Saturday, December 13, 2025

பாடல் - 22 : துருபதன் மகளே! துருபதன் மகளே!

துருபதன் மகளே! துருபதன் மகளே! 
துன்பம் போக்கும் துருபதன் மகளே! 
உலகை யாளும் அருள்மழைத் தாயே! 
உள்ளம் கவரும் இனியவள் நீயே! 

துருபதன் மகளே! துருபதன் மகளே! 
துன்பம் போக்கும் துருபதன் மகளே! 

யாக தீயில் பிறந்தவள் நீயே!
யாக சேனி யானவள் நீயே!
தேகம் எங்கும் தாமரை மலர்போல்
வாசம் வீச வந்தவள் நீயே!
வீசும் புயலின் காற்றும் கூட 
உன்னைக் கண்டால் தென்றல் ஆகும் 
நேசம் கொண்டு காப்பதில் அந்த
அன்னை அன்பும் தோற்றுப் போகும்

துருபதன் மகளே! துருபதன் மகளே! 
துன்பம் போக்கும் துருபதன் மகளே! 

கருணை உள்ளம் கொண்டவள் நீயே
கண்ணன் தங்கை ஆனவள் நீயே
சின்னப் பிள்ளை சிரிப்பு போல 
சிரித்து மகிழ்ந்து வாழ்ந்தவள் நீயே
காட்டில் ஓடும் ஆறு கூட 
உன்னைக் கண்டால் அடங்கிப் போகும் 
தோற்றுப் போகும் செயல்கள் கூட 
உனது அருளால் வெற்றி யாகும்

துருபதன் மகளே! துருபதன் மகளே! 
துன்பம் போக்கும் துருபதன் மகளே!