Friday, June 6, 2025

புதுக்கவிதைகள்

June 06, 2025
புதுக்கவிதைகள்
நீ இல்லாத இடத்தில் 
நீ இல்லை என்ற குறைதெரிந்தால்
அதுவே,
உன் வெற்றி 

Thursday, April 24, 2025

கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது காதல் பாடல்களா? தத்துவப் பாடல்களா? - 25.04.2025

April 24, 2025
கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது காதல் பாடல்களா? தத்துவப் பாடல்களா? - 25.04.2025
கண்ணதாசன் ஒரு கவிதைச் சுரங்கம். மண்ணைத் தோண்டத் தோண்ட கிடைக்கும் பொன், வெள்ளி, வைரம், வைடூரியம் முதலான மணிகள் போன்று அவரின் பாடல்களில் அன்பு, பாசம், காதல், குடும்பம், இயற்கை என அரியச் செய்திகளை எல்லாம் குவித்து வைத்திருப்பார். இப்பாடல்கள், மனதுக்குத் இதமாகவும் புண்பட்ட நெஞ்சுக்கு மருந்தாகவும் அமைகின்றன.

தத்துவம் என்பது

வாழ்வியல் உண்மைகளே தத்துவமாகின்றன. அவ்வாழ்வியல் உண்மைகளை அவர் இயற்றிய அனைத்துவகைப் பாடல்களிலும் காணமுடியும். 

காதல் அனுபவம் என்பது குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டும்தான். அதற்கப்புறம் எல்லாமே வாழ்வியல் அனுபவங்கள்தான்

பிறந்ததில் இருந்து எல்லா மனிதனும்  ஏதேனும் ஒரு வாழ்வியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கிறான். அத்தகையத் தாக்கம் அவனது ஆழ் மனதில் எங்கே ஒரு மூளையில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

கண்ணதாசனின் தத்துவப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த தாக்கங்கள் வெளிப்பட்டு ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் கேட்டு மகிழ்கிறான்.

அண்ணன் தங்கை உறவையும் கூறல்

சிறகில் எனை மூடி 
அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத 
காலம் இடை வந்து 
பிரித்த கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா....
கண்ணில் மணி போல 
மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த 
மண்ணும் கடல் வானும் 
மறைந்து முடிந்தாலும் 
மறக்க முடியாதடா - உறவைப்
பிரிக்க முடியாதடா

மலர்ந்தும் மலராத 
பாதி மலர் போல 
வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத 
காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே

கணவன் மனைவி உறவு கூறல்

ஆலம் விழுதுகள் போல் - உறவு 
ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உறவுளைக் கூறல்

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

குடும்பம் பற்றி கூறல்

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் – நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் – புதுப்
பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில் (மணமகளே)

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது – இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது (மணமகளே)

மணமகளே மருமகளே வா வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா (மணமகளே)


வாழ்வியல் ஏற்றத் தாழ்விகளைக் கூறல்

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

பாதுகாப்பும் மதிப்பும் கூறல்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது 
உலகம் உன்னை மதிக்கும் - உன் 
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் 
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று 
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது..

கையறு நிலை பற்றி கூறல்

குளத்தில தண்ணி இல்லே, 
கொக்குமில்ல மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே, 
பெத்த புள்ளே சொந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

வாழ்வின் இறுதி நிலை கூறல்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

காதலில் தத்துவம்


பட்டணத்துக்-காதலப்பா-பாதியிலே-மறையுமப்பா
பட்டிக்காட்டு-காதலுக்கு-கெட்டியான-உருவமப்பா

பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
ஊரப்பா-பெரியதப்பா-உள்ளம்-தான்-சிறியதப்பா


பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

Saturday, April 12, 2025

இரட்டணை நாராயணகவியின் படைப்புகள் Pdf File

April 12, 2025
இரட்டணை நாராயணகவியின் படைப்புகள் Pdf File
இரட்டணை நாராயணகவியின் சிற்றிலக்கியங்கள் 

