அம்புலிப் பருவம்
எழுசீர் விருத்தம்
( மா விளம் மா விளம் மா விளம் விளம் )
காசு கண்டவர் நெருங்கி வந்துபின்
காசு இல்லையேல் விலகுவார்
மாசு கொண்டநீ மெல்ல வளர்ந்துபின்
கொஞ்சம் கொஞ்சமாய் தேய்கிறாய்
பாச நங்கையாம் பாண்டு மருமகள்
மாற்ற மின்றியே அருள்கிறாள்
நேசம் கொண்டுநீ அன்புத் தோழிபோல்
ஆட அம்புலீ வருகவே. 61
நம்மிடம் காசு இருந்தால் நம்மை நெருங்கி வருவதும் காசு இல்லாத காலங்களில் விலகிச் செல்லும் உறவினர்கள்போல, கலங்கமுள்ள நிலவே நீ, வளர்வதும் பின் தேய்வதுமாக உள்ளாய். ஆனால் எங்களின் பாசத்திற்குரிய பெண்ணான திரௌபதி மாற்றம் இல்லாமல் எல்லா நாட்களிலும் அருளாட்சி செய்து வருகிறாள். அவளோடு அன்பான தோழிபோல நேசம் கொண்டு அம்புலீ ஆட வருக.
பன்னிருசீர் விருத்தம் ( விளம் மா தேமா )
கருவிலே உருவம் தாங்கி
உதிரமும் ஊறி பின்னர்
குழந்தையாய் வந்து திப்பர்
தரணியில் மானி டர்கள்
நெருப்பிலே தோற்றம் பெற்று
இளமையாய் வந்த நங்கை
கருநிற அழகி யாகி
கவர்ந்திடும் உருவம் கொண்டாள்
துருபதன் மகளே யான
திரௌபதி அம்மை உன்போல்
அருளொளி பரப்பி எங்கும்
துன்பமும் விரட்டு கின்றாள்
அருள்பெற நெருங்கி வந்து
வரிசையில் காத்து நின்றார்
மானிடர் செயலைப் போல
அம்புலீ காண வாவே! 62
பூமியில் உள்ள மனிதர்கள், அன்னையின் வயிற்றில் கருவாக உருவாகி, அவள் உதிரத்தில் தோய்ந்து பின்னர் குழந்தையாக பிறப்பர். ஆனால் திரௌபதியானவள் யாசர் உபயாசர் நடத்திய வேள்வித் தீயில், இளமையான, அழகான, யாவரும் கவரும் தோற்றத்துடன் இப்புவியில் பிறந்தவள். அத்தகைய துருபதன் மகள், உன்போல் அனைத்து இடங்களிலும் தனது அருள் ஒளியைப் பரப்பி அங்குள்ள மக்களின் துன்பங்களை விரட்டி வருகிறாள். அவளின் அருள் பெறுவதற்கு வந்து காத்திருக்கும் மனிதர்கள் போல நீயும் அவளைக் காண அம்புலீ வருக.
தன்மகள் பருவம் கண்டு
சுயம்வரம் செய்ய வேண்டி
பலவகை மன்ன ருக்கு
செய்திகள் அனுப்பி வைத்தான்
தனஞ்செயன் வரனுக் காக
போட்டியைக் கடுமை யாக்கி
வில்லிலே நாணை ஏற்றி
இலக்கினை வீழ்த்து வோர்க்கு
தன்மகள் மணமு டித்து
கொடுத்திட முடிவு செய்தான்
போட்டியில் வெற்றி கொண்ட
வீரனை மணப்ப தற்கு
பொன்னிற மாலை தாங்கி
அழகுடன் காத்து நிற்கும்
அழகினை காண்ப தற்கு
அம்புலீ விரைந்து வாவே! 63
துருபதன், தன்னுடைய மகள் திருமணப் பருவத்தை அடைந்துவிட்டாள் என்பதை அறிந்து, சுயம்வரம் செய்து வைக்க பலநாட்டு மன்னர்களுக்கு இச்செய்தியை அனுப்பி, அர்ச்சுனனே தனக்கு மருமகனாக வரவேண்டும் என்பதனால் போட்டியைக் கடுமையாக்கி, வில்லில் நாணேற்றி இலக்கை நோக்கி எய்து வெற்றி பெறுபவருக்கே தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடிவுசெய்தான். அவ்வாறு போட்டியில் வென்ற வெற்றி வீரனை மணப்பதற்காகப் பொன்னிறத்தாலான மாலையைக் கைகளில் தாங்கி நிற்கும் எங்கள் திரௌபதி அம்மனின் அழகைக் காண அம்புலீயே விரைந்து வருவாயாக.
