
மெல்ல குறைந்து தன்னிலை
உணர்ந்தாள்
மகிசிபடை மீண்டு திரட்டி
போரிட
இந்திர லோகம் விரைந்து சென்றாள்
இந்திரன் அவளுடன் போரிட்டு
தோற்று
பந்தளன் மைந்தன் நாடி வந்தான்
அவதார நோக்கம் உணர்ந்த பூதநாதர்
அரக்கி யோடு போரிட விழைந்தார்
தன்னை எதிர்க்க ஒருசிறுவன்
வருகிறானா?
என்று ஏளனம் கொண்டு வந்ததும்
தனதிரு கொம்மபால் குத்தி
யழிக்க
தன்பலத் தோடு ஓடி வந்தாள்
கொம்பை பிடித்து சுழற்றி
அடிக்க
அழுதை மேட்டில் வந்து விழுந்தாள்
எழுந்திருக்க முயல்கையில்
அவள்மேல் ஏறி
அழுத்தி நின்றார் வலிதாங்கா
நிலையில்
பெற்ற வரத்தை நினைவு கூர்ந்து
அரிஅர சுதனே இவனென் றுணர்ந்து
இறக்கும் நிலையில், தெரிந்தும்
தெரியாதும்
செய்த பாவங்கள் பொறுத்திட
வேண்டும்
எனக்கு நீயே முக்தியும்
அளிப்பாய்
என்று வேண்டிட இருவரின்
மைந்தன்
கையெடுத்து அவள்தலை வைக்க
பாவங்கள்
விலகி அவளின் நற்குணம் பெண்ணுரு
கொண்டு மணம்செய்து கொள்ள
வேண்டியது.
இந்த பிறவியில் திருமணம்
என்பதில்லை
எனது சகோதரி யாக ஏற்றேன்
மஞ்சமாதா வாக என்னுடன் இருப்பாய்
என்னை வணங்குவோர் உன்னையும்
வணங்குவர்
என்று ஆசிகள் வழங்கி சொன்னார்
மகிசி வதத்தை அறிந்த தேவர்
மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பறித்
தெழுந்தனர்.
வந்த காரியம் முடிந்தது
உன்னுடன்
ஆண்பெண் தேவர் ஆண்பெண் குட்டி
வேங்கை யாகியும் தேவ நாதன்
வாகன மாகியும் உன்னுடன்
வருவர்
இவற்றைக் கண்டார் உன்புகழ்
அறிவர்
சிவனார் சொல்லி மறைந்து
போனார்
பந்தளம் நோக்கி அவ்வாறு
செல்ல
வேங்கைக் கூட்டம் வருவது
கண்டும்
வேங்கை யோடு அரிசுதன் கண்டும்
வியந்து பயந்து கூக்குர
லிட்டு
இங்கும் அங்கும் மக்கள்
ஓடினர்.
தங்கள் இல்லம் புகுந்து
மறைந்தனர்
அலறல் சத்தம் கேட்ட அரசர்
நிலையறி யாது உள்ளம் குழம்பி
அரண்மனை இறங்கி வீதிக்கு
வந்து
புலிப்படை படையோடு புலிமேல்
அமர்ந்து
கம்பீர மாக வருதல் கண்டார்
வாசல் நின்ற தந்தை கண்டு
கன்றினைப் போல துள்ளி குதித்து
பாதம் தொட்டு வணங்கி நின்றார்
தாய்நோய் போக்க புலியுடன்
வந்தேன்
பாலைக் கரந்து நோய்தீ ரென்றார்
காடு சென்ற போதே நோய்தீர்ந்தது
காட்டிலே வேங்கை விட்டிட
பணிந்தார்
அப்போ தங்கே அகத்தியர் வந்து
அப்பன் யாரென விவரித்து
சொன்னார்
மன்னன் முழுதும் கேட்டு
மகிழ்ந்து
தனக்கு மகனாய் வந்து சேவகம்
செய்தது என்தன் இறையே உபதேசம்
செய்து ஆசிகள் வழங்கிட வேண்டினர்
மன்னன் வேண்டுதல் நிகழ்த்திய
பின்னர்
அரன்மக னுக்கு ஆலயம் அமைக்க
விரும்பிய அரசன் கேட்க,
நீலிமலை
உச்சியில் சபரி பக்தைஎன்
வரவெண்ணி
எண்ணி தவம்செய் அவள்மலை
மேலே
எனக்கு ஆலயம் அமைத்திட வேண்டும்
எனைக்கான வருவோர் விரதம்
இருந்து
பதினெட்டு தத்துவம் விளக்கும்
படிகள்
கடந்துவர முக்தி அவர்க்குத்
தானே
கிட்டும் சபரி வாழும் மலையை
அப்பெயர் இட்டே அழைத்தல்
வேண்டும்
என்பன போன்ற விதிகள் கூறி
அமைந்திடும் இடத்தை தெரிவும்
செய்தார்.
