அம்மானைப் பருவம்
முப்பத்தாறுசீர் விருத்தம் ( மா மா காய் )
இரண்ய கசிபு வம்சத்தில்
நிரும்பன் மகனாய் பிறந்துவந்த
கொடியோர் சுந்தன் உபசுந்தன்
எண்ணம் செயலும் ஒன்றாகி
இருவர் ஒருவர் போலிருந்து
உண்ப துறங்கு வதொன்றாகி
நாடு வீடு படுக்கையுடன்
பலவும் இவர்க்கு ஒன்றேயாம்.
வீரம் மிகுந்த இரட்டையர்கள்
மூன்று உலகம் வென்றிடவே
கட்டை விரலை தரைஊன்றி
காற்றை மட்டும் உணவாக்கி
கரங்கள் இரண்டும் தலைகூப்பி
வெகுநாள் தவத்தில் இருந்தனரே.
தவத்தை மெச்சி பிரம்மதேவர்
வேண்டும் வரத்தைக் கேள்என்றார்.
அறிவு மிகுதி உடையவராய்
நினைத்த உருவம் எடுத்திடவும்
வலிமை மிகவும் பெற்றிடவும்
எங்கள் இருவர் தவிரவேறு
யாரும் மரணம் உண்டாக்க
கூடா தென்று வரம்பெற்றார்
பெற்ற வரத்தால் ஆசிரமம்
யாகம் வேள்வி பலவற்றை
வருத்தம் கொள்ளும் அளவிற்கு
நாசம் செய்து தொல்லைதந்தார்
மூன்று உலகை அடைந்திடவே
மக்கள் ஞானி தேவரொடு
பயிர்கள் விலங்கு பறவைஎன
பலவும் அழித்து துயர்தந்தார்
ரிசிகள் முனிவர் வேண்டுதலில்
பிரம்ம தேவர் ஆணைபடி
விசுவ கருமா திலோத்தமையைப்
படைத்துப் பகைவர் இடம்நோக்கி
அனுப்பி வைக்க இருவருமே
அழகில் மயங்கி உரிமைகொண்டு
ஒருவர் ஒருவர் அடித்துகொண்டு
பெற்ற வரத்தால் மாய்ந்தனரே
அதுபோல் இன்றி வரைமுறையில்
நார தமுனி வழிகாட்ட
ஆண்டு ஒன்று ஒருவருடன்
வாழ்தல் வேண்டி முறைவைத்து
தமக்குள் விதியை வகுத்துகொண்டு
இல்லற இன்பம் கண்டுவந்த
பாண்ட வரில்லத் துணைவியே!
ஆடி அருளாய் அம்மானை.
குந்தி மாத்ரி மருமகளே!
ஆடி அருளாய் அம்மானை. 71
இரண்ய கசிபின் பரம்பரையில் நிரும்பன் என்பவனின் மகனாகப் பிறந்த கொடியவர்கள் சுந்தன், உவசுந்தன். இவர்களின் எண்ணம், செயல் மட்டுமன்றி உண்பது, உறங்குவது, நாடு, வீடு, படுக்கை என யாவும் ஒன்றாகவே இருந்தது. வீரம் மிகுந்த இந்த இரட்டையர்கள் இந்த மூன்று உலகையும் தாங்களே ஆளவேண்டும் என்ற நோக்கில், காற்றை மட்டும் உணவாக உண்டு. கால்கட்டை விரலை மட்டும் தரையில் ஊன்றி, கைகள் இரண்டும் தலைமேல் தூக்கி வெகுநாட்களாகக் கடுமையாகத் தவம்செய்தனர். இவர்களின் தவத்திற்கு மனம் இரங்கிய பிரம்மதேவர். வேண்டிய வரங்களைக் கேள் என்றார். அறிவில் சிறந்தவர்களாகவும் வலிமை மிக்கவர்களாகவும் தாங்கள் நினைத்த உருவத்தை எடுக்குத் திறம் கொண்டதாகவும் எங்களைத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் ஏற்படக் கூடாது என்றும் வரங்களைப் பெற்றனர். வரங்கள் கிடைத்தவுடன், முனிவர்கள், அந்தணர்கள் வாழும் இல்லங்களையும் யாகங்களையும் அழித்தனர். மக்கள் வருந்தும் அளவிற்கு