01. திரௌபதி அம்மன் பிள்ளைத்தமிழ் Pdf Book : CLICK DOWNLOAD

02. திருவேங்கடவன் காப்பு மாலை Pdf Book :  CLICK DOWNLOAD

03. அழகியவரதராசன் திருக்குறுந்தாண்டகம் Pdf Book : CLICK DOWNLOAD

04. மணிவண்ணன் திருஅங்கமாலை Pdf Book :  CLICK DOWNLOAD

05. ஐம்படை விருத்தம் Pdf Book :  CLICK DOWNLOAD

06. திருமால் ஒருபா ஒருபஃது Pdf Book :  CLICK DOWNLOAD

07. திருமால் இருபா இருபஃது Pdf Book :  CLICK DOWNLOAD

08. திரௌபதியம்மன் நவமணிமாலை Pdf Book :  CLICK DOWNLOAD

09. வாழ்நெறிப் பதிற்றந்தாதி Pdf Book : CLICK DOWNLOAD

10. ஊர் வெண்பாPdf Book :  CLICK DOWNLOAD

11. திரௌபதியம்மன் திருஅட்டமங்கலம் Pdf Book :  CLICK DOWNLOAD

12. இரட்டணைக் கலம்பகம் Pdf Book :  CLICK DOWNLOAD

13. திரு அவதார நாமமாலை Pdf Book : CLICK DOWNLAOD

14. திருமால் போற்றி மாலை Pdf Book : CLICK DOWNLAOD

15. யாகசேனி புகழ்ச்சி மாலை Pdf Book : CLICK DOWNLAOD

16. திரௌபதி உற்பவ மாலை Pdf Book : CLICK DOWNLAOD

17. யாகசேனி பெருமகிழ்ச்சி மாலை Pdf Book : CLICK DOWNLAOD

18. மயிலம் முருகன் இரட்டை மணிமாலை Pdf Book : CLICK DOWNLAOD

19. திருவேங்கடவன் மும்மணிமாலை Pdf Book : CLICK DOWNLAOD

20. வெண்ணியம்மன் நான்மணிமாலை Pdf Book : CLICK DOWNLAOD

21. நல்வழி வருக்கமாலை Pdf Book : CLICK DOWNLAOD

22. வசந்தமாலை Pdf Book : CLICK DOWNLAOD

23. பெருமாள் போற்றி திருநெடுந்தாண்டகம் Pdf Book : CLICK DOWNLOAD

24. வெண்ணியம்மன் திருஊசல் Pdf Book : CLICK DOWNLAOD

25. திரௌபதியம்மன் திருநயனப்பத்து Pdf Book : CLICK DOWNLAOD

26. திருவரங்கத் திருப்பதிகம் Pdf Book : CLICK DOWNLAOD

27. நாமக்கல் ஆஞ்சநேயர் அலங்கார பஞ்சகம் Pdf Book : CLICK DOWNLAOD

28. செந்தூர் முருகன் செந்தமிழ் மாலை Pdf Book : CLICK DOWNLAOD

29. இராம யாண்டுநிலை Pdf Book : CLICK DOWNLAOD

30. முத்தமிழ் பல்சந்தமாலை Pdf Book : CLICK DOWNLAOD

31. இல்லற வள்ளை Pdf Book : CLICK DOWNLAOD

32. மங்கள வள்ளை Pdf Book : CLICK DOWNLAOD

33. குமரக் குழமகன் Pdf Book : CLICK DOWNLAOD

34. மணிகண்டன் மும்மணி கோவை  Pdf Book : CLICK DOWNLOAD

Sunday, March 30, 2025

தமிழ்க்கடல் பதிப்பக வெளியீடுகள்

March 30, 2025
தமிழ்க்கடல் பதிப்பக வெளியீடுகள்
1. திரௌபதி அம்மன் பிள்ளைத்தமிழ் Pdf Book : CLICK DOWNLOAD