அரசரும் விதிமுறை ஆலயம்
நிறுவி பணிவுடன் வழிபட்
டாரே 25
பந்தள தேசத்தில் பாண்டியன் இராசசேகரன் அரண்மனையில் குழந்தையாய்
வளர்ந்துவரும் மணிகண்டன், கல்வியோடு கலைகள் பலவற்றையும் நன்கு கட்டுத் தேர்ந்தான்.
கல்விக் கற்றுத் தந்த குருநாதர், இக்குழந்தை ஒரு தெய்வக் குழந்தையாகத் திகழ்கிறது.
குறுகிய காலத்திலேயே நான் கற்றுத் தந்த அனைத்தையும் எளிமையாகக் கற்றக்கொண்டான். வில்வித்தையில்
இக்குழந்தையை வெல்ல யாராலும் முடியாது என்று பாண்டியனிடம் மணிகள்டனைப் பற்றி பலவாராகக்
கூறினார்.
இவற்றையெல்லாம்
கேட்ட அரசர் வியந்து போனார். மேலும், கல்வி கற்றுத் தந்த குரு நாதருக்கு தன் மகனின்
கையாலேயே பொன்னும் பொருளும் குருதட்சனையும் வழங்கினார். குருநாதர் மணிகண்டனிடம், நீ
வழங்கிய பொன்னும் பொருளும் என் வறுமையைப் போக்கும். என் மனக்குறையைப் போக்க வேண்டுமென்றால்
நீ ஒன்று செய்ய வேண்டும். இவன் என் மகன். இவன் பிறவியிலேயே கண்பார்வையும் காதுகேட்கும்
திறனும் அற்றவனாக உள்ளான். இவனுது குறைகளை உன்னால் தீர்க்க இயலும் என்பது எனக்கு நன்காகத்
தெரியும். எனென்றால் நீ ஒரு தெய்வப் பிறவி என்றார்.
மணிகண்டன்,
குழவின் மகனின் தலையில் கைவைத்து சில மந்திரங்களைச் சொல்லி ஆசிகள் வழங்கினார். உடனேயே,
குருவின் மகன் பேசவும் பார்க்கவும் ஆரம்பித்தான். மகிழ்ச்சி அடைந்த குருநாதரிடம் அரி
மைந்தன், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம். பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர்
இந்த உலகம் என் புகழை அறியும் அவ்வோது சொல்லுங்கள் அதுவரை தெரியாதிருக்கட்டும் என்றார்.
அதன்பின்,
தன்னுடைய தந்தைக்கு ஒரு சேவகன் போல் பல்வேறு பணிவிடைகளைச் செய்தார். பின்னாளில் தன்னுடைய
வளர்ப்புத் தாய்க்கும் தந்தைக்கும் ஒரு மகன் பிறந்தான். அக்குழந்தைக்கு ராசராசன் என்று
பெயரிட்டனர். இருவரும் ஒருவராய் உடன் பிறந்தவர்கள் போல ஒற்றுமையாய் வளர்ந்தனர்.
அரசர் தன்
வயது முதிர்வின் காரணமாக மணிகண்டனுக்கு அரச பதவி வழங்க நாள் குறித்து அமைச்சரிடம் சொன்னார்.
இதனை ஏற்காத அமைச்சர், ஊர் பேர் தெரியாத ஒருவன் ஆள அவன்கீழ் அமைச்சராக பணிசெய்வதா?
அவ்வாறு செய்தான் தனக்கு அவமானம். அதற்குப் பதிலாக, அவனை அழித்து தந்தப் பதவியில் நான்
அமர வேண்டும் என்ற எண்ணினான்.