நாசங்களையும் தொல்லைகளையும் தந்தனர். மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகையும் ஆளவேண்டும் என்ற நோக்கில் அங்குள்ள மக்கள், ஞானிகள், தேவர்கள், பயிர்கள் வகைகள், விலங்குகள், பறவைகள் என அனைத்தையும் அழித்தனர். இதனால் மனமுடைந்த முனிவர்கள், அந்தணர்களின் வேண்டுகோளின்படி பிரம்மதேவர் விசுவகர்மாவை அழித்து, திலோத்தமை என்ற அழகிய பெண்ணைப் படைத்துப் பகைவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். திலோத்தமையைக் கண்ட சுந்தன், உபசுந்தன் இருவரும் அவளது அழகில் மயங்கி தனக்குதான் இவள் என உரிமைகொண்டு, இருவரும் சண்டையிட்டுக் கொண்டு அவர்கள் பெற்ற வரத்தாலேயே இறுதியில் மாய்ந்தனர். அவ்வாறு இன்றி, தங்களுக்கும் வரைமுறைகளை வகுத்துக் கொண்டு, நாரதரின் வழிகாட்டுதலின்பேரில் ஓராண்டுக்கு ஒருவர் என்ற வீதம் வாழ்ந்து இல்லறம் கண்ட பாண்டவர்களின் இல்லத் துணையே! அம்மானை ஆடுவாயாக. குந்தி மாத்ரி மருமகளே! அம்மானை ஆடுவாயாக.
பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )
உலுபியெனும் நாக ராணி
மனிதபாம்பு வடிவம் தாங்கி
அர்ச்சுனன்மேல் இச்சை கொண்டு
மனைவியாக ஏற்க வாழ்ந்தாள்
வில்லிற்கு விசயன் என்று
பேர்படைத்த பாண்டு மைந்தன்
தன்னுடைய அத்தை மகளாம்
சுபத்திரையை மனதுள் எண்ணி
மலைபோன்ற ஆசை யாலே
பொய்யான வேடம் இட்டு
கிருட்டிணனின் உதவி யோடு
சுபத்திரையை மணந்து வந்தான்
வில்லாளி அன்பு துணையே!
அம்மானை ஆடி அருளே!
சுபத்திரையின் ஓர கத்தி!
அம்மானை ஆடி அருளே! 72
வில்லிற்கு விசயன் என்று பெயர்கொண்ட அர்ச்சுனனை, மேல் பாதி மனித உருவமும் கீழ்ப்பாதி பாம்பின் வடிவமும் கொண்டு வசித்து வந்த உலுபி என்னும் நாகராணி, அர்ச்சுனன் மேல் ஆசை கொண்டு இணங்காத அவனை இணங்கவைத்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாள். அர்ச்சுனனோ, தன்னுடைய அத்தை மகளான சுபத்திரையின்மேல் அளவில்லாத ஆசைகொண்டு, முனிவன்போல் பொய்யான வேடமிட்டு, கிருட்டிணனின் துணையோடு சுபத்திரையை மணந்தான். அத்தகைய வில்லாளியான அர்ச்சுனனின் அன்புத் துணைவியே! அம்மானை ஆடுக. சுபத்திரையின் ஓரகத்தியே! அம்மானை ஆடுக.
சொர்க்கமுள்ள காண்டீ மரத்தால்
பிரம்மதேவர் சக்தி யாலே
படைத்துதந்த காண்டீ பத்தை
அக்னிதேவன் வேண்டு கோளால்
வருணதேவன் பார்த்த னுக்கு
அம்பறா தூணி யோடு
நல்தேரையும் பரிசாய் தந்தான்
தான்பெற்ற வில்லைக் கொண்டு
துரியோத னனுக்கு துணையாய்
நின்றகர்ணன் எதிர்த்து வென்றும்
செயத்திரதன் தலையைக் கொய்தும்
போரினிலே வெற்றி கண்ட
அர்சுனனின் அன்பு துணையே!
அம்மானை ஆடி அருளே!
சாரதியின் அன்புத் தங்கை!
