வருகைப் பருவம்
பதின்சீர் விருத்தம் ( காய் மா காய் காய் மா )
துரியோத னன்தன் மந்திரியாம் புரோசனனை அழைத்து
அரக்குசணல் மெழுகு குங்கிலியம் மூங்கில்நெய் சேர்த்து
விரைவாகப் பற்றி எரிகின்ற மாளிகையை அமைத்து
பாண்டுமக்கள் குந்தி யாவரையும் அழைத்துகொண்டு வந்து
அரக்குமாளி கையில் தங்கவைத்து வேண்டியன செய்து
பாண்டவரை அழிக்க பாதகமாய் திட்டமிட்ட பகைவன்
துரியோத னனின்தீக் கூட்டத்தை மாய்பதற்கு வருக
பாண்டவரின் துணைபீ சுமர்விதுரன் காத்திடவே வருக 51
துரியோதனன் தன் மந்திரி புரோசனனை அழைத்து எளிதில் தீப்பற்ற கூடிய அரக்கு, சணல், மெழுகு, குங்கிலியம், மூங்கில், நெய் ஆகிய பொருட்களைச் சேர்த்து விரைவாய் எரிந்து அழியும் வகையில் ஒரு மாளிகையை அமைக்கச் செய்தான். அந்த மாளிகையில் குந்தி, தருமன் முதலான பாண்டு மக்கள் ஐவரையும் அழைத்து தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்தான். அவ்வாறு பாண்டவர்களை அழிக்க பாதகமாய்த் திட்டமிட்ட பகைவர்கள் கூட்டத்தினை மாய்ப்பதற்கு வருக. பாண்டவர்களுக்குத் துணையாக நின்ற பீசுமர், விதுரன் ஆகியோரைக் காக்க வருக.
அறுசீர் விருத்தம் ( மா மா காய் )
பெற்றோர் பிள்ளை யாவரையும்
சமமாய் எண்ணி காக்காமல்
ஒற்றைப் பார்வை பார்த்தாலும்
போற்றிக் காப்ப துநம்கடமை
உறவைப் போற்றும் திரௌபதியே!
மெல்ல நகர்ந்து நீவருக.
சிறப்பாய் குலத்தைக் காக்கின்ற
தருமன் மனைவி நீவருக. 52
பெற்றோர்கள் தாம் பெற்ற பிள்ளைகள் அனைவரையும் சமமாக எண்ணிக் காத்திடாமல், ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டாலும் அவர்களை மதித்துக் காக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். உறவினரைப் போற்றிக் காக்கும் திரௌபதியே! மெல்ல நகர்ந்து வருக. சிறப்பாக எங்கள் குலத்தைக் காக்கின்ற தருமன் மனைவியே! வருக.
பன்னிருசீர் விருத்தம் ( விளம் மா தேமா )
இருகரை தழுவிச் செல்லும்
பெரும்புனல் நிறைந்த ஊரில்
வரம்பிலாக் கரும்பும் நெல்லும்
பசுமையாய்ச் சிரிக்கும் எங்கும்
வரப்பிலே குழைத்த சேற்றால்
அலவனும் அமைப்பான் வீட்டை
புனல்வரு ஓடை தன்னில்
கயலினம் உலவி செல்லும்
விரைந்திடும் கொக்கு நாரை
கழனிகள் எங்கும் மேயும்
விரும்பிய தொழிலைச் செய்யும்
உறவுடை மக்கள் வாழும்
இரட்டணை கோயில் கொண்ட
திரௌபதி அம்மா வருக
சிறப்புடன் குலத்தைக் காக்கும்
துருபதன் மகளே வருக 53
இரண்டு கரைகளும் வழியும் அளவிற்கு நீர் நிறைந்த ஊரில், அளவில்லாத கரும்பும் நெல்லும் வளர்ந்து பசுமையாக எங்கும் காட்சி தரும். வரப்பின் ஓரங்களில் குழைத்தெடுத்த சேற்றினால் நண்டுகள் தங்களுடைய வீட்டை அமைக்கும். ஏரி மற்றும் ஆறுகளின் ஓடையில் மீன் இனங்கள் உலவும். விரைவாகச் செல்லக்கூடிய கொக்கும் நாரையும் வயலெங்கும் திரிந்து புழுக்களை உண்டு மகிழும். தான் விரும்பிய தொழில்களைச் சிறப்பாகச் செய்து மக்கள் உறவினருடன் நெருங்கி வாழும் இரட்டணையில் கோவில் கொண்டுள்ள திரௌபதி அம்மா வருக. சிறப்பாக குலத்தைக் காக்கும் துருபதன் மகளே வருக.