மணிகண்டனைத்
தீர்த்துக் கட்டவேண்டும் என்ற நோக்கில், துர் மந்தர வாதிகளை அழைத்து, அவனுக்கு ஏதேனும்
ஒரு நோய் வந்து இறக்கும்படி மந்திரங்களைச் செய்ய ஏற்பாடும் செய்தான். பணத்தாசை கொண்ட
மந்திர வாதிகள் அவ்வாறே செய்தனர். இதனால் வெற்பு நோய் வந்து உடலெங்கும் கொப்பளங்கள்
தோன்றின. இதனால் உடல் பலவீனம் அடைந்தான் அரன்சுதன். மகனின் இந்த நிலையைக் கண்ட அரசர்,
வருந்தி என் மகனின் இந்நோயைப் போக்குவோருக்கு பொன்னும் பொருளும் கொடுப்பேன் என்ற அறிவிப்பு
கொடுத்தார். வந்த மருத்துவர்கள் அனைவரும் மருத்துவம் கண்டு தோற்றனர். மேலும் இந்நோய்
இயற்கையானதல்ல இந்நோயை எங்களால் தீர்க்க இயலாது என்றனர்.
மன்னனின்
வருத்தம் மிகுதியானது. நீதான் என்மகனைக் காக்கவேண்டும் என்று சிவனிடம் வருந்தி வேண்டினர்.
அப்போது சிவன் ஒரு முனிவரைப்போல் வந்து தன் மகனின் நோயைக் குணப்படுத்தினார்.
இதனைக் கண்ட
மந்திரி, தன்திட்டம் தோற்றதை எண்ணி வருந்தி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
பின்னர், அரசியிடம் சென்று உங்கள் மகன் இருக்க வளர்ப்பு மகன் நாடாள்வதற்கு எப்படி ஒப்புக்
கொண்டீர். மணிகண்டனுக்கு அரசாட்சி சென்று விட்டால், உங்கள் மகன் அவனுக்கு வாழ்நாள்
முழுவதும் பணிவிடைகள் செய்தே காலம் கழிக்கவேண்டும். நாடாள முடியாது என்பன போல பலவாறு
கூறி அரசியின் மனதைக் கலைக்க முயன்றான்.
இதனைக் கேட்ட
அரசி, என் மகன் நாடாள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். தம் திட்டத்திற்க அரசி
ஒப்புக் கொண்டது எண்ணி மகிழ்ந்தான். அதன்பின் ஆலோசனையும் வழங்கினான்.
அதன்படி, நீங்கள்
தீராத தலைவலி வந்தது போல் நடியுங்கள். அரசர் வைத்தியர்களை அழைக்கச் சொல்லுவார். நான்
வைத்தியர்களுக்குப் பணம் கொடுத்து, இத்தலைவலிக்கு மருந்து புலிப்பாலில்தான் செய்யவேண்டும்.
அதற்குப் புலிப்பால் தேவை என்று சொல்லச் சொல்வோம். புலிப்பால் கொண்டுவர யாரும் முற்பட
மாட்டார்கள். மணிகண்டன் உங்கள் மேல் உள்ள பாசத்தினால் நான் செல்கிறேன் என்று கூறுவான்.
அவ்வாறு காட்டிற்குச் சென்றால் புலிகளால் தாக்கப்பட்டு இறந்துவிடுவான். அதன் பின் உங்கள்
மகன் அரசாட்சி ஏற்க முடியும் என்ற தனது திட்டத்திக் கூறினான் அமைச்சன்.
புலிப்பால்
கொண்டுவர யாரும் செல்லாத நிலையில் மணிகண்டன், அன்னைக்காக நான் காட்டிற்குச் சென்று
புலிப்பால் கொண்டு வருகிறேன். அரசர் எவ்வளவோ தடுத்தும் மணிகண்டன் ஏற்கவில்லை. அதன்படி,
அரசர், ஒரு பையில் தேங்காயும் இன்னொரு பையில் உணவுப் பொருட்களும் என இருமுடிக் கட்டி,
இது உன்னைக் காக்கும் வெற்றியோடு சென்று வா என்று அனுப்ப மனமில்லாமல் வழியனுப்பினார்.