அம்மானை ஆடி அருளே! 73
சொர்க்கலோகத்தில் உள்ள காண்டீ என்னும் மரத்தில் பிரம்மதேவர் தன்னுடைய ஆற்றலினால் உருவாக்கிய ‘காண்டீபம்’ என்னும் வில்லை நெருப்புக்கடவுனின் வேண்டுகோளை ஏற்று, மழைக்கடவுளான வருணதேவன் அர்ச்சுனனுக்கு அம்பறாத் தூணியோடு தன் தேரையும் பரிசாகத் தந்தான். தான் பெற்ற வில்லைக் கொண்ட துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணனையும் செயந்திரனையும் போரில் வென்ற அர்ச்சுனனின் அன்புத் துணையே! அம்மானை ஆடுக. பார்த்தனுக்குச் தேரோட்டியாக விளங்கிய கண்ணனின் அன்புத் தங்கையே! அம்மானை ஆடுக.
இருபத்துநான்குசீர் விருத்தம் ( மா மா காய் )
கண்கள் மூன்றும் கைநான்கும்
கழுதைக் குரலைப் பெற்றவனாய்
சேதி நாட்டு மன்னனுக்கு
மகனாய்ப் பிறந்தான் சிசுபாலன்
கண்ணன் அத்தை மகனாக
உறவு முறையில் இருந்தாலும்
கிருஷ்ணன் தனது எதிரிஎன்று
விரோதம் காட்டி வளர்த்துவந்தான்.
மண்ணை வெல்லும் யாகத்தை
சிறப்பாய் செய்து முடித்ததனால்
முதல்ம ரியாதை கிருஷ்ணனுக்குக்
கொடுத்துச் சிறப்புச் செய்தனரே
இதனை எற்க மறுத்தவனாய்
தருமர் முதலா யாவரையும்
மதியா திழிசொல் பலபேசி
கண்ணன் போருக் கழைத்திட்டான்
பண்டை பிறப்பில் சிசுபாலன்
இரண்ய கசிபாய் இராவணனாய்
பிறந்து எதிர்த்து மாண்டதனால்
இந்தப் பிறப்பில் மறுபடியும்
அரியை எதிர்க்கத் துணிந்துவிட்டான்
பிறவி தோறும் வரும்பகையை
முடித்து விடவே நினைத்தஅரி
ஆழி ஏவி அழித்தாரே!
மண்ணை அளந்த கண்ணபிரான்
மண்மேல் அகந்தை கொண்டவரைத்
தன்னுள் சேர்த்துக் கொண்டவர்க்கு
மோட்சம் தன்னைக் கொடுப்பாரே
கண்ணன் தங்கை ஆனவளே!
ஆடி அருளாய் அம்மானை.
பெண்ணின் நல்லாள் திரௌபதியே!
ஆடி அருளாய் அம்மானை. 74
மூன்று கண்களையும் நான்கு கைகளையும் கொண்டவனாக, கழுதைக் குரலைப் பெற்றவனாக, சேதி நாட்டை ஆண்ட மன்னனுக்கு மகனாகப் பிறந்தவன் சிசுபாலன். இவன் உறவு முறையில் கண்ணனின் அத்தை மகனாக இருந்தாலும் கிருட்டிணனைத் தன்னுடைய பகைவனாகவே பாவித்து பகையைக் காட்டி வந்தான். பல நாட்டு மன்னர்களோடு போரிட்டு வெற்றி பெற்று, மாமன்னன் தான் என்பதை உணர்த்துவதற்காகச் செய்யப்படும் யாகமே இராசசூய யாகம். இந்த யாகத்தைத் தருமர் வெற்றிகரமாக முடித்தபின்னர், முதல் மரியாதையைக் கண்ணனுக்குக் கொடுத்துச் சிறப்புச் செய்தார். இதனை ஏற்க மறுத்த சிசுபாலன், கண்ணனையும் அவையில் உள்ளோரையும் இழிவாகப் பேசி கண்ணனைப் போருக்கு அழைத்தான். இந்தச் சிசுபாலன் முற்பிறவியில், இரணிய கசிபாகவும் இராவணனாகவும் பிறந்து திருமாலை எதிர்த்து மாண்டவன். அதனுடைய எச்சமாக இப்பிறப்பிலும் கண்ணனை அவன் எதிர்க்கத் துணிந்துவிட்டான். பிறவிதோறும் வரும் பகையை முடித்துவிட எண்ணிய கண்ணன், தன்னுடைய சக்கரப் படையை ஏவி அவனை அழித்தார். வானையும் மண்ணையும் அளந்த கண்ணபிரான் மண்மேல் வாழும் மனிதர்களின் செருக்கை அழித்து அவர்களைத் தன்னுள் சேர்த்துக் கொண்டு வீடுபேறு வழங்கும் ஆற்றலுடையவர். அத்தகைய கண்ணணின் தங்கையானவளே! அம்மானை ஆடுக. பெண்களின் சிறந்தவளே! அம்மாணை ஆடுக.