2. சிற்றிலக்கிய மாலை 
Pdf Book : CLICK DOWNLOAD

3. இரட்டணைக் கலம்பகம் 
Pdf Book : CLICK DOWNLOAD

4. மாலை இலக்கியங்கள் 
Pdf Book : CLICK DOWNLOAD

5. பெருமாள் போற்றி திருநெடுந்தாண்டகம் 
Pdf Book : CLICK DOWNLOAD

6. சௌடாம்பிகை போற்றித் திருப்பதிகம் 
Pdf Book : CLICK DOWNLOAD

7. இலக்கியத் தொகை 
Pdf Book : CLICK DOWNLOAD

8. மணிகண்டன் மும்மணி கோவை 
Pdf Book : CLICK DOWNLOAD

9. அழகிய நந்தவனம் 
Pdf Book : CLICK DOWNLOAD

10. பாடல் பெற்ற தலங்களும் திவ்ய தேசங்களும் Pdf Book : CLICK DOWNLOAD

11. நன்னூல் ஆக்கத்திற்கு இளம் பூரணத்தின் பங்களிப்பு Pdf Book : CLICK DOWNLOAD

Sunday, March 23, 2025

வாழ்த்துக் கவிதை

March 23, 2025
வாழ்த்துக் கவிதை
அன்னை என்றால் தாய்மைகுணம்
அன்பு நிறைந்த மணிமகுடம்
உன்னை அண்டி வந்தோர்க்கு
அறிவும் பொருளும் தந்தவளே

வானம் கூட பொய்த்திடலாம்
உனது அன்பு பொய்க்காது
தேனும் பாலும் கலந்தசுவை
பேச்சில் கொண்ட கலையரசி

பண்பாய் பேசும் குலவிளக்கே
பாசம் மிகுந்த பனிமலரே
கணித பாடம் கற்றாலும்
தமிழ்மேல் பற்றுக் கொண்டாயே

பயிராய் உந்தன் முகம்காண
உரமாய் ஆறுதல் சொல்வாயே
உயிராய் இருந்து உறவுகளை
செழிக்க வைக்கும் பொற்குடமே

பொருள்மேல் ஆசை கொள்ளாத
புனித வடிவம் நீயம்மா
சிறப்பாய் உடலும் உள்ளமொடு
அமைந்து வாழ வேண்டுமம்மா

குடும்பம் உறவும் பற்றுகொள்ள
கவலை இல்லா வாழ்வமைய
கொடுக்கும் கடவுள் அருள்வேண்டி
பணிந்து உன்னை வாழ்த்துகிறேன்.

Thursday, March 20, 2025

திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ் - ஊசல் பருவம்

March 20, 2025
ஊசல் பருவம்
பன்னிருசீர் விருத்தம் ( காய் காய் காய் )

தண்ணீரோ வென்னீரோ தன்னுடற்கு 
ஏற்றதொரு நன்னீரில் நீராடி
வானவில்லின் சாயமிட்ட உடல்மறைக்கும் 
ஆடைகளைக் கச்சிதமாய் தைத்துடுத்தி
தண்மைதரு சந்தனமும் வாசமிகு
திரவியமும் கொண்டுபூசி திலகமிட்டு
அணிமணிகள் பலவற்றை அங்கமெல்லாம்
ஆடையோடும் உறுப்போடும் பொருந்தபூட்டி
பெண்கூட்டம் தனக்குமுன்பாய் சென்றிடாமல்
தான்முந்தி விரைந்துவந்து முன்நின்று
பாஞ்சால நட்டுமன்னன் துருபதனின்
மகளாடும் அழகுகாண வந்துநின்றார்
விண்முட்டும் புகழ்படைத்த திருமாலின்
அன்புதங்கை பொன்னூசல் ஆடியருளே
பாண்டவர்கள் உளம்கவர்ந்த பெருந்துணையாம்
பாஞ்சாலி பொன்னூசல் ஆடியருளே. 91

குளிர்ந்த நீரோ, சூடான நீரோ தன்னுடைய உடலுக்கு ஏற்றதொரு நல்ல நீரில் நீராடி, வானவில்லின் சாயத்தை ஆடையில் இட்டு, தன்னுடைய உடலை மறைக்கத் தகுந்த வகையில் அளவாக தைத்து உடுத்தி, குளிர்ச்சி தரும் சந்தனத்தையும் வாசனை திரவியங்களையும் உடலிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, அழகுதரும் மணிவகைகளையும் பொன்னாபரணங்களையும் ஆடைமீதும் உறுப்புகளிலும் பொருத்தமாகப் பூட்டிக்கொண்டு, பெண்கள் கூட்டம் யாரும் தனக்கு முன்பாக செல்லா வகையில் முந்திக்கொண்டு வேகமாக வந்து முன்பாக நின்று, பாஞ்சால நாட்டு மன்னனின் மகளான நீ ஆடும் அழகினைக் காண்பதற்காக வந்து நின்றனர். வான் அளவு புகழ்கொண்ட திருமாலின் அன்புத் தங்கையே! பொன்னூஞ்சல் ஆடுக. பாண்டவர்களின் உள்ளம் கவர்ந்த பெருமை மிகுந்த பாஞ்சாலியே! பொன்னூஞ்சல் ஆடுக.

எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் மா )

செங்கமலம் வெங்கமலம் இருமலரில் உறையும்
அலைமகளும் கலைமகளும் ஒருவீட்டில் இருந்தால்
பொங்கிவரும் பெரும்பகையும் பனிபோல விலகும்
விரும்புகிற செயல்செய்து பெரும்புகழை அடைவர்
எங்ககுலம் காத்துநிற்கும் திரௌபதியை வணங்க
கல்வியொடு பெருஞ்செல்வம் வீடுதேடி வரும்என்
சிங்கமகள் திரௌபதிபொன் னூசலாடி யருளே
தங்கமகள் கிருட்டிணைபொன் னூசலாடி யருளே 92

செந்தாமரை வெள்ளைத் தாமரை ஆகிய இரண்டு மலர்களில் அமர்ந்திருக்கும் திருமகளும் கலைமகளும் ஒரு வீட்டில் இருந்தால் பெருகி வரும் பெரிய பகையும்  பனிபோல விலகிவிடும். தான் விரும்பிய செயல்களைச் செய்து புகழினை அடைவர். எங்கள் குலம் காக்கும் திரௌபதியை வணங்க, கல்வியோடு பெருஞ்செல்வமும் வீடுதேடி வந்து சேரும். சிங்க மகளான திரௌபதியே! பொன்னூஞ்சல் ஆடுக. தங்க மகளான கிருட்டிணையே! பொன்னூஞ்சல் ஆடுக.

இருபுறமும் ஆறுகள்சூழ் சிறப்பான நகரில்
குளிர்சூழ்ந்த நிலப்பரப்பில் பயிரினங்கள் சிரிக்கும்
கரும்போடு நெல்வகைகள் முப்போகம் நடத்தி
ஓய்வின்றி உழைத்தமக்கள் வறுமையின்றி வாழும்
இரட்டணையில் உறைகின்ற பாஞ்சாலி அம்மா!
சிறப்பாக நாடாண்ட துருபதனின் மகளே!
நெருப்புதித்த தேவியேபொன் னூசலாடி யருளே!
உலகலந்தான் தங்கைபொன் னூசலாடி யருளே! 93

இரண்டு பக்கமும் ஆறுகள் சூழ்ந்திருக்கும் சிறப்பான நகரத்தில், குளிர்ச்சி நிறைந்த நிலப்பரப்பில் பயிரினங்கள் செழுமையாக இருக்கும். கரும்புடன் நெல் மூன்று போகமும் விளையும். அத்தகு நிலத்தில் ஓய்வில்லாமல் உழைத்த மக்கள் வறுமை இன்றி வாழுவர். இத்தகு ஊரான இரட்டணையில் கோவில் கொண்டுள்ள பாஞ்சாலி அம்மையே. சிறப்பான முறையில் நாடாண்ட துருபதனின் மகளே. நெருப்பில் தோன்றிய தேவியே பொன்னூஞ்சல் ஆடுக. உலகை அளந்தவன் தங்கையே பொன்னூஞ்சல் ஆடுக.

ஆண்துணையே இல்லாமல் குடும்பத்தைக் காத்து
பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் அன்னையர்கள் உண்டு
ஆணாக இருந்தபோதும் அன்னையாக மாறி
குழந்தைகளைக் கரைசேர்க்கும் தந்தையரும் உண்டு
பாண்டுமக்கள் ஐவரையும் வழிநடத்தி பின்னர்
வெற்றிவாகை சூடிஇன்று பெருமிதமாய் நிற்கும்
பாண்டவர்கள் தேவியேபொன் னூசலாடி யருளே
திட்டதுய்மன் தங்கையேபொன் னூசலாடி யருளே 94

இந்த மண்ணுலகில் ஆண்கள் துணையே இல்லாமல் குடும்பத்தைக் காத்து பிள்ளைகளை நல்முறையில் வளர்த்தெடுக்கும் அன்னையர்களும் உள்ளனர். ஆணாகப் பிறந்திருந்தாலும் அன்னையாக இருந்து தாயுமானவனாய் குழந்தைகளைக் கரைசேர்க்கின்ற தந்தையர்களும் உள்ளனர். தனி ஒரு பெண்ணாக இருந்து பாண்டு மக்கள் ஐந்துபேரையும் வழிநடத்திச் சென்று வெற்றி வாகை சூடி இன்று பெருமிதத்துடன் வீற்றிருக்கும் பாண்டவர்களின் தேவியே! பொன்னூஞ்சல் ஆடுக. திட்டத்துய்மனின் தங்கையே! பொன்னூஞ்சல் ஆடுக.

எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் தேமா )

அன்னையர்கள் பிள்ளைகட்கு அமிழ்தூட்டும் போது
தன்மொழியை உடன்சேர்த்து பரிவோடு ஊட்டி
முன்னின்று கல்விதனை கற்றிடவும் செய்வர்
அன்னைதந்த மொழியிலேயே கல்வியினைக் கற்றோர்
தன்னுடைய திறமைகளை உலகறியச் செய்து
மண்ணுலகில் அழியாத புகழோடு வாழ்வர்
உன்புகழைப் பாடுகிறேன் பொன்னூஞ்சல் ஆடு
உனைதினமும் வழிபடுவேன் பொன்னூஞ்சல் ஆடு 95

தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைக்கு அமிழ்தமாகிய உணவை ஊட்டும்போது தன் மொழியையும் சேர்த்து அக்கரையோடு ஊட்டி, தானே ஆசானாக இருந்து கல்வியினையும் கற்றிடச் செய்வர். தாய்மொழியிலே கல்வியினைக் கற்றவர்கள் தன்னுடைய திறமைகளை உலகத்தார் அறியும் படியாகச் செய்து இந்த மண்ணுலகில் அழியாத புகழோடு வாழ்ந்திடுவர். அடியவனாகிய நான் உன்புகழைப் பாடுகின்றேன் பொன்னூஞ்சல் ஆடுக. உன்னை ஒவ்வொரு நாளும் வழிபடுகின்றேன் பொன்னூஞ்சல் ஆடுக.

அனுதினமும் உன்பெயரை உச்சரித்து நிற்கும்
அன்புநிறை பக்தருக்கு அருள்செய்ய வேண்டும்
இனத்தோடு சேர்ந்துவந்து பூசனைகள் செய்வார்
குலம்காத்து குறைகளைந்து அருள்வழங்க வேண்டும்
மனச்சுமையாய் வருவோரின் துன்பங்கள் எல்லாம்
பனிபோல விலகசெய்து உளம்குளிர வைக்கும்
என்னன்னை மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடு
குந்திமாத்ரி மருமகளே பொன்னூஞ்சல் ஆடு 96

ஒவ்வொரு நாளும் உன்னுடைய பெயரை உச்சரிக்கும் அன்பு நிறைந்த பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும். தங்கள் கூட்டத்தோடு சேர்ந்து வந்து வழிபாடுகளைச் செய்வோரின் குலத்தினைக் காத்து அவர்களின் குறைகளை எல்லாம் நீக்கி அருள் வழங்க வேண்டும். பெரும் மனச் சுமைகளோடு உன்னை நாடி வருவோரின் துன்பங்களை எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகச் செய்து அவர்களின் உள்ளம் மகிழ வைக்கும் என் அன்னையே மகிழ்ந்து பொன்னூஞ்சல் ஆடுக. குந்தி மாத்ரி மருமகளே பொன்னூஞ்சல் ஆடுக.

அறுசீர் விருத்தம் ( காய் காய் காய் )

துருபதனின் மகளான திரௌபதியே
யாகத்தில் தோன்றியதால் யாகசேனி
கரியநிறம் கொண்டதனால் கிருட்டிணையே
பாஞ்சால இளவரசி பாஞ்சாலி
பெருமைசேர்க்கும் பலபெயர்கள் கொண்டவளே
சிரம்பணிந்து வணங்கிடுவோர் காத்திடவே
விரைவாக பொன்னூஞ்சல் ஆடுகவே
மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடுகவே 97

துருபதனின் மகளாகப் பிறந்ததால் திரௌபதி ஆனாய்.  யாசர் உவயாசர் நடத்திய யாகத்தில் தோன்றியதால் யாகசேனி ஆனாய். கரிய நிறம் கொண்டதனால் கிருட்டிணை ஆனாய். பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி ஆனாய். இவ்வாறு பெருமை சேர்க்கும் பல பெயர்கள்  உனக்கு இருக்கின்றன. இப்பெயர்களால் அழைத்துத் தலைவணங்கும் அடியவர்களைக் காத்திட விரைவாக பொன்னூஞ்சல் ஆடுக. மகிழ்வோடு பொன்னூஞ்சல் ஆடுக.

