நீராடல் பருவம்
இருபத்துநான்குசீர் விருத்தம் ( மா மா காய் )
கடலைக் கடைந்த தருணத்திலே
கண்டார் மயக்கும் அழகினிலே
அமிழ்தத் தோடு வெளிவந்த
அழகில் சிறந்த அகலிகையை
அடையும் நோக்கில் ஆசையுடன்
தேவர் பலரும் வந்தனரே
பிரம்ப தேவர் இருபுறமும்
தலைகள் இருக்கும் பசுகண்டு
அடைந்தா ருக்கே இவளென்று
போட்டி ஒன்றை நடத்திட்டார்
கன்றை ஈனும் பசுவிற்கு
இரண்டு புறமும் தலையுண்டு
வென்று வந்த கௌதமரும்
அழகி தன்னைக் கரம்பிடித்தார்
தோல்வி யுற்ற இந்திரனோ
எவ்வா றேனும் அகலிகையை
அடைய வேண்டும் என்றெண்ணி
ஒருநாள் இரவு தந்திரமாய்
கௌதமர் வெளியே அனுப்பிவைத்து
அகலி கையோடு இணைந்திட்டான்
உண்மை அறிந்த கௌதமரோ
கல்லாய் போக சபித்திட்டார்
இராமர் பாத தூசுபட
கல்லும் பெண்ணாய் மாறியதே
இடையன் ஆன கிருட்டிணனின்
உடன்பி றவாத சகோதரியே!
பெண்ணாய் பிறந்து ஆணான
சிகண்டி தங்கை ஆனவளே!
கௌரவர் வென்ற களிபோடு
சிறப்பாய் புதுநீ ராடுகவே.
பாண்டு மக்கள் யாவருடன்
மகிழ்ந்து புதுநீ ராடுகவே. 81
அமிழ்தம் எடுப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அந்த அமிழ்தத்துடன் திருமகள் முதலாகப் பல பொருட்கள் வெளிப்பட்டன. அவர்களுள் ஒருத்தி அகலிகை. காண்பவர் மயக்கம் கொள்ளும் அழகுடன் இருந்த அவளை இந்திரன் முதலான தேவர்கள் திருமணம் செய்துகொள்ள போட்டிப் போட்டுக்கொண்டு வந்தனர். இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நினைத்த பிரம்மதேவர், இரண்டு பக்கமும் முகம் கொண்ட பசுவினை முதலில் கண்டு வருபவருக்கே அகலிகையைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று ஒரு போட்டியை நடத்தினார். இரண்டு பக்கமும் முகங்கள் கொண்ட பசுவினைத் தேடி இந்திரன் முதலான தேவர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்றனர். கன்றைப் பெற்றெடுக்கும்போது தாய்ப் பசுவிற்கு இரண்டு பக்கமும் முகங்கள் இருக்கும். இதனை நாரதர் உதவியோடு கண்டுவந்து முதலில் சொன்ன கௌதமருக்குப் பிரம்மதேவர் அகலிகையைத் திருமணம் செய்து வைத்தார். பொறாமை கொண்ட இந்திரன் எப்படியாவது அகலிகையை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். ஒருநாள் தமது குடிலில் கௌதமரும் அகலிகையையும் உறங்கிக் கொண்டிருந்தபோது, சேவல் வடிவில் வந்த இந்திரன் கொக்கரிக்க, பொழுது விடிந்தது எனக் கருதிய கௌதமர் ஆற்றங்கரைக்கு நீராடச் சென்று விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்திரன் அகலிகையோடு கூடி இன்பம் அனுபவித்து விட்டான். அதனை அறிந்த கௌதமர், அகலிகையைக் கல்லாகப் போகும்படி சாபம் கொடுத்துவிட்டார். பல ஆண்டுகளாகக் கல்லாய்க் கிடந்த அகலிகை, இராமனின் கால் மாசுப் பட்டவுடன் பெண்ணாக மாறினாள். இடையனான கிருட்டிணனின் உடன்பிறவாத சகோதரியும். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியின் சகோதரியும் ஆனவளே! கௌரவர்களை வெற்றி கொண்ட மகிழ்ச்சியோடு சிறப்பாகப் புதுநீராடுக. பாண்டு மக்கள் ஐவரோடும் மகிழ்ந்து புதுநீராடுக.