பன்னிருசீர் விருத்தம் ( விளம் மா மா )
சனகரின் முன்னோ ருக்கு
விரிசடை கடவுள் தந்த
பலவகை ஆற்றல் கொண்ட
சிறப்புடை வில்லே தனுசு
அனந்தனும் சிவனும் மட்டும்
வளைத்திடும் திறமை கொண்டோர்.
இராமனைத் தனது மகற்கு
திருமணம் செய்ய எண்ணி
சனகரும் திட்டம் தீட்டி
தனுசுவை வளைப்ப வருக்கே
சீதையை மணமு டித்து
தருவதாய் துணிந்து நின்றார்
அன்புடை சீதை உறவே
ஆடிஅ ருளாய்அம் மானை
இராமனின் அன்பு தங்கை
ஆடிஅ ருளாய்அம் மானை 75
சனகரின் முன்னோருக்கு சிவபெருமான் பரிசாகத் தந்த பலவகையான ஆற்றல் கொண்ட சிறப்புடைய சிவதனுசை, கண்ணனும் சிவனும் மட்டுமே வளைக்கும் திறன் கொண்டவர்கள். இதனை அறிந்த சனகர், இராமனையே தனக்கு மருமகனாகக் கொண்டு வரவேண்டும் என்று தனக்குள் ஒரு திட்டம் தீட்டி, இந்த சிவதனுசை வளைப்பவருக்கே என்மகளைத் திருமணம் செய்து தருவேன் என்று அறிவித்தார். அவ்வாறு திருமணம் செய்துகொண்ட சீதையின் உறவான திரௌபதியே! அம்மானை ஆடுக. இராமனின் அன்புத் தங்கையே! அம்மானை ஆடுக.
பன்னிருசீர் விருத்தம் ( விளம் மா தேமா )
அரும்பெரும் செயல்கள் செய்து
அறிவிய லாளர் இன்று
இயற்கையில் நடவா வற்றை
இயல்பென செய்வார் நன்று
இருவரும் இணையா போதும்
அவரவர் அணுவைக் கொண்டு
கருவினைச் சுமந்து பெற்ற
அன்னையர் பலபே ருண்டு
ஒருவரின் வயிற்றி லுள்ள
கருவினை மாற்றி வைத்து
அடுத்தவர் பெற்ற பிள்ளை
வாசுகி ஏழாம் மைந்தன்
இராமனின் தமக்கை அன்னாய்
ஆடிய ருளாயம் மானை
ஐவரைப் பெற்ற அன்னை
ஆடிய ருளாயம் மானை 76
இன்றைய அறிவியல் யுகத்தில் இயற்கையின் நடவாத பலவற்றை இயல்பாகவே நடத்திக் காட்டுகின்றனர் அறிவியலாளர்கள். ஆணும் பெண்ணும் இணையாமலேயே கருவினைச் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையும் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் சாத்தியமான ஒன்றாக அமைகிறது. ஆனால் ஒருவரின் கருப்பையில் உருவானக் கருவை அடுத்தவர் கருப்பைக்கு இடம் மாற்றிவைத்து பிறந்த வாசுகியின் ஏழாம் மைந்தன் இராமனின் தமக்கை யான அன்னையே! அம்மானை ஆடுக. ஐந்து மகன்களைப் பெற்ற அன்னையே! ஆடுக அம்மானை.
பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )
மாற்றார் செய்த சூழ்ச்சியாலே
காடு சென்ற பெண்மகளே!
உற்றார் உறவு இருந்தபோதும்
விதியின் வழியில் நடந்தாயே!