அறுசீர் விருத்தம் ( விளம் மா மா )
உன்மனம் விரும்பும் மனைவி
ரோகிணி என்ப தறிவேன்
என்னுடை அம்மை யான
திரௌபதி துணையாய் நின்ற
அனந்தனின் தாயின் பெயரும்
ரோகிணி என்ப தாகும்
தனஞ்செயன் மனைவி யோடு
அம்புலீ ஆட வாவே! 64
சந்திரனே, உன் மனதைக் கவர்ந்த மனைவி ரோகிணி என்பதை நான் அறிவேன். என்னுடைய அன்னையான திரௌபதியின் அண்ணன் அனந்த கிருட்டிணனின் தாயின் பெயரும் ரோகிணியாகும். ஆகவே, தனஞ்செயனின் மனைவியான திரௌபதி யோடு அம்புலீ ஆட வருக.
பன்னிருசீர் விருத்தம் ( விளம் மா தேமா )
இரவியின் ஒளியை வாங்கி
இரவிலே ஒளிரு கின்றாய்
சூரிய ஒளியுன் மீது
விழாஅமா வாசை நாளில்
இருட்டிலே மறைந்து நின்றாய்
இன்னிலை மாற நீயும்
நெருப்பினில் பெண்ணாய் வந்த
திரௌபதி அன்னை யோடு
நெருங்கிநீ இருந்து விட்டால்
அவளுடை ஒளியி னாலே
பகலிலும் மிகுந்த ஒளியில்
தரணியில் காட்சி தரலாம்
பரவையில் உறக்கம் கொள்ளும்
கண்ணனின் அன்புத் தங்கை
திரௌபதி யோடு நீயும்
அம்புலீ ஆட வாவே! 65
சந்திரனே, சூரியனின் ஒளியை வாங்கி இரவிலே ஒளிவிடுகின்றாய். சூரிய ஒளி இல்லாத அமாவாசை நாளில் நீ தெரிவதில்லை. இந்நிலை மாறவேண்டும் என்றால், நெருப்பிலே தோன்றியவளான திரௌபதி அன்னையோடு நெருங்கிப் பழகினால் அவளின் ஒளி என்னாளும் உன்மீதுபட்டு, பகல் நேரத்திலும் ஒளிவிடும் திறன் கொள்வாய். ஆகவே, கடலிலே உறக்கம் கொள்ளும் கண்ணனின் அன்புத் தங்கையான திரௌபதியோடு அம்புலீ நீ ஆட வருக.
பரவையைக் கடையும் போது
தோன்றிய நிலவே உனது
வாகனம் வெள்ளைக் குதிரை
கிருட்டிணை அண்ண னான
அருணவம் வாசம் கொள்ளும்
பற்குணன் அன்புத் தோழன்
விட்ணுவின் கல்கி அவதா
ரவாகனம் வெள்ளை யாகும்
திருமகள் இருக்கும் மார்பில்
தோன்றினாய் என்ப தறிவேன்
கண்ணனும் அன்புத் தங்கை
யாகசே னிஅங்கு வைத்தான்
திரௌபதி அன்னை யோடு
அம்புலீ ஆட வாவே!
