ஊசல் பருவம்
பன்னிருசீர் விருத்தம் ( காய் காய் காய் )
தண்ணீரோ வென்னீரோ தன்னுடற்கு
ஏற்றதொரு நன்னீரில் நீராடி
வானவில்லின் சாயமிட்ட உடல்மறைக்கும்
ஆடைகளைக் கச்சிதமாய் தைத்துடுத்தி
தண்மைதரு சந்தனமும் வாசமிகு
திரவியமும் கொண்டுபூசி திலகமிட்டு
அணிமணிகள் பலவற்றை அங்கமெல்லாம்
ஆடையோடும் உறுப்போடும் பொருந்தபூட்டி
பெண்கூட்டம் தனக்குமுன்பாய் சென்றிடாமல்
தான்முந்தி விரைந்துவந்து முன்நின்று
பாஞ்சால நட்டுமன்னன் துருபதனின்
மகளாடும் அழகுகாண வந்துநின்றார்
விண்முட்டும் புகழ்படைத்த திருமாலின்
அன்புதங்கை பொன்னூசல் ஆடியருளே
பாண்டவர்கள் உளம்கவர்ந்த பெருந்துணையாம்
பாஞ்சாலி பொன்னூசல் ஆடியருளே. 91
குளிர்ந்த நீரோ, சூடான நீரோ தன்னுடைய உடலுக்கு ஏற்றதொரு நல்ல நீரில் நீராடி, வானவில்லின் சாயத்தை ஆடையில் இட்டு, தன்னுடைய உடலை மறைக்கத் தகுந்த வகையில் அளவாக தைத்து உடுத்தி, குளிர்ச்சி தரும் சந்தனத்தையும் வாசனை திரவியங்களையும் உடலிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, அழகுதரும் மணிவகைகளையும் பொன்னாபரணங்களையும் ஆடைமீதும் உறுப்புகளிலும் பொருத்தமாகப் பூட்டிக்கொண்டு, பெண்கள் கூட்டம் யாரும் தனக்கு முன்பாக செல்லா வகையில் முந்திக்கொண்டு வேகமாக வந்து முன்பாக நின்று, பாஞ்சால நாட்டு மன்னனின் மகளான நீ ஆடும் அழகினைக் காண்பதற்காக வந்து நின்றனர். வான் அளவு புகழ்கொண்ட திருமாலின் அன்புத் தங்கையே! பொன்னூஞ்சல் ஆடுக. பாண்டவர்களின் உள்ளம் கவர்ந்த பெருமை மிகுந்த பாஞ்சாலியே! பொன்னூஞ்சல் ஆடுக.
எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் மா )
செங்கமலம் வெங்கமலம் இருமலரில் உறையும்
அலைமகளும் கலைமகளும் ஒருவீட்டில் இருந்தால்
பொங்கிவரும் பெரும்பகையும் பனிபோல விலகும்
விரும்புகிற செயல்செய்து பெரும்புகழை அடைவர்
எங்ககுலம் காத்துநிற்கும் திரௌபதியை வணங்க
கல்வியொடு பெருஞ்செல்வம் வீடுதேடி வரும்என்
சிங்கமகள் திரௌபதிபொன் னூசலாடி யருளே
தங்கமகள் கிருட்டிணைபொன் னூசலாடி யருளே 92
செந்தாமரை வெள்ளைத் தாமரை ஆகிய இரண்டு மலர்களில் அமர்ந்திருக்கும் திருமகளும் கலைமகளும் ஒரு வீட்டில் இருந்தால் பெருகி வரும் பெரிய பகையும் பனிபோல விலகிவிடும். தான் விரும்பிய செயல்களைச் செய்து புகழினை அடைவர். எங்கள் குலம் காக்கும் திரௌபதியை வணங்க, கல்வியோடு பெருஞ்செல்வமும் வீடுதேடி வந்து சேரும். சிங்க மகளான திரௌபதியே! பொன்னூஞ்சல் ஆடுக. தங்க மகளான கிருட்டிணையே! பொன்னூஞ்சல் ஆடுக.