ஆற்றல் மிகுந்த உன்சொல்லால்
அழித்தி ருப்பாய் எதிரிகளை
கணவன் மாரின் வீரத்தால்
வீழ்த்த வேண்டும் என்றெண்ணி
போற்றி காத்து இருந்திட்டாய்
பொறாமை வஞ்சம் சூழ்ச்சியினால்
நல்லோர் மனதை நோகடித்து
வாழ்ந்தார் இல்லை பூமியிலே
மாற்றார் அழித்த மாண்புடையாள்
ஆடி அருளாய் அம்மானை
குந்தி பாண்டு மருமகளே
ஆடி அருளாய் அம்மானை 77
பகைவர்கள் செய்த சூழ்ச்சியின் காரணமாக வனவாசம் சென்ற பெண்மகளே. உனக்கு உறவாகப் பலர் இருந்தபோதும் விதியின் காரணமாகப் பல துன்பங்களை அடைந்தாய். ஆற்றல் தரும் உன் சொல்லாலேயே நீ பகைவர்களை அழித்திருக்கலாம். ஆனால் உன் கணவன்மார்களின் வீரத்தாலேயே பகைவர்க் கூட்டங்கள் அழியவேண்டும் என்று நினைத்து பொறுமை காத்து இருந்தாய். பொறாமை வஞ்சம் சூழ்ச்சியினால் நல்லவர்கள் மனதை துன்புறுத்தி வாழ்ந்தவர்கள் இந்த பூமியில் நிலையாக இருந்ததில்லை. பகைவர்களை அழித்த பெருமைக்கு உரியவளே! ஆடுக அம்மானை. குந்தி, பாண்டு மருமகளே! ஆடுக அம்மானை.
பெரும்போர் செய்து வெல்வதரி
தென்ற எண்ணம் படைத்தவர்கள்
சூதில் மூலம் உடமைகளைச்
சூழ்ச்சி யாலே வென்றுவிட்டார்
தரணியில் சிறந்த பெண்மகளைச்
சபையின் நடுவே முன்நிறுத்தி
மானம் காக்கும் ஆடைதனை
மதியி ழந்து களைத்திட்ட
துரியோ தனனின் கூட்டத்தை
வேரோ டறுக்க பாண்டவர்கள்
சபதம் கொண்டு காத்திருந்து
பின்னை நாளில் வெற்றிகண்டார்
உரிமை பெற்று மகிழ்ந்தவளே!
ஆடி அருளாய் அம்மானை
பாண்டு மக்கள் துணையாளே!
ஆடி அருளாய் அம்மானை 78
போர் செய்தால் வெற்றி கொள்ள முடியாது என்று நினைத்த பகைவர்கள், சூதாட்டத்தின் மூலம் பொன், பொருள், நாடு, நகரம் முதலான உடமைகள் யாவற்றையும் சூழ்ச்சியால் வென்று, இந்த பூமியில் சிறப்பானதொரு பெண்ணான திரௌபதியை அரசர்கள் சபையின் நடுவே நிறுத்தி, மானம் காக்கும் ஆடைகளை அறிவை இழந்த மூடர்களாய் களைந்திட்ட துரியோதனனின் கூட்டத்தினர் யாவரையும் போரில் அழிப்பேன் என்று சபதம் ஏற்று, காலம் வரும்வரைக் காத்திருந்து, பின்னைய நாளில் போரிட்டு வெற்றி கொண்டனர். இழந்த உரிமைகள் அனைத்தையும் பெற்று மகிழ்ந்த திரௌபதி! அம்மானை ஆடுக. பாண்டு மக்களின் துணையாளே! அம்மானை ஆடுக.
இரத்தி னமாலை பொற்காசு
புலித்தோல் செய்த தேரோடு
குதிரை யானை பணிப்பெண்கள்
வேலை ஆட்கள் நாட்டுடனே
உருட்டி அனைத்தும் வென்றதுடன்
இளையோன் நகுலன் சகாதேவன்
வில்லில் சிறந்த விசயனொடு
பீமன் தருமன் திரௌபதியைத்
துரியோ தனனின் திட்டத்தால்
சூழ்ச்சி செய்து சகுனிவென்றான்
விதியின் பிடியில் இருந்துதப்பி
பிழைத்தார் உலகில் யாருமில்லை.
உரிமை வென்று பெற்றவளே!
ஆடி அருளாய் அம்மானை
விரித்தக் கூந்தல் முடிந்தவளே!