இருமுடியோடு
வில்லையும் அம்பையும் கையில் எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று, பம்பை நதிக்கரையில்
ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் சாஸ்தா. இவரின் வருகையை அறிந்த முனிவர்களும் ரிசிகளும்
ஒன்று கூடி வணங்கி, எங்களைக் காக்கும் கடவுளே நீங்கள் தான் என்றும் உங்களுக்காக பொன்னம்பல
மேட்டில் உங்களுக்காக ஆலயம் அமைத்தோம் அங்கு அமர்ந்து ஆசிகள் வழங்க வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்டனர்.
அச்சமயம், இந்திரனால்
விரட்டி அடிக்கப்பட்ட அசுரர்கள் மகிசியைத் தேடி வந்து, நீங்கள் அரசான்ட இந்திரலோகம்
இப்போது இந்திரன் ஆள்கிறான். எங்களை எல்லாம் தேவர்கள் விரட்டி அடித்துவிட்டனர் என்று
கூற, சுந்தர மகிசன் மீதுள்ள சிற்றின்ப ஆசை மெல்ல மெல்ல குறைந்து தன்னிலை உணர்ந்தாள்.
மீண்டும் மகிசி
படையைத் திரட்டி இந்திரலோகம் விரைந்துசென்றாள். இந்திரன் அவளுடன் போரிட்டுத் தோற்று,
பந்தள ராசனின் மைந்தனான அரிஅர சுதனைத் தேடி வந்தான். தன்னுடைய அவதார நோக்கத்தை உணர்ந்த
மணிகண்டன், மகிசியோடு போரிட இந்திரலோகம் சென்றார். தன்னைக் கொல்ல ஒரு சிறுவன் வருகிறான்
என்று கேள்விப்பட்டு ஏளனம் செய்தாள். பின்னர் இருவருக்குமான சண்டையில், மகிசி தன்னுடைய
இரண்டு கொம்பினால் குத்தி மணிகண்டனைக் கிழிக்க ஓடி வந்தாள். கொம்பைப் பிடித்து சுழற்றி
அடிக்க பூமியில் அழுதை மேட்டில் வந்து விழுந்தாள். எழுந்திருக்க முடியாத நிலையில் பூதநாதன்
அவள்மேல் ஏறி நின்று அழுத்தினார். வலி தாங்க முடியாத நிலையில், தான் பெற்ற வரத்தை நினைத்து,
வந்திருப்பது இரு ஆண்களுக்குப் பிறந்தவன் (அரிஅரசுதன்) என்பதை உணர்ந்து, ரத்தம் கக்கி
இறக்கும் தருவாயில், நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களைப் பொறுத்தருள வேண்டும்.
நீயே எனக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று வேண்டினாள். அப்பொழுது மணிகண்டன் அவள் தலைமேல் கைவைத்து ஆசிகள்
வழங்க, அவளின் நற்குணங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓர் அழகிய பெண்ணாக உருவம் கொண்டது.
அப்பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி
வேண்டிளாள். இப்பிறவியில் நான் ஒரு பிரம்மச்சாரி. என்னால் திருமணம் செய்துகொள்ள
இயலாது. உன்னை என் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறேன். என்னை வணங்க வருபவர்கள் உன்னையும்
வணங்குவார்கள். நீ மஞ்ச மாதாவாக இருந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார்.
மகிசி வதம்
செய்யப்பட்டதை அறிந்த தேவர்கள் கொண்டாடினர். மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். வந்த
காரியம் முடிந்தவுடன் சிவன், தேவர்களில் பெண்கள் பெண் புலிகளாகவும் ஆண்கள் ஆண்புலி,
குட்டிகளாகவும், இந்திரன் உனது வாகனமாக மாறி உன்னுடன் வருவர். இவற்றைக் கண்டவர்கள்
உனது புகழை அறிவர் என்று கூறி மறைந்தார்.
அவ்வாறே, ஆண்
புலியின்மேல் கம்பீரமாக அமர்ந்து மணிகண்டனைக் கண்டும், அவருடன் வரும் புலிக் கூட்டங்களைக்
கண்டும் பந்தள நாட்டு மக்கள், வியப்புடனும் அச்சத்துடனும் கண்டு பயந்து கூக்குரலிட்டு
அங்குமங்கும் ஓடினர். சில வீட்டிற்குள் சென்று மறைந்தனர். இக்கூச்சல் கேட்ட அரசர்,
சூழ்நிலை அறியாமல் உள்ளம் குழம்பி அரண்மனை வாசல் வந்து வீதியில், புலிப்படையோடு புலிமேல் அமர்ந்துவரும் தன் மகன்
வருவதைக கண்டார்.
