Thursday, July 31, 2025

பட்டிமன்றம் - திரையிசைப் பாடல்களின் அழகு பொருளிலா? இசையிலா?

நடுவர் அவர்களே

திரையிசைப் பாடல்கள் என்பது திரைக்கதையைத் தழுவியேதான் ஐயா இருக்கும்.

ஒரு பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்தப் படத்தின் கதையை, கதை மாந்தரின் தன்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

நடுவர் அவர்களே

எதிர் அணியினர் திரையிசைப் பாடல்கள் பிறந்த வரலாறு தெரியாமலேயே பேசறாங்க ஐயா.

தியாகராஜ பாகவதர், கிட்டப்பா இவர்கள் எல்லாம் நடிக்கிற காலத்துல படப்பிடிப்புத் தளத்திலேயே நேரடியாகவே நடித்துக்கொண்டே கதா நாயகனும் நாயகியும்  பாடுவாங்க படப்பிடிப்பு நடக்கும்.

அப்போதெல்லாம் இசை இல்லை ஐயா. நல்ல குரல் வளம் இருந்தாலே போதும். நல்ல குரல் வளம் உள்ளவர்களைத்தான் கதா நாயகர்களாத் தேர்ந்தெடுப்பாங்க.

அன்றைக்கெல்லாம் இசைக்கு முக்கிததுவம் இல்லை ஐயா. பாடல் வரிகளுக்குத்தான், பாடல் பொருள்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க.

அப்போதெல்லாம் பாடல்களை யாரும் கேட்டதில்லையா? படங்கள் ஓடியதில்லையா?

நடுவர் அவர்களே

விவரம் தெரியாத அப்பாவிகளெல்லாம் வச்சிகிட்டு என்ன பன்றதோ தெரியல.

நடுவர் அவர்களே

திரையிசைப் பாடல்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1970 வரை உள்ள காலத்துப் பாடல்கள் (90 பொருளுடையதாகவும் 10 இசையும் இருக்கும்)

1990 வரை உள்ள காலத்துப் பாடல்கள் ( 50 பாடல் பொருளும் 50 இசையும் இருக்கும்)

இன்றைய காலம் வரை உள்ள பாடல்கள்( 10 தான் பொருள் இருக்கு 90 இசை இசைதான் இருக்கும்)

இந்த இசை மட்டும் மிகுதியாக உடைய பாடல்களை யாரேனும் விரும்பி கேட்கிறார்களா ஐயா.

நடுவர் அவர்களே

இசையே இல்லாமல் பொருளுடைய பாடல்களை எதிரணியினர் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஐயா இந்த பாடலைக் கேளுங்க..

சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி

சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டு
தகந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்
காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே

இந்தப் பாடலில் ஒரு விவசாயியின் செயல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. 

நடுவர் அவர்களே 

அடுத்து ஒரு பாட்டு.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஐயா இதே போல இன்னொரு பாட்டு.

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது/ அதை
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...


வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!-
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா

நடுவர் அவர்களே

இசையே இல்லாத இப்பாடல் அழகில்லையா பொருள் புரியவில்லையா.

இன்னிக்கு கல்யாணம், காதுகுத்து, மற்ற மற்ற சடங்குன்னா இசை குறைவாகவும் பொருள் நிறைந்த பாடல்களையும்தான் ஐயா ஒலிபரப்பு செய்யுராங்க.

ஆகவே திரையிசைப் பாடல்களின் அழகு பொருளிலேதான் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்