இருபுறமும் ஆறுகள்சூழ் சிறப்பான நகரில்
குளிர்சூழ்ந்த நிலப்பரப்பில் பயிரினங்கள் சிரிக்கும்
கரும்போடு நெல்வகைகள் முப்போகம் நடத்தி
ஓய்வின்றி உழைத்தமக்கள் வறுமையின்றி வாழும்
இரட்டணையில் உறைகின்ற பாஞ்சாலி அம்மா!
சிறப்பாக நாடாண்ட துருபதனின் மகளே!
நெருப்புதித்த தேவியேபொன் னூசலாடி யருளே!
உலகலந்தான் தங்கைபொன் னூசலாடி யருளே! 93
இரண்டு பக்கமும் ஆறுகள் சூழ்ந்திருக்கும் சிறப்பான நகரத்தில், குளிர்ச்சி நிறைந்த நிலப்பரப்பில் பயிரினங்கள் செழுமையாக இருக்கும். கரும்புடன் நெல் மூன்று போகமும் விளையும். அத்தகு நிலத்தில் ஓய்வில்லாமல் உழைத்த மக்கள் வறுமை இன்றி வாழுவர். இத்தகு ஊரான இரட்டணையில் கோவில் கொண்டுள்ள பாஞ்சாலி அம்மையே. சிறப்பான முறையில் நாடாண்ட துருபதனின் மகளே. நெருப்பில் தோன்றிய தேவியே பொன்னூஞ்சல் ஆடுக. உலகை அளந்தவன் தங்கையே பொன்னூஞ்சல் ஆடுக.
ஆண்துணையே இல்லாமல் குடும்பத்தைக் காத்து
பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் அன்னையர்கள் உண்டு
ஆணாக இருந்தபோதும் அன்னையாக மாறி
குழந்தைகளைக் கரைசேர்க்கும் தந்தையரும் உண்டு
பாண்டுமக்கள் ஐவரையும் வழிநடத்தி பின்னர்
வெற்றிவாகை சூடிஇன்று பெருமிதமாய் நிற்கும்
பாண்டவர்கள் தேவியேபொன் னூசலாடி யருளே
திட்டதுய்மன் தங்கையேபொன் னூசலாடி யருளே 94
இந்த மண்ணுலகில் ஆண்கள் துணையே இல்லாமல் குடும்பத்தைக் காத்து பிள்ளைகளை நல்முறையில் வளர்த்தெடுக்கும் அன்னையர்களும் உள்ளனர். ஆணாகப் பிறந்திருந்தாலும் அன்னையாக இருந்து தாயுமானவனாய் குழந்தைகளைக் கரைசேர்க்கின்ற தந்தையர்களும் உள்ளனர். தனி ஒரு பெண்ணாக இருந்து பாண்டு மக்கள் ஐந்துபேரையும் வழிநடத்திச் சென்று வெற்றி வாகை சூடி இன்று பெருமிதத்துடன் வீற்றிருக்கும் பாண்டவர்களின் தேவியே! பொன்னூஞ்சல் ஆடுக. திட்டத்துய்மனின் தங்கையே! பொன்னூஞ்சல் ஆடுக.
எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் தேமா )
அன்னையர்கள் பிள்ளைகட்கு அமிழ்தூட்டும் போது
தன்மொழியை உடன்சேர்த்து பரிவோடு ஊட்டி
முன்னின்று கல்விதனை கற்றிடவும் செய்வர்
அன்னைதந்த மொழியிலேயே கல்வியினைக் கற்றோர்
தன்னுடைய திறமைகளை உலகறியச் செய்து
மண்ணுலகில் அழியாத புகழோடு வாழ்வர்
உன்புகழைப் பாடுகிறேன் பொன்னூஞ்சல் ஆடு
உனைதினமும் வழிபடுவேன் பொன்னூஞ்சல் ஆடு 95
தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைக்கு அமிழ்தமாகிய உணவை ஊட்டும்போது தன் மொழியையும் சேர்த்து அக்கரையோடு ஊட்டி, தானே ஆசானாக இருந்து கல்வியினையும் கற்றிடச் செய்வர். தாய்மொழியிலே கல்வியினைக் கற்றவர்கள் தன்னுடைய திறமைகளை உலகத்தார் அறியும் படியாகச் செய்து இந்த மண்ணுலகில் அழியாத புகழோடு வாழ்ந்திடுவர். அடியவனாகிய நான் உன்புகழைப் பாடுகின்றேன் பொன்னூஞ்சல் ஆடுக. உன்னை ஒவ்வொரு நாளும் வழிபடுகின்றேன் பொன்னூஞ்சல் ஆடுக.