அரண்மனை வாசலில்
வந்து நிற்கும் தன் தந்தையைக் கண்டதும் தாயைக் கண்ட கன்றினைப் போல துள்ளிக் குதித்து
ஓடிவந்து தந்தையின் பாதம் தொட்டு வணங்கினார். தாயின் நோயைப் போக்க புலியுடன் வந்தேன்.
எவ்வளவு பால் வேண்டுமோ கரந்து கொள்ளுங்கள். என் தாயின் நோயைப் போக்குங்கள் என்றார்.
நீ காடு சென்றதுமே தாயின் நோய் குணமாகிவிட்டது. இப்புலிக்கூட்டங்களைக் காட்டிற்கே அனுப்பிவிடு
என்றார் தந்தை.
அப்போது அங்கு
வந்த அகத்தியர், மணிகண்டன் யார் என்பதை அரசருக்கு விளக்கினார். முழுவதுமாய் கேட்ட அரசர்,
எனக்கு மகனாய் வந்து பணிவிடை செய்தது என்னுடைய இறைவனா? என்று வியந்து, தனக்கு உபதேசம்
செய்திட வேண்டினர். மணிகண்டனும் அவ்வாறே தந்தைக்கு உபதேசம் செய்தார். அதன்பின் தன்
மகனுக்குக் கோவில் அமைக்கும் இடம் கேட்க, நீலிமலை உச்சியில் என் பக்தை சபரி என் வரவுக்காக
தவம் செய்து கொண்டிருக்கிறாள். அவள் இருக்கும் மலைமேல் எனக்கு கோவில் அமைக்க வேண்டும்
என்றும் அம்மலைக்கு அவளின் பெயரையே சூட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
என்னைக் காண
வருவார் விரதம் இருந்து என்னுடைய பதினெட்டுத் தத்துவங்களை விளக்கும் பதிணெட்டுப் படிகளைக்
கடந்து வந்து என்னை காண அவர்களுக்குத் தானே முக்தி கிடைக்கும் என்பன போன்ற விதிகளைக்
கூறி இடத்தைத் தெரிவு செய்தார். அரசரும் அவ்விதிமுறைப்படியே ஆலயம் நிறுவி வழிபடலானார்.
வழிபடு வோரின் குறைகளைத்
தீர்த்து
வழிவழி யாகஅவர் வாழ்வு
– செழிக்க
அருள்வழங்கும் ஈசன் மகனை
முறையாய்
விருப்புடன் கண்டு மகிழ் 26
தன்னை வழிபடுபவர்களின் குறைகளை எல்லாம் தீர்த்து, வழிவழியாக
அவர்களின் பரம்பரையினர் வாழ்வு செழிக்க அருள் வழங்கும் ஈசன் மகனை விருப்பத்துடன் மகிழ்ச்சியுடனும்
முறையாகக் கண்டு வணங்குங்கள்.
மகிழ்வுடன் மாலை அணிந்து
நெறிகள் கடைபிடித்து
அகம்புறம் தூய்மையாய் வைத்து
விநாயகன் சோதரனை
மகிசி வதம்செய் தவனை துதித்து
உளம்நிறுத்த
சகலமும் பெற்று சிறப்பான வாழ்வு அமைதிடுமே 27
மணிகண்டனைக் காணவேண்டுமென மகிழ்த்து மாலை அணிந்து காலை மாலை
இருவேளை நீராடி, வீட்டையும் வீட்டில் உள்ளவர் உடல், மனம் தூய்மை செய்து, தீயப் பழக்க
வழக்கங்களை நீக்கி, விநாயகனின் சகோதரனை, மகிசி வதம் செய்தவனை உள்ளத்தில் கொண்டு துதித்துவர,
அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்று சிறப்பான வாழ்வு அமைந்திடும.