ஆடி அருளாய் அம்மானை 79
தருமரை வஞ்சகமாய் ஏமாற்றி இரத்தினமாலை, பொற்காசுகள், புலித்தோலால் செய்த தேர், குதிரைகள், யானைகள், பணிப்பெண்கள், வேலையாட்கள் என அனைத்தையும் பகடை உருட்டி வெற்றி கொண்டதோடு மட்டுமின்றி நகுலன், சகாதேவன், வில்லாற்றலில் சிறந்தவனான அர்ச்சுனன், பீமன், தருமன், திரௌபதியையும் துரியோதனன் செய்த திட்டத்தின் பேரில் வென்றெடுத்தான் சகுனி. விதியின் வழியில் இருந்து தப்பித்துப் பிழைத்தார் யாருமில்லை. ஆதலினால் விதியால் தோற்று பின்னர் போரில் வென்றவளே! ஆடுக அம்மானை. துரியோதனன் முதலானோரை வெற்றி கொண்ட பின்னரே என் கூந்தலை முடிவேன் என சபதம் ஏற்று, வென்றபின் கூந்தலை முடிந்தவளே! ஆடுக அம்மானை.
இருபத்துநான்குசீர் விருத்தம் ( காய் மா தேமா )
காந்தார நாட்டு மன்னன்
சுபலனின் அன்பு மைந்தன்
காந்தாரி உடன்பி றப்பு
துரியோத னனின்தாய் மாமன்
பீசுமரின் சூழ்ச்சி யாலே
தன்குடும்பம் அழிந்த தற்கு
கௌரவர்கள் குலம ழிக்க
உறவென்று சகுனி வந்தான்
காந்தாரன் விரலைக் கொண்டு
கச்சிதமாய் செய்தெ டுத்த
உருட்டுகின்ற தாயக் கட்டை
சகுனியது சொல்லைக் கேட்கும்
துரியோத னனாசை தூண்டி
தருமரைச்சூ துக்க ழைத்துத்
தன்னுடைய திட்டத் தோடு
பாண்டவரை வென்றெ டுத்தான்
காந்தார நாட்டு மைந்தன்
இளையவனாம் சகுனி தன்னால்
பீசுமரின் குடும்பம் வீழ்த்த
முடியாது என்று எண்ணி
பகையாளி குடும்பந் தன்னை
உறவாடி கெடுத்தா ரைப்போல்
பாண்டவரைக் கோபம் ஏற்றி
தான்நினைத்த செயலைச் செய்தான்
மாந்தளிரின் மேனி கொண்டும்
பூமணத்தின் வாசம் ஏற்றும்
வெற்றிமாலை சூடி நித்தம்
முழுநிலவாய் வீற்றி ருக்கும்
இரட்டணைவாழ் யாக சேனி
ஆடிஅரு ளாய்அம் மானை
குலம்காக்க வந்த அன்னை
ஆடிஅரு ளாய்அம் மானை 80
காந்தார நாட்டை ஆண்ட சுபலனின் இளைய மகனும் காந்தாரியின் உடன்பிறந்தவனும் துரியோதனின் தாய்மாமனுமாகியவன் சகுனி. பீசுமரின் சூழ்ச்சியால் தன் குடும்பம் அழிந்ததற்குக் கௌரவர்களின் குலத்தை அழிக்கவே உறவினனாகத் துரியோதனிடம் சேர்ந்தான் அவன். காந்தாரனின் கைவிரலைக் கொண்டு உருட்டி விளையாடும் தாயக்கட்டைகளைச் செய்தான் சகுனி. இத்தாயக்கட்டைகள் சகுனியின் பேச்சைக் கேட்டு அவன் சொல்லும் எண்ணிக்கையே விழும் தன்மை கொண்டது. ஆதலினால் துரியோதனனின் ஆசையினைத் தூண்டி, தருமரைச் சூதாடச் செய்து தன்னுடையத் திட்டத்தின்படி பாண்டவர்களை வென்றான் சகுனி. தன்னால் பீசுமரின் குடும்பத்தை அழிக்க முடியாது என முடிவு செய்து, பாண்டவர்களைக் கோபப்படுத்தி பீசுமரின் குலத்தை அழிக்கும் செயலைக் கச்சிதமாய் செய்து முடித்தான். போரில் வெற்றிபெற்று, மாந்தளிர் போல மினுமினுப்பான உடலையும் பூக்களின் மணங்களை உடல் முழுவதும் தடவியும் வெற்றி என்னும் மாலையைச் சூடி, முழு நிலவுபோல அமர்ந்திருக்கும் இரட்டணையில் கோவில்கொண்ட யாகசேனியே! ஆடுக அம்மானை. எம்குலம் காக்க வந்த அன்னையே! ஆடுக அம்மானை.