Monday, November 10, 2025

மெல்ல மெல்ல கதைபேசி

மெல்ல மெல்ல கதைபேசி
என்னுள் வந்த சிலைநீயே
சின்ன சின்ன பார்வையினால்
ஆணி வேராய் பதிந்தவளே

உறவை விட்டு வெகுதூரம்
உறவைத் தேடி வந்தேனே
பிரியும் நிலமை வந்துவிட்டால்
என்னை நானே இழப்பேனே -  (மெல்ல மெல்ல)


கண்ணின் மணிகள் நீ தானே
காப்பேன் உன்னை நான் தானே
மண்ணில் வந்த தேவதையாய்
உயிரை காத்து நிற்பேனே

வான வில்லாய் பலகனவு
என்றும் என்னுள் இருந்ததில்லை
உன்னோ டிருக்கும் வரம்தானே
இறைவன் தேடி கேட்டேனே-  (மெல்ல மெல்ல)

தென்றல் வந்து தீண்டும் இன்பம்
உன்னோடு இருக்க நானும் கண்டேன்
சின்ன சின்ன தூறல் ஆகி
உன்னை குளிர வைத்திடுவேன்

மண்ணில் வேராய் சேர்ந்திருக்க
நாளும் ஜீவன் வாழுமிங்கே
விண்மீன் போல நாம் இணைந்து
காலம் கடந்து வாழ்வோமே-  (மெல்ல மெல்ல)