அமிர்தம் பங்கிட்டு தந்தவன்
மைந்தனை
இமையம் மலையில் உறைபவன்
சுதனை
பந்தள நாட்டு மன்னன் மகனை
மந்தை புலியை கொண்டு வந்தானை
தந்தை துளசி மாலை அணிந்தானை
எருமை பெண்உரு கொள்ள வைத்தானை
பரிவு பாசம் கொண்டு வாழ்ந்தானை
அறிவும் ஆற்றலும் கொண்டிருந்
தானை
குருமகன் நோயைத் தீர்த்து
வைத்தவனை
பம்பைக் கரையில் கிடந்திருந்
தானை
சபரி மலையில் குடிகொண் டானை
சபரி பக்தைக்கு அருள்புரிந்
தானை
வேலும் மயிலும் கொண்டோன்
தம்பியை
நாளும் சேவகம் செய்து வாழ்ந்தானை
ஆணுக்குப் பிறந்து புவிவந்
தானை
வானின் தேவர் காத்து நின்றானை
நாளும் வணங்கித் தொழுவோம்
மாலை அணிந்து அவன்பதி செல்வோமே 28
பாற்கடலில் கடைந்தெடுத்த அமிழ்தத்தை தேவர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொடுத்த
மோகினியின் மைந்தனை, இமய மலையில் வாசம் செய்யும் ஈசனின் பிள்ளையை, பந்தள நாட்டு அரசனின்
மகனை, ஆட்டு மந்தைகளைப் போல் புலிக் கூட்டம் கொண்டு வந்தவனை, தந்தை திருமால் அணியும்
துளசி மாலையை அணிந்தவனை, எருமை உருவாய் இருந்த மகிசியை அழித்து அழகிய பெண்ணாய் உருகொள்ள
செய்தவனை, தாய் தந்தை மீது அன்பு, பரிவு, பாசம் கொண்டு வாழ்ந்தவனை, அறிவும் ஆற்றலும்
கொண்டவனை, தன் குருவின் மகனின் குருடு, செவிடு நீக்கியவனை, பம்பை நதிக்கரையில் குழந்தையாய்
கிடந்தவனை, சபரியாகிய தன் பக்தைக்கு அருள் வழங்கி, அம்மலையிலேயே கோவில் கொண்டவனை, வேலையும்
மயிலையும் தன் உடமையாக் கொண்ட முருகனின் தம்பியை, தாய் தந்தையருக்கு ஒவ்வொரு நாளும்
பணிவிடை செய்தவனை, சிவன் விட்ணு என்ற ஆண்களுக்குக் குழந்தையாகப் பிறந்தவனை, வானுலக
தேவர்களைக் காத்தவனை, ஒவ்வொரு நாளும் வணங்கித் தொழுவோம். துளசி மணிமாலை அணிந்து அவனது
இல்லத்திற்குச் சென்று வழிபடுவோம்.
பதியில் இருப்போர் உடல்மனம்
காத்து
புதுமனை வீடு குழந்தை -
பதவிபட்டம்
கல்விவேலை செல்வமென யாவும்
கிடைக்கும்
சபரிவாசன் உள்ளம் நினை 29
சபரியில் உறைபவனை உள்ளத்தில் வைத்து வணங்கினால், இல்லத்தில்
உள்ளவர்களின் உடலையும் மனதையும் காத்திடுவான். புதியதாய் மனை, நிலம், வீடு, குழந்தை,
பட்டம், பதவி, கல்வி, வேலைவாய்ப்பு என சகல செல்வங்களும் கிடைத்திடும்.
உள்ளம் நினைக்கும் கடவுளை
போற்றி வணங்கிடுவோம்
கள்ள மிலாமல் அனைவரி டத்தும்
பழகிடுவோம்
வெள்ளை மனமும் உதவும் குணமும்
இருப்பவரை
பிள்ளையாய் காத்து அவர்துன்பம்
தீர்த்து அருள்தருமே 30
உள்ளத்தில் இருக்கும் கடவுளை தினமும் போற்றி வணங்கிடுவோம்.
பொய், வஞ்சனை, திருட்டுத்தனம் முதலாக எதுவும் இல்லாமம் அனைவரிடத்திலும் பழகிடுவோம்.
இறைவன், தூய்மையான மனமும் உதவிடும் குணமும் இருப்பவரைப் பிள்ளைபோல் காத்து அவர்களின்
துன்பங்கள் தீர்த்து அருள் வழங்கிடுவான்.
#மணிகண்டன்_மும்மணிக்கோவை
#இரட்டணை_நாராயணகவி