திருமகள் தோழி யோடு
அம்புலீ ஆட வாவே! 66
பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து வெளிப்பட்ட நிலவே, உனது வாகனம் வெள்ளைக் குதிரை. எனது அன்னையான கிருட்டிணையின் அண்ணன் பாற்கடலில் தங்கி இருக்கும் அர்ச்சுனனின் அன்புத் தோழன் விட்ணுவின் கல்கி அவதாரத்தின் போது அவனது வாகனமும் வெள்ளைக் குதிரை. நீ திருமகள் இருக்கும் மார்பினில் தோன்றினாய் என்பதை நான் அறிவேன். கண்ணனும் தனது அன்புத் தங்கையான திரௌபதியை அங்கு வைத்துள்ளான். ஆகவே, எங்கள் திரௌபதி அன்னையோடு அம்புலீ ஆட வருக. திருமகளின் அன்புத் தோழியான பாஞ்சாலியோடு அம்புலீ ஆட வருக.
பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )
இராகுயெனும் பாம்பு தனது
இரைதேடி வந்தபோது
உன்னுடைய வெளிச்சத் தாலே
பாம்புவாய்க்கு அகப்ப டாமல்
இரையெல்லாம் மறைந்து கொள்ள
ஒளிஉமிழும் உன்னைக் கவ்வி
தன்பசியைப் போக்க நினைத்தான்
இதுஅறிந்த திரௌபதி அண்ணன்
இராகுதலை வெட்டி தனது
தங்கையான பாஞ்சா லிக்கு
தோழியாக இருக்க காத்தான்
கண்ணனவன் உனக்காய் செய்த
அரியசெயல் புரிந்து கொண்டு
இரட்டணையில் கோவில் கொண்டு
எம்குலம் காப்ப வளோடு
அம்புலீயே ஆட வாவே! 67
இராகு என்னும் பாம்பு இரைதேடி பூமியில் அலைந்து கொண்டிருந்த போது, உன்னுடைய வெளிச்சத்தால் எந்த இரையும் பாம்பின் வாய்க்கு அகப்படாமல் மறைந்து கொண்டன. இதனால்இராகு உன்னை விழுங்கி பசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தது. இதனை அறிந்த திரௌபதியின் அண்ணன் விட்ணு இராகுவின் தலையை வெட்டி உன்னைக் காப்பாற்றி தனது தங்கைக்குத் தோழியாக இருக்கச் செய்தான். இத்தகைய அறிய செயலைப் புரிந்து கொண்டு இரட்டணையில் கோவில் கொண்டுள்ள எங்கள் குலம் காப்பவளோடு அம்புலீ ஆட வருக.
எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் மா )
இரவுமகள் அணிந்திட்ட வெள்ளைநிறப் பொட்டே!
சிவபெருமான் சடாமுடியில் அணிந்துள்ள பிறையே!
அருணவதுள் அமிழ்தோடு தோன்றியநல் நிலவே!
பெண்ணினத்தின் முகத்திற்கு உவமையாகும் அழகே!
திருமாலின் இடப்பக்கம் இருக்கின்ற விழியே!
எரிபொருளே இல்லாமல் இருள்விரட்டும் விளக்கே!
திரௌபதியின் அழகிற்கு ஒப்பான பொருளே!
பாண்டவர்கள் மனைவியோடு அம்புலீஆ டவாவே ! 68
இரவு என்னும் பெண் அணிந்துகொண்ட வெள்ளை நிறத்துப் பொட்டே. சிவபெருமான் தன் .தலையில் அணிந்துகொண்ட வெண்பிறையே. பாற்கடலில் அமிழ்தத்தோடு வெளிவந்த நல்ல நிலவே. பெண்களின் முகத்திற்கு உவமையாகச் சொல்லப்படும் அழகே. திருமாலின் இடப் பக்கத்தில் உள்ள விழியே. எண்ணெய் திரி முதலான எரிபொருள் இல்லாமல் இருளை விரட்டும் விளக்கே. திரௌபதியின் அழகிற்கு ஒப்பான பொருளே. பாண்டவர்களின் மனைவியுடன் அம்புலீ ஆட வருக.