பதினான்குசீர் விருத்தம்
( மா விளம் மா விளம் மா விளம் விளம் )
நெருப்புப் பந்தென வானில் இருந்துதன்
ஒளியை உமிழ்ந்திடும் சூரியன்
உலகில் உள்ளவர் இயக்கம் கொண்டிட
ஓய்வில் லாமலே இயங்குவான்
இரவுப் பொழுதிலே உலவி வந்திடும்
ஒற்றை விளக்கென சந்திரன்
இருளில் உள்ளவர் துன்பம் துடைத்திட
ஒளியை வாங்கியே உமிழ்கிறான்
இரண்டு விளக்குகள் சிறப்பாய் தன்னுடை
கடமை இயல்பென செய்யுது
அறிவு பெற்றநாம் தயக்க மின்றியே
பிறர்க்கு உழைத்திட வேண்டுமே.
கருத்த அழகியே சிரித்த முகத்துடன்
பொறுப்பாய் மகிழ்ந்துநீ ராடுக
கற்றோர் மிகுதியாய் இருக்கும் ஊரிலே
வாழும் அன்னைநீ ராடுக 82
நெருப்புப் பந்தாக வானத்தில் இருந்துகொண்டு தனது ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூரியன், உலகத்தினர் இயக்கம் கொன்வதற்காக ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறான். இரவு நேரத்தில் ஒற்றை விளக்காக உலவிக் கொண்டுவரும் சந்திரன், இருளில் இருப்பவர்களின் துன்பத்தைப் போக்க சூரியனின் ஒளியினை வாங்கி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். பகல் இரவு என இரண்டு நேரங்களிலும் சூரிய சந்திரர்கள் மாறிமாறி வந்து சிறப்பாகத் தங்களுடைய வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, அறிவு பெற்றவர்களாகிய நாமும் தயங்காமல் பிறருக்காக உழைத்திட வேண்டும். கருப்பான நிறமுடைய அழகியே. சிரித்த முகத்துடன் பொறுப்பாக மகிழ்ந்து நீராடு. கற்றோர் மிகுதியாக இருக்கும் ஊரான இரட்டணையில் கோவில் கொண்ட அன்னையே நீராடு.
பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )
அன்னை தந்தை சொல்கேட்டு
அடங்கி நடக்க நீவேண்டும்
ஆசான் சொல்லைத் தட்டாமல்
அறிவைப் பெருக்கி உயர்ந்திடனும்
சின்னச் சின்ன தோல்விகளை
தாங்கிக் கொள்ளும் திறன்வேண்டும்
நல்ல நண்பர் சிலபேரை
துணையாய்க் கொண்டு நடந்திடணும்
தன்னைச் சார்ந்த உறவோடு
சேர்ந்து வாழப் பழகிடணும்
உயிர்க ளிடத்து அன்புகொன்டு
உயிர்க்கொ லைதவிர்த் துவாழ்ந்திடணும்
முன்னோர் வழியில் நடந்தவளே
அன்பாய் புதுநீ ராடுகவே
தரும வழியில் நடந்தவளே
சிறப்பாய் புதுநீ ராடுகவே 83
நம்மைப் பெற்றவர்களாகிய அன்னை, தந்தை ஆகிய இருவரின் சொல்லை ஏற்று அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அறியாமையை நீக்கி அறிவு ஒளி ஏற்றும் ஆசிரியர்களின் சொல்லைத் தட்டாமல் கேட்டு அறிவைப் பெருக்கி வாழ்வில் உயர்ந்திட வேண்டும். சின்னச் சின்ன தோல்விகளையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். நல்ல நண்பர்கள் சிலரைத் தனக்குத் துணையாக ஏற்று நல்முறையில் நடந்துகொள்ளவேண்டும். தன்னைச் சார்ந்த உறவுகளோடு சேர்ந்து வாழப் பழகவேண்டும். உயிர்களிடம் அன்பு கொள்ளவேண்டும். எந்த உயிர்களையும் கொலை செய்யாமல் வாழவேண்டும். இவ்வாறு முன்னோர்கள் கூறிய நல்வழியில் நடப்பவளே! அன்பாக புதுநீராடு. தருமத்தின் வழியில் நடப்பவளே! சிறப்பாக புதுநீராடு.
எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் மா )
மரங்களிலே கூடுபின்னி சிட்டினங்கள் வாழும்
ஒருன்றுக்கு ஒன்றுஎன வரையறையில் கூடும்
வரமாகப் பெற்றெடுத்த குழந்தைகளுக் காக
ஒற்றுமையாய் உணவுதேடி பரிவோடு ஊட்டும்
பெரிதாக வளர்ந்தவுடன் ஓரிடத்தைக் காட்டி
தனியாக வளர்வதற்கு துணையாக இருக்கும்
கிருட்டிணனைத் துணைகொண்ட அன்னைநீரா டுகவே
பாண்டுவின்நல் மருமகளே புனிதநீரா டுகவே 84
மரக்கிளைகளில் கூடுகள் கட்டி சிட்டுக்குருவிகள் வாழும். அவை ஓர் ஆண் குருவிக்கு ஒரு பெண் குருவி என்று வகுத்துக் கொண்டு ஒன்றோடு ஒன்று கூடும். வரங்களின் மூலம் பெற்ற நமது குழந்தைகளுக்காக ஒற்றுமையுடன் உணவுகளைத் தேடி, பாசத்தோடும் பரிவோடும் ஊட்டி மகிழும். தம் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தவுடன் அவைகள் தங்குவதற் கான ஓரிடத்தைக் காட்டி தனியாக வளர்வதற்கு துணையாக இருக்கும். அத்தகைய ஊரில் வாழும் கிருட்டிணனைத் துணையாகக் கொண்ட அன்னையே நீராடு. பாண்டுவின் நல்ல மருமகளே புனித நீராடு.
பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )
தருமதேவர் அம்சத் தோடு
குந்திதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்நல் மூத்த மைந்தன்
தருமரெனும் பெயரைக் கொண்டோன்
தருமத்தைத் தலைமேற் கொண்டு
நல்லாட்சி நடத்தும் வேந்தன்
பெரியோரின் சொல்லைத் தட்டா
விரதத்தை கொண்டு வாழ்ந்தான்
திரௌபதியின் கணவ ராகி
சிறப்போடு குடும்பம் நடத்தி
பிரதிவிந்தி யனென்ற மகனும்
சுதனுஎன்ற மகளும் பெற்றோன்
கௌரவர்கள் வெற்றி கொண்டு
அத்தினாபு ரத்தை ஆளும்
யுதிட்டிரர்தே வியேநீ ராடு
சிகண்டியின் தங்கைநீ ராடு 85
எமதர்மரின் தன்மைகளைக் கொண்டு குந்திதேவி பெற்றெடுத்த, பாண்டுவின் முதல் மகன். தருமர் என்னும் பெயரைக் கொண்டவன். தருமத்தையே முதன்மையாகக் கொண்டு நல்லதொரு அரசாட்சியை நடத்திய அரசன். பெரியவர்களின் சொல்லைத் தட்டுவதில்லை என்ற கொள்கை உடையவன். திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டு, பிரிதிவிந்தியன் என்ற மகனையும் சுதனு என்ற மகளையும் பெற்றெடுத்தவன். கௌரவர்களைப் போரில் வென்று அத்தினாபுரத்தை ஆளும் யுதிட்டரோடு தேவியே நீராடு. சிகண்டியின் தங்கையே நீராடு.
