Monday, November 10, 2025

அன்னை தந்தை என்பவர்கள்

அன்னை தந்தை என்பவர்கள்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்
அன்னை யாரென் றறியாத
உயிர்கள் கூட இருப்பதுண்டு
அன்னை இன்றி உயிரினங்கள்
தானாய் பிறக்க வழியில்லை


அன்னை தந்தை என்பவர்கள்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்

கன்னி தாயாய் ஆகுமுன்னே
மாற்றம் பலவும் கண்டிடுவாள்
தனது ஆசை பலவற்றை
குழந்தைக் காக தவிர்திடுவாள்
உண்ணும் உணவு எதுவென்று
குழந்தைக் காக உண்டிடுவாள்
பண்ணும் இசையும் தான்மறந்து
குழந்தைப் பிதற்றல் கேட்டிடுவாள்
 
அன்னை தந்தை என்பவர்கள்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்

தந்தை உழைப்பிற் கீடாக
எதையும் சொல்ல முடியாது
தந்தை என்போர் பிள்ளைக்காய்
மலையைக் கூட தாங்கிடுவார்
சிந்தை முழுதும் பிள்ளைகளின்
வளர்ச்சி நோக்கி பயணிப்பார்
தந்தை தோற்றம் முள்பழமே
பழமாய் உள்ளம் இருந்திடுமே

அன்னை தந்தை என்பவர்கள்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்