பதின்சீர் விருத்தம் ( காய் காய் காய் மா மா )
தரணிக்கு ஒளிகொடுக்கும் ஒருபெரிய
நெருப்பு ருண்டை
அதனோடு சேர்ந்திருந்தால் உனதுபுகழ்
தெரிவ தில்லை
பரிதிக்கு அருள்வழங்கும் பாஞ்சாலி
உடனி ருந்தால்
அவள்மேனி ஒளிபட்டு அமாவாசை
யிலும்நீ ஒளிர்வாய்
பரிதிதனைக் கனியென்று பறித்துண்ட
அனுமன் தோழன்
கரடிகளின் அரசனான சாம்பவானின்
அன்பு நண்பன்
திருமாலின் நலன்விரும்பி துருபதனின்
செல்லப் பிள்ளை
பாஞ்சாலி அன்னையோடு அம்புலீயே
ஆட வாவே 69
இந்த உலகிற்கு ஒளிகொடுப்பது பெரிய நெருப்பு உருண்டையான சூரியன். அந்தச் சூரியனோடு சேர்ந்திருந்தால் உன்புகழ் இந்த உலகத்திற்கு தெரியாமல் போனது. அந்தச் சூரியனுக்கே அருளை வழங்கக் கூடியவள் எங்கள் பாஞ்சாலி. அவளோடு நீ சேர்ந்திருந்தால் அவள் மேனியின் ஒளிபட்டு அமாவாசைக் காலங்களிலும் நீ ஒளியுடன் திகழ்வாய். சூரியனைக் கனியென்று பறித்து உண்பதற்காகச் சென்ற அனுமனின் அன்புத் தோழன், கரடிகளின் அரசனான சாம்பவானின் இனிய நண்பன் திருமாலின் நலன் விரும்பியும் துருபதனின் செல்லப் பிள்ளையாகவும் விளங்கும் பாஞ்சாலி அன்னையோடு அம்புலீயே ஆட வருக.
பதினாறுசீர் விருத்தம் ( விளம் விளம் மா தேமா )
பரிதியின் ஒளியினை உண்ணும் போது
கீற்றுபோல் இருந்தநீ வளரு கின்றாய்
சூரிய ஒளியுமி லாத போது
முழுமையாய் இருந்தநீ குறைந்து வந்தாய்
திருதராட் டிரன்மகன் சகுனி யோடு
இணைந்துதன் சூழ்ச்சியால் பாண்டு மக்கள்
உடைமைகள் யாவையும் பறித்துக் கொண்டு
பாண்டவர் குந்தியொ டுயாக சேனி
நிராயுத பாணியாய் துரத்தப் பட்டு
செல்வமும் வீரமும் தனக்கி ருந்தும்
உணவினை யாசகம் செய்து பெற்று
அனைவரும் ஒன்றுசேர்ந் துண்டு வாழ்ந்தார்
அரைவயிறு உணவினை உண்ட போதும்
பெருப்பதும் இளைப்பதும் இலாதி ருந்த
துருபதன் மகளொடு ஆட வாவே!
பரிவுடன் அம்புலீ ஆட வாவே! 70
சூரிய ஒளியை உண்ணும் போது (உள்வாங்கி) தேங்காய்க் கீற்றுபோல சிறிதாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளருகின்றாய். சூரிய ஒளி இல்லாத நாளில் முழுமதியாக இருந்து சிறுக சிறுக குறைகின்றாய். திருதராட்டிரன் மகனான துரியோதனன் சகுனியோடு இணைந்து சூழ்ச்சி செய்து பாண்டு மக்களின் உடைமைகள் யாவற்றையும் சூதாட்டத்தின் பேரில் பறித்துக்கொண்டு, பாண்டவர்கள் குந்தி யாகசேனி ஆகியோரை ஒன்றுமில்லாத அனாதைபோல நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டபோது, செல்வமும் வீரமும் தங்களுக்கு இருந்தும் உணவினை பிச்சையாக ஏற்று அவற்றை ஒன்றுசேர்த்து அனைவரும் உண்டு வாழ்ந்தனர். அவ்வாறு அரைவயிறு உணவினை உண்டபோதும் இளைப்பதும் பெருப்பதும் இல்லாமல் இருந்த துருவதன் மகளோடு அம்புலீயே பரிவுடன் ஆட வருக.