இருபத்துநான்குசீர் விருத்தம் ( காய் மா தேமா )
பாஞ்சால நாட்டு மன்னன்
மகள்சிகண்டி செய்கை யாலே
பீசுமரால் தனக்கு துன்பம்
வருமென்று அச்சம் கொண்டார்
சிறுவயதாய் இருந்த போது
விளையாட்டாய் தனது நாட்டின்
பாதியினைத் தருவேன் என்று
துரோணருக்கு மொழிந்த தாலே
பாஞ்சால நாட்டில் பாதி
பின்னாளில் துரோணர் கேட்க
விளையாட்டில் சொன்ன தெல்லாம்
வினையாகச் செய்வ தில்லை
ஒருபோதும் தரவே மாட்டேன்
எனமறுத்து மொழிந்த தாலே
தன்சீடர் கொண்டு நாட்டை
அபகரித்த செயலை எண்ணி
பாஞ்சாலன் முடிவு செய்து
பாண்டவரில் பார்த்த னுக்கு
தன்மகளை மணமு டித்தால்
தன்னோடு தனது நாடும்
பாதுகாப்பாய் இருக்கும் என்று
எண்ணியஇக் கார ணத்தால்
உறுதியான கிந்து ரத்தில்
நாணேற்றி வெல்ப வர்க்கே
பாஞ்சாலி மாலை சூட
மணம்செய்து தருவேன் என்றார்
பலநாட்டு மன்னர் வந்தார்
தோல்வியினைத் தழுவிச் சென்றார்
பாஞ்சாலன் எண்ணம் போல
நாணேற்றி வெற்றி கொண்ட
பார்த்தனுக்கு மாலை யிட்ட
பாஞ்சாலி வருக வருக 54
பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் தன் மகளான சிகண்டி, பீசுமரைப் பழிவாங்குவதற்காக அம்பா என்ற காசி அரசனின் மகள் தவமிருந்து பெற்ற மாலையை அணிந்து கொண்டதனால் பீசுமரால் தனக்கு துன்பம் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் இருந்தான். மேலும் துருபதனும் துரோணரும் சிறுவயதாய் இருந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, துருபதன் நான் அரசாளும் காலத்தில் என் தோழனான உனக்குப் பாதிநாட்டைத் தருகிறேன் எனக் துரோணரிடம் வாக்களித்திருந்தான். இதனைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்த துரோணர், துருபதன் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும்போது, நீ சிறுவயதில் கூறினதுபோல, பாதி நாட்டை எனக்குத் தா என கேட்டார். விளையாட்டாய் விளையாட்டில் சொன்னதெல்லாம் ஏற்புடையது ஆகாது. நான் நாட்டைத் தரமாட்டேன் என மறுத்தான் துருபதன். இதனால் கோபம் அடைந்த துரோணர், பின்னாளில் தன்னுடைய சீடனான அர்ச்சுனனைப் போரிடச் செய்து துருபதனை வெற்றி கொண்டு பாதிநாட்டைக் கைப்பற்றினார். இதனால் பாண்டவர்களில் அர்ச்சுனனுக்குத் தன்மகள் திரௌபதியைக் திருமணம் செய்து கொடுத்தால் தனக்கும் தன் நாட்டுக்கும் பாதுகாப்பு எனக்கருதிய துருபதன், யாரும் வளைத்து நாணேற்ற இயலாத அர்ச்சுனனால் மட்டும் வளைத்து நாணேற்றத்தக்க ‘கிந்துரம்’ என்ற வலிமையான வில்லை வளைத்து நாணேற்றி இலக்கினை வீழ்த்துவோருக்குப் பாஞ்சாலி மாலைசூட மணம் முடித்துத் தருவேன் என்று, பல நாட்டு மன்னர்களுக்கு செய்தி அனுப்பினான் துருபதன். சுயம்வரத்தில் அனைத்து நாட்டு மன்னர்களும் தோல்வியையே தழுவினர். பாஞ்சால நாட்டு மன்னன் நினைத்தது போல அர்ச்சுனனே இறுதியில் வெற்றி பெற்றான். வெற்றி பெற்ற அர்ச்சுனனுக்கு மாலை சூடிய பாஞ்சாலியே வருக வருக.
எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் காய் )
கற்புநெறி தவறாத கன்னியர்கள் ஐந்துபேரில்
ஒருத்தியாக விளங்குகின்ற பாஞ்சால இளவரசி
முற்பிறப்பு வேண்டுதலில் ஐவரைநீ மணமுடித்தாய்
இப்பிறப்பில் ஐந்துமகன் பெற்றிடுத்து நீமிளிர்ந்தாய்
பெற்றமகன் கொன்றவன்பால் அன்புகொண்டு மன்னித்து
பகைவருக்கும் இரங்கியநல் பெண்மகளே நீவருக
குற்றம்கு றைசெய்தாலும் எம்குலத்தில் உள்ளவரை
பெற்றவள்போல் முன்னின்று காத்திடவே நீவருக 55
கற்பு நெறியில் இருந்து மாறாத சீதை, அகலிகை, தாரை, மண்டோதரி, திரௌபதி ஆகிய ஐந்துபேருள் ஒருத்தியாக இருப்பவள் பாஞ்சால நாட்டு இளவரசி பாஞ்சாலி. இவள் முந்தைய பிறப்பில் நல்ல கணவன் வேண்டும் என ஐந்து முறை சிவனிடம் வேண்டியதால் இப்பிறப்பில் தருமர் முதலாக ஐந்து பேரை திருமணம் செய்து கொண்டாள். இவர்களின் மூலம் ஒவ்வொரு வருக்கும் ஒரு குழந்தை எனப் பிரிதி விந்தியன், சுதசோமன், சுருதகீர்த்தி, சதாநீகன் சுருதகர்மா என ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து தாய் என்ற தன்மையை அடைந்தாள். குருசேத்திரப் போரின் இறுதிநாளில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது துரோணரின் மகன் அசுவத்தாமன் இக்குழந்தைகள் ஐவரையும் கொன்றான். இவ்வாறு தன்மகனைக் கொன்ற அசுவத்தாமனின் பரிதாப நிலையைக் கண்டு மனமிரங்கி அன்புகொண்டு மன்னித்தாள். இவ்வாறு பகைவர்களுக்கும் அருளும் தன்மை கொண்ட பெண்மகளே வருக. குற்றம் குறைகள் செய்திருந்தாலும் முன்னின்று எங்கள் குலத்தைக் காக்க வருக.
எண்சீர் விருத்தம்
(காய் காய் மா காய் காய் காய் மா தேமா )
பரிதியவன் தாக்குதலில் இருந்து உயிரினத்தைக்
காக்கின்ற ஓசோனின் படலம் போல
வருகின்ற துன்பத்தில் இருந்து உனைவேண்டி
நிற்கின்ற குடிமக்கள் யாவ ரையும்
பரிவோடு அன்புகாட்டும் அண்ண னான
பரந்தாமன் துணையோடு காக்க வருக.
ஒருமகளாய் நீயிருந்து உனது கணவர்கள்
விடுவித்த பெண்மகளே! காக்க வருக. 56
சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து மண்ணில் வாழும் உயிரினங்களைக் காக்கின்ற ஓசோன் படலம் போல, வருகின்ற துன்பத்தில் இருந்து உன் அருள் வேண்டி நிற்கின்ற குடிமக்கள் அனைவரையும் உனக்கு உறவாகவும் தலையைப் போல முதன்மையாகவும் இருக்கும் உனது அண்ணனான பரந்தாமன் துணையோடு காக்க வருக. ஒரு தனி பெண்ணாக இருந்து உன் கணவர்கள் ஐந்துபேரையும் அடிமைத்தளையில் இருந்து விடுவித்த பெண்மகளே! காக்க வருக.
பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )
வையத்தில் உயிர்கள் தோன்ற
ஏதுவாக அமைந்த கண்டம்
லெமூரியாவில் தோன்றி யமாந்தர்
பல்வேறு நாடு தேடி
தீயாக பரவி எங்கும்
குழுவாக வாழ்ந்து தனது
சந்ததியைப் பெருக்கி இன்றும்
வளத்தோடு வாழு கின்றார்
தாயகத்தில் இருந்து அவர்கள்
தம்மொழியாம் தமிழை அங்கும்
நல்முறையில் பேசி தனது
வாரிசுக்கும் கற்றுத் தந்தார்
தாய்மொழியாம் தமிழைப் பேசும்
மாந்தரினம் எனது உறவு
என்சொந்தம் காப்ப தற்கு
திரௌபதியே! வருக வருக. 57
இந்தப் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு அடிப்படைத் தன்மைகள் கொண்ட கண்டம் லெமூரியா கண்டம். இந்த லெமூரியா கண்டத்தில் பிறந்த மாந்தர்கள், பல்வேறு நாடுகளுக்கு தீயைப்போல பரவி, குழுவாக வாழ்ந்து தனது சந்ததியினரைப் பெற்றெடுத்து இன்றும் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தன்னுடைய தாயகமான தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழியோடு அங்கு சென்று அங்கும் தமிழ்மொழியை நல்லமுறையில் பேசி, தன்னுடைய வாரிசுகளுக்கும் அம்மொழியினைக் கற்றுக் கொடுத்து பேசச்செய்தனர். அவ்வாறு தமிழைப் பேசும் மனிதர்கள் அனைவரும் என்னுடைய உறவினர்கள். அச்சொந்தங்களைக் காக்க திரௌபதியே! வருக வருக.
பதினான்குசீர் விருத்தம்
( மா விளம் மா விளம் மா விளம் விளம் )
பெண்ணில் பெருந்தகை நெருப்பில் உதித்தவள்
கன்னி யரைவருள் சிறந்தவள்
முன்னை வினையினால் மண்ணில் உதித்தனள்
திட்ட துய்மனின் சகோதரி.
எண்ணி யஉருவில் வந்து வான்வெளி
இரண்டு அடிகளில் அளந்தவன்
மண்ணை உண்டுதான் இறைவன் என்பதை
உணர்த்தி நின்றவன் சகோதரி
கணவ னாகவே பாண்டு மக்களாம்
ஐந்து பேரையும் கொண்டவள்
மண்ணில் பெண்ணியம் முதலாய்ப் பேசிய
குந்தி மாத்ரியின் மருமகள்
எண்ணும் செயல்களை மண்ணில் நடத்தியே
வெற்றி கொண்டவள் வருகவே.
உன்னை வணங்கிடும் குலத்தைக் காத்திட
யாக சேனியே வருகவே. 58
பெண்களில் சிறந்தவள். யாகத் தீயில் தோன்றியவள். கன்னியர்கள் ஐந்து பேரில் சிறப்பானவள். முற்பிறப்பின் பயனாக, இன்று இந்தப் பூமியில் பிறந்துள்ளாள். யாகத் தீயில் தன்னோடு தோன்றிய திட்டத்துய்மனின் சகோதரி. தாம் நினைத்த உருவில் வந்து வானத்தையும் பூமியையும் தன்னுடைய இரண்டு அடியால் அளந்தவனும் மண்ணை உண்டு தான்தான் இறைவன் என்ற உண்மையை இந்த உலகிற்கு உணர்த்தியவனுமாகிய கண்ணனின் சகோதரி. தன்னுடைய கணவனாக பாண்டுவின் மக்கள் ஐவரையும் கொண்டவள். இந்தப் பூமியில் முதன்முதலாக பெண்ணிற்காகக் குரல்கொடுத்த முதல் போராளி. குந்தி, மாத்ரியின் மருமகள். தான் நினைத்த செயலை மண்ணுலகில் நடத்தி வெற்றிகொண்ட திரௌபதியே! வருக. உன்னை வணங்கிடுவோரின் குலத்தைக் காத்திட யாகசேனியே! வருக.
பட்டுத் துகிலுடன் தங்கம் அணிமணி
யாவும் உடுத்திய நங்கையே!
திருஷ்ட துய்மனின் அன்பு சகோதரி
மண்ணில் ஆடிட லாகுமோ?