அனுதினமும் உன்பெயரை உச்சரித்து நிற்கும்
அன்புநிறை பக்தருக்கு அருள்செய்ய வேண்டும்
இனத்தோடு சேர்ந்துவந்து பூசனைகள் செய்வார்
குலம்காத்து குறைகளைந்து அருள்வழங்க வேண்டும்
மனச்சுமையாய் வருவோரின் துன்பங்கள் எல்லாம்
பனிபோல விலகசெய்து உளம்குளிர வைக்கும்
என்னன்னை மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடு
குந்திமாத்ரி மருமகளே பொன்னூஞ்சல் ஆடு 96
ஒவ்வொரு நாளும் உன்னுடைய பெயரை உச்சரிக்கும் அன்பு நிறைந்த பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும். தங்கள் கூட்டத்தோடு சேர்ந்து வந்து வழிபாடுகளைச் செய்வோரின் குலத்தினைக் காத்து அவர்களின் குறைகளை எல்லாம் நீக்கி அருள் வழங்க வேண்டும். பெரும் மனச் சுமைகளோடு உன்னை நாடி வருவோரின் துன்பங்களை எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகச் செய்து அவர்களின் உள்ளம் மகிழ வைக்கும் என் அன்னையே மகிழ்ந்து பொன்னூஞ்சல் ஆடுக. குந்தி மாத்ரி மருமகளே பொன்னூஞ்சல் ஆடுக.
அறுசீர் விருத்தம் ( காய் காய் காய் )
துருபதனின் மகளான திரௌபதியே
யாகத்தில் தோன்றியதால் யாகசேனி
கரியநிறம் கொண்டதனால் கிருட்டிணையே
பாஞ்சால இளவரசி பாஞ்சாலி
பெருமைசேர்க்கும் பலபெயர்கள் கொண்டவளே
சிரம்பணிந்து வணங்கிடுவோர் காத்திடவே
விரைவாக பொன்னூஞ்சல் ஆடுகவே
மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடுகவே 97
துருபதனின் மகளாகப் பிறந்ததால் திரௌபதி ஆனாய். யாசர் உவயாசர் நடத்திய யாகத்தில் தோன்றியதால் யாகசேனி ஆனாய். கரிய நிறம் கொண்டதனால் கிருட்டிணை ஆனாய். பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி ஆனாய். இவ்வாறு பெருமை சேர்க்கும் பல பெயர்கள் உனக்கு இருக்கின்றன. இப்பெயர்களால் அழைத்துத் தலைவணங்கும் அடியவர்களைக் காத்திட விரைவாக பொன்னூஞ்சல் ஆடுக. மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடுக.
எண்சீர் விருத்தம் ( காய் காய் மா தேமா )
அபயமென்று சொன்னவுடன் விரைந்து வந்து
கண்ணனவன் உன்னுடைய மானம் காத்து
எப்போதும் உனக்காகத் துணையாய் நின்றான்
அதுபோல உனைவணங்கி வருவோ ருக்கு
தப்பாமல் உன்னருளை தினமும் தந்து
வரும்துன்பம் விலகிடவே செய்ய வேண்டும்
சுபத்திரையின் தோழியேபொன் னூஞ்ச லாடு
வாமனனின் தங்கையேபொன் னூஞ்ச லாடு 98
அபயம் என்று சொன்ன உடனேயே விரைவாக வந்து உன்னுடைய மானத்தைக் காத்து எப்போதும் உனக்குத் துணையாக இருந்தான் கண்ணன். அதுபோல ஒவ்வொரு நாளும் உன்னை வணங்கி வருவோரின் துன்பங்களை எல்லாம் விலக்கி, உன் அருளை அவர்களுக்கு வழங்கி காத்திட வேண்டுமம்மா. சுபத்திரையின் தோழியாக இருப்பவளே! பொன்னூஞ்சல் ஆடுக. வாமனனின் தங்கையே! பொன்னூஞ்சல் ஆடுக.
பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )
அன்னை தங்கை தோழியுடன்
இல்லத் துணையும் பெண்ணினமே
தனது மகளாய் வருபவளும்
துன்பம் தாளா ஓரினமே
அன்பு வடிவாம் பெண்ணினத்தை
மதித்துக் காப்பது நம்கடமை
அன்பில் லாமல் நடத்திடுவோர்
துன்ப முற்று வருந்திடுவார்
அன்னைப் போன்ற பெண்குலத்தை
போற்றா தவரை அவமதித்தால்
கௌரவர் கூட்டம் போலாகி
கூண்டோ டழிந்து போய்விடுவர்
உன்போல் பெண்ணைக் காத்திடவே
மகிழ்ந்து ஊஞ்சல் ஆடுகவே
பெண்கள் வெற்றி பெற்றிடவே
சிறப்பாய் ஊஞ்சல் ஆடுகவே 99
உன்னைப் பெற்றெடுத்த அன்னை, உன்னோடு நட்பு பாராட்டும் தோழி, உனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் மனைவி, உனக்கு குழந்தையாக பிறக்கும் மகள் என அனைவருமே துன்பம் தாங்க இயலாத பெண்கள்தான். அன்பே வடிவான பெண் இனத்தை மதித்துக் காப்பது நமது கடமையாகும். அவர்களிடம் அன்பு காட்டாமல் துன்பத்தைத் தருபவர்கள், வாழ்க்கையில் துன்பங்களையே அனுபவிப்பர். அன்னைப் போன்ற பெண் குலத்தைப் போற்றி பாதுகாக்காமல் அவமதித்தால், பெண் எனக்கூட பாராமல் சபை நடுவே திரௌபதியான பெண்ணை அவமதித்த கௌரவர்களின் கூட்டத்தைப் போல கூண்டோடு அழித்து போய்விடுவர். உன்போன்ற பெண்களைக் காத்திட மகிழ்ந்து பொன்னூஞ்சல் ஆடுக. பெண்கள் வெற்றி பெற்றிடவே சிறப்பாய் பொன்னூஞ்சல் ஆடுக.
பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )
வியாச முனிவர் ஆசியுடன்
பாண்டு மக்கள் ஐவருடன்
யாக சேனி மகிழ்வாக
இனிதாய் வாழ்க்கை நடத்தினரே.
நயமாய் வணங்கி வருவோர்க்கு
நாளும் வாழ்வை இனிதாக்கி
நல்ல உடலும் மனநலமும்
வழங்கும் நமது திரௌபதியை
வியந்து போற்றி வந்திடுவோம்
விருப்பத் துடனே வழிபடுவோம்
நமக்குப் பின்னர் வருகின்ற
சந்த தியையும் வணங்கசெய்வோம்
தயவு கொண்டு எம்குலத்தை
காக்க ஊஞ்சல் ஆடுகவே
தவறு செய்தோர் மன்னித்து
அருள ஊஞ்சல் ஆடுகவே 100
வியாச முனிவரில் நல் வாழ்த்துகளுடன் பாண்டு மக்களாகிய பாண்டவர்களும் யாகசேனியும் மகிழ்ந்தும் இனிமையாகவும் வாழ்க்கை நடத்தினர். பணிவாக வணங்கி வருகின்ற அன்பர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் இனிதாகவும் நல்ல உடல் நலமும் மனநலமும் அமைய வழிவகைச் செய்யும் திரௌபதியை, வியந்து வாழ்த்தி வந்திடுவோம். விருப்பத்துடன் வழிபடுவோம். நமக்குப் பின்னர் வருகின்ற நமது பிள்ளைகளையும் வணங்கிடச் செய்வோம். அம்மையே எங்கள் குலத்தைக் காக்க பொன்னூஞ்சல் ஆடுக. தவறு செய்தவரை மன்னித்து அருள் வழங்குவதற்கு பொன்னூஞ்சல் ஆடுக.