காற்றரசன் அம்சத் தோடு
குந்திதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்இ ரண்டாம் மைந்தன்
வீமனெனும் பெயரைக் கொண்டோன்
ஆற்றலிலே பத்தா யிரம்நல்
யானைபலம் கொண்ட வீரன்
கதாயுதத்தில் பயிற்சி பெற்றோன்
யாருமஞ்சும் தோற்றம் கொண்டோன்
ஆற்றல்சார் கிருட்டி ணையோடு
அரக்கரின இடும்பி மணந்து
சுதசோமன் கடோற்க சஎனும்
இரண்டுபெரும் வீரர் பெற்றோன்
காற்றுபோல துரியோ தனனைச்
தூக்கிதொடை அடித்து கொன்ற
பீமனின்தே வியேநீ ராடு
பாஞ்சாலன் மகள்நீ ராடு 86
காற்றின் அரசனான வாயுவின் தன்மைகளைக் கொண்டு குந்திதேவி பெற்றெடுத்த பாண்டுவின் இரண்டாவது மகள். வீமன் என்னும் பெயரைக் கொண்டவன். பத்தாயிரம் யானை பலம் கொண்ட ஆற்றல்மிகுந்த வீரன். கதை ஆயுதப் பயிற்சியில் கைதேர்ந்தவன். காண்பவர் அச்சம் கொள்ளும் தோற்றம் கொண்டவன். ஆற்றல் மிகுந்த கிருட்டிணையோடு, அரக்கர் குலத்து இடும்பியையும் மணந்தவன். சுதசோமன், கடோற்கசன் என்னும் இரண்டு பெரும் வீரர்களைப் பெற்றெடுத்தவன். காற்றைப் போல சுழற்றி துரியோதனனைத் தனது தொடையில் வைத்து அடித்துக் கொன்றவன். இத்தகைய சிறப்புமிகுந்த பீமனின் தேவியே! நீராடு. பாஞ்சாலன் மகளே! நீராடு.
இந்திரனின் அம்சத் தோடு
குந்திதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்நல் மூன்றாம் மைந்தன்
பார்த்தீபன் பெயரைக் கொண்டோன்
பிந்துகின்ற நிலையில் லாத
வில்லாற்றல் மிக்க வீரன்
கிருட்டிணனின் இனிய நண்பன்
குருதுரோணர் முதன்மைச் சீடன்
இந்துநுதல் யாக சேனி
சுபத்திரைநல் உலுப்பி யோடு
சித்திராங்க தையை மணந்தோன்
சுருதகீர்த்தி அபிமன் யுவுடன்
மைந்தரில் சிறந்தோன் அரவான்
பாப்புருவா கனனின் தந்தை
அர்ச்சுனனின் தேவிநீ ராடு
துருபதனின் மகள்நீ ராடு 87
இந்திரனின் அம்சத்தோடு குந்திதேவி பெற்றெடுத்த பாண்டுவின் மூன்றாம் மகன் பார்த்தீபன் என்னும் பெயரைக் கொண்டவன். பின் செல்லுகின்ற நிலை இல்லாதவன். வில்லாற்றலில் சிறந்த வீரன். கிருட்டிணனின் இனிய நண்பன். குருதுரோணரின் முதன்மையான சீடன். சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய யாகசேனி, சுபத்திரை, உலுப்பி, சித்திராங்கதை ஆகிய மூவரையும் திருமணம் செய்துகொண்டவன். சுருதகீர்த்தி, அபிமன்யு, அரவான், பாப்புருவாகனன் ஆகியோரின் தந்தைதையாக விளங்கும் அர்ச்சுனனோடு திரௌபதியே! நீராடு, துருபதனின் மகளே! நீராடு.
அசுவினிதே வரம்சத் தோடு
மாத்ரிதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்நல் நான்காம் மைந்தன்
நகுலனெனும் பெயரைக் கொண்டோன்
விசுவாசம் மிகுந்த நங்கை
திரௌபதியை மணந்த பின்னர்
சதாநீகன் தந்தை யாகி
விராடமன்னன் பணியை ஏற்று
வசியமாகக் குதிரை பேசும்
பேச்சதனை பேசி காத்தோன்
வாள்வீசும் போரில் சிறந்தோன்
கர்ணனின் மக்கள் வென்றோன்
வசுதேவர் மைந்த னான
வாசுதேவன் அன்புத் தங்கை
கிராந்திகன் தேவிநீ ராடு
துருபதனின் மகள்நீ ராடு 88
அசுவினி தேவர்களின் குணங்களைப் பெற்று, மாத்ரிதேவி பெற்றெடுத்த பாண்டுவின் நான்காம் மகன் நகுலன் என்னும் பெயருடையோன். விசுவாசம் மிகுந்த பெண்ணான திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டவன். சதாநீகன் என்பவனின் தந்தை. பாண்டவர்களின் அஞ்ஞான வாச காலத்தில் விராட நாட்டு மன்னன் ஆணையை ஏற்று குதிரைக் காப்பாளனாகப் பணியாற்றி, குதிரைபேசும் மொழியைப் பேசி(பரிபாசை), குதிரைகளைத் தம்சொற்படி நடக்கவைத்தவன். வாள் போரில் சிறந்தவன். கர்ணனின் பிள்ளைகளைப் போரில் கொன்றவன். வசுதேவரின் மகனான வாசுதேவனின் அன்புத் தங்கையே, கிராந்திகன் (நகுலன்) துணைவியே! நன்நீராடு. துருபதன் மகளே! நீராடு.