தொட்டுச் சுகம்தரும் மேனி அழகினை
காண வரிசையில் நிற்கிறார்
குறும்பு பிள்ளைபோல் சொல்ல சொல்லவே
கேட்டி டாமலே நடிக்கிறாய்
எட்டாம் பிள்ளையாய் மண்ணில் உதித்தவன்
குறும்பு போலவே செய்கிறாய்
அன்னை வடிவிலே வந்த பூதகி
கொன்று மாய்த்தவன் தங்கைநீ
சிட்டுக் குருவிபோல் துள்ளி எழுந்துநீ
மெல்ல அருகினில் வருகவே.
பாண்டு பிள்ளைகள் காத்து கிடக்கிறார்
கொஞ்சிப் பேசிட வருகவே. 59
பட்டினால் நெய்த ஆடையுடன் மணிவகைகள் பலவற்றையும் அணிந்த பெண்ணே. திட்டத்துய்மனின் அன்புச் சகோதரியே! புழுதிகள் நிறைந்த மண்ணில் ஆடிடலாமோ? தொட்டால் சுகம் தரும் உன்பிஞ்சு மேனி அழகைக் காண்பதற்காக வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். குறும்பு பிள்ளைபோல, நான் சொல்லச் சொல்ல காதில் வாங்கிக் கொள்ளாமல், கேட்காதவள் போல நடிக்கிறாய். எட்டாம் பிள்ளையாகப் பிறந்தவனின் குறும்புபோல, குறும்புகள் செய்கிறாய். அன்னை வடிவில் வந்த பூதகியைக் கொண்டு மாய்த்தவனின் தங்கை நீ. சிட்டுக் குருவிபோல துள்ளி எழுந்து மெல்ல அருகினில் வருக. பாண்டுவின் பிள்ளைகள் உனக்காகக் காத்துக் கொண்டிருக் கின்றார்கள் அவர்களோடு கொஞ்சி பேசி விளையாட வருக.
தந்தை வீட்டிலே செல்லப் பிள்ளையாய்
துன்பம் இலாமலே இருந்தவள்
தந்தை சொற்படி வந்த மணமகன்
கழுத்தில் மாலையைச் சூடினாய்
வந்த வீட்டிலே உள்ள யாரையும்
உந்தன் உறவுபோல் எண்ணியே
இன்ப துன்பமும் தாங்கி வாழ்வினை
ஊரு மெச்சவே வாழ்கிறாய்
சிந்தை எண்ணிட வந்து நின்றிடும்
அண்ணன் கண்ணனின் துணையுடன்
வஞ்சம் சூழ்ச்சியால் உன்னை எதிர்த்தவர்
வென்று காட்டிய நங்கையே!
உந்தன் தயவினால் நாங்கள் வாழ்கிறோம்
அன்பு செய்திட வருகவே.
நல்ஊர் இரட்டணை கோவில் கொண்டிரும்
அன்னை திரௌபதி வருகவே. 60
உனது தந்தை துருபதன் வீட்டில் செல்லப் பிள்ளையாக எந்தவிதத் துன்பமும் இல்லாமல் இருந்தவள். தந்தையின் சொல்லை ஏற்று, போட்டியில் வெற்றி பெற்ற மணமகன் கழுத்தில் மாலைசூடினாய். புகுந்த வீட்டில் உள்ள அனைவரையும் உன் உறவினர்போலவே மதித்து, இன்ப துன்பங்கள் வந்த காலத்தும் அவற்றைத் தாங்கி, இந்த உலகோர் புகழும் படியாக வாழ்க்கை நடத்தினாய். நீ நினைத்தவுடன் உன்னருகில் வந்துநிற்கும் உனது அண்ணன் கண்ணன் துணையோடு, வஞ்சகமாகவும் சூழ்ச்சியாகவும் உன்னை எதிர்த்து நின்றவர்களை, வென்று காட்டிய பெண்ணே. உன்னுடைய அருளினால் நாங்கள் வாழ்கிறோம். எங்கள் மீது அன்பு செலுத்திட வருக. நல்ல ஊரான இரட்டணையில் கோவில் கொண்டுள்ள திரௌபதி அம்மையே! வருக.