அசுவினிதே வரம்சத் தோடு
மாத்ரிதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்நல் ஐந்தாம் மைந்தன்
சகாதேவன் பெயரைக் கொண்டோன்
பசுகுணத்து பாஞ்சா லியோடு
மகதநாட்டு மகளை மணந்தோன்
சுருதசேனன் தந்தை யாகி
விராடமன்னன் பசுவைக் காத்தோன்
வசமாக வாளை வீசும்
அறிவாற்றல் மிக்க வீரன்
முக்காலம் அறிந்து சொல்லும்
சோதிடநல் கலையைக் கற்றோன்
வசியமாகப் பகடை உருட்டும்
பாதகனாம் சகுனி வென்றோன்
தாத்திரிபா லனுடன்நீ ராடு
பாஞ்சாலன் மகள்நீ ராடு 89
அசுவினி தேவர்களின் குணங்களைப் பெற்று, மாத்ரிதேவி பெற்றெடுத்த பாண்டுவின் ஐந்தாம் மகன் சகாதேவன் என்னும் பெயருடையோன். பசுவைப் போன்ற சாதுவான குணங்களைக் கொண்ட திரௌபதியையும் மகதநாட்டு மன்னன் மகளையும் திருமணம் செய்து கொண்டவன். சுருதசேனனின் தந்தையானவன். விராட நாட்டு மன்னனின் பசுக்கூட்டங்களைத் காத்தவன். வசமாக வாள் வீசும் பயிற்சி பெற்ற வீரன். அறிவாற்றலில் சிறந்தவன். மூன்று காலங்களையும் அறிந்து சொல்லும் சோதிடக் கலையில் கைதேர்ந்தவன். வசியமாகப் பகடை உருட்டும் தன்மைகொண்ட சகுனியைப் போரில் வென்றவன். அத்தகு தாத்திபாலனுடன் (சகாதேவன்) நீராடு, பாஞ்சாலன் மகளே நீராடு.
துர்வாச முனிவர் தந்த
சிறப்புமிகு வரத்தி னாலே
தேவர்கள் அம்சம் பெற்று
குந்திமாத்ரி ஈன்றெ டுத்த
தருமராதி பாண்டு மக்கள்
சிறப்புடனே கலைகள் கற்று
யாவருமே மதிக்கும் வண்ணம்
நல்லாட்சி நடத்தி வந்தார்
பெருங்குளத்தில் எறிந்த கல்லாய்
விதிவழியே சென்று பின்னர்
போரினிலே வெற்றி பெற்று
தன்பங்கை வென்றெ டுத்த
பெருமக்கள் ஐவ ரோடு
ஒன்றிணைந்து நன்னீ ராடு
பெருமைமிக சொந்த பந்தம்
சேர்ந்ததென நன்னீ ராடு. 90
துர்வாச முனிவர் குந்திதேவிக்குத் தந்த சிறப்பான ஐந்து வரத்தினால் தேவர்களின் குணங்களைக் கொண்டு குந்தியும் மாத்ரியும் பெற்றெடுத்த தருமர் முதலான பாண்டுவின் மக்கள் ஐவரும் சிறப்பாகக் கலைகளை எல்லாம் கற்று, யாவரும் மதித்து வணங்கும் தன்மையில் நல்லாட்சி நடத்தி வந்தனர். பெரிய குளத்தில் எறிந்த சிறியக் கல்லைப்போல, விதி காட்டிய வழியில் சென்று, இறுதியில் போரில் வெற்றி கொண்டு, தங்களின் நாட்டினைப் பெற்ற பெருமைக்குரிய மக்கள் ஐவரோடும் ஒன்றாக நன்னீராடு. பெருமை தரும் சொந்தபந்தங்களோடு சேர்ந்து நன்னீராடு