எண்சீர் விருத்தம் ( காய் காய் மா தேமா )

அபயமென்று சொன்னவுடன் விரைந்து வந்து
கண்ணனவன் உன்னுடைய மானம் காத்து
எப்போதும் உனக்காகத் துணையாய் நின்றான்
அதுபோல உனைவணங்கி வருவோ ருக்கு
தப்பாமல் உன்னருளை தினமும் தந்து
வரும்துன்பம் விலகிடவே செய்ய வேண்டும்
சுபத்திரையின் தோழியேபொன் னூஞ்ச லாடு
வாமனனின் தங்கையேபொன் னூஞ்ச லாடு 98

அபயம் என்று சொன்ன உடனேயே விரைவாக வந்து உன்னுடைய மானத்தைக் காத்து எப்போதும் உனக்குத் துணையாக இருந்தான் கண்ணன். அதுபோல ஒவ்வொரு நாளும் உன்னை வணங்கி வருவோரின் துன்பங்களை எல்லாம் விலக்கி, உன் அருளை அவர்களுக்கு வழங்கி காத்திட வேண்டுமம்மா. சுபத்திரையின் தோழியாக இருப்பவளே! பொன்னூஞ்சல் ஆடுக. வாமனனின் தங்கையே! பொன்னூஞ்சல் ஆடுக.

பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )

அன்னை தங்கை தோழியுடன்
இல்லத் துணையும் பெண்ணினமே
தனது மகளாய் வருபவளும்
துன்பம் தாளா ஓரினமே
அன்பு வடிவாம் பெண்ணினத்தை
மதித்துக் காப்பது நம்கடமை
அன்பில் லாமல் நடத்திடுவோர்
துன்ப முற்று வருந்திடுவார் 
அன்னைப் போன்ற பெண்குலத்தை
போற்றா தவரை அவமதித்தால்
கௌரவர் கூட்டம் போலாகி
கூண்டோ டழிந்து போய்விடுவர்
உன்போல் பெண்ணைக் காத்திடவே
மகிழ்ந்து ஊஞ்சல் ஆடுகவே
பெண்கள் வெற்றி பெற்றிடவே
சிறப்பாய் ஊஞ்சல் ஆடுகவே 99

உன்னைப் பெற்றெடுத்த அன்னை, உன்னோடு நட்பு பாராட்டும் தோழி, உனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் மனைவி, உனக்கு குழந்தையாக பிறக்கும் மகள் என அனைவருமே துன்பம் தாங்க இயலாத பெண்கள்தான். அன்பே வடிவான பெண் இனத்தை மதித்துக் காப்பது நமது கடமையாகும். அவர்களிடம் அன்பு காட்டாமல் துன்பத்தைத் தருபவர்கள், வாழ்க்கையில் துன்பங்களையே அனுபவிப்பர். அன்னைப் போன்ற பெண் குலத்தைப் போற்றி பாதுகாக்காமல் அவமதித்தால், பெண் எனக்கூட பாராமல் சபை நடுவே திரௌபதியான பெண்ணை அவமதித்த கௌரவர்களின் கூட்டத்தைப் போல கூண்டோடு அழித்து போய்விடுவர். உன்போன்ற பெண்களைக் காத்திட மகிழ்ந்து பொன்னூஞ்சல் ஆடுக. பெண்கள் வெற்றி பெற்றிடவே சிறப்பாய் பொன்னூஞ்சல் ஆடுக.

பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )

வியாச முனிவர் ஆசியுடன்
பாண்டு மக்கள் ஐவருடன்
யாக சேனி மகிழ்வாக
இனிதாய் வாழ்க்கை நடத்தினரே.
நயமாய் வணங்கி வருவோர்க்கு
நாளும் வாழ்வை இனிதாக்கி
  நல்ல உடலும் மனநலமும்
வழங்கும் நமது திரௌபதியை
வியந்து போற்றி வந்திடுவோம்
விருப்பத் துடனே வழிபடுவோம்
நமக்குப் பின்னர் வருகின்ற
சந்த தியையும் வணங்கசெய்வோம்
தயவு கொண்டு எம்குலத்தை
காக்க ஊஞ்சல் ஆடுகவே
தவறு செய்தோர் மன்னித்து
அருள ஊஞ்சல் ஆடுகவே 100

வியாச முனிவரில் நல் வாழ்த்துகளுடன் பாண்டு மக்களாகிய பாண்டவர்களும் யாகசேனியும் மகிழ்ந்தும் இனிமையாகவும் வாழ்க்கை நடத்தினர். பணிவாக வணங்கி வருகின்ற அன்பர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் இனிதாகவும் நல்ல உடல் நலமும் மனநலமும் அமைய வழிவகைச் செய்யும் திரௌபதியை, வியந்து வாழ்த்தி வந்திடுவோம். விருப்பத்துடன் வழிபடுவோம். நமக்குப் பின்னர் வருகின்ற நமது பிள்ளைகளையும் வணங்கிடச் செய்வோம். அம்மையே எங்கள் குலத்தைக் காக்க பொன்னூஞ்சல் ஆடுக. தவறு செய்தவரை மன்னித்து அருள் வழங்குவதற்கு பொன்னூஞ்சல் ஆடுக.

திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ் - நீராடல் பருவம்

March 20, 2025
நீராடல் பருவம்

இருபத்துநான்குசீர் விருத்தம் ( மா மா காய் )

கடலைக் கடைந்த தருணத்திலே 
கண்டார் மயக்கும் அழகினிலே
அமிழ்தத் தோடு வெளிவந்த 
அழகில் சிறந்த அகலிகையை
அடையும் நோக்கில் ஆசையுடன் 
தேவர் பலரும் வந்தனரே
பிரம்ப  தேவர் இருபுறமும்
தலைகள் இருக்கும் பசுகண்டு
அடைந்தா ருக்கே இவளென்று 
போட்டி ஒன்றை நடத்திட்டார்
கன்றை ஈனும் பசுவிற்கு 
இரண்டு புறமும் தலையுண்டு
வென்று வந்த கௌதமரும் 
அழகி தன்னைக் கரம்பிடித்தார்
தோல்வி யுற்ற இந்திரனோ 
எவ்வா றேனும் அகலிகையை
அடைய வேண்டும் என்றெண்ணி 
ஒருநாள் இரவு தந்திரமாய் 
கௌதமர் வெளியே அனுப்பிவைத்து 
அகலி கையோடு இணைந்திட்டான்
உண்மை அறிந்த கௌதமரோ 
கல்லாய் போக சபித்திட்டார்
இராமர் பாத தூசுபட 
கல்லும் பெண்ணாய் மாறியதே
இடையன் ஆன கிருட்டிணனின் 
உடன்பி றவாத சகோதரியே!
பெண்ணாய் பிறந்து ஆணான 
சிகண்டி தங்கை ஆனவளே!
கௌரவர் வென்ற களிபோடு 
சிறப்பாய் புதுநீ ராடுகவே.
பாண்டு மக்கள் யாவருடன் 
மகிழ்ந்து புதுநீ ராடுகவே. 81

அமிழ்தம் எடுப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அந்த அமிழ்தத்துடன் திருமகள் முதலாகப் பல பொருட்கள் வெளிப்பட்டன. அவர்களுள் ஒருத்தி அகலிகை. காண்பவர் மயக்கம் கொள்ளும் அழகுடன் இருந்த அவளை இந்திரன் முதலான தேவர்கள் திருமணம் செய்துகொள்ள போட்டிப் போட்டுக்கொண்டு வந்தனர். இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நினைத்த பிரம்மதேவர், இரண்டு பக்கமும் முகம் கொண்ட பசுவினை முதலில் கண்டு வருபவருக்கே அகலிகையைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று ஒரு போட்டியை நடத்தினார். இரண்டு பக்கமும் முகங்கள் கொண்ட பசுவினைத் தேடி இந்திரன் முதலான தேவர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்றனர். கன்றைப் பெற்றெடுக்கும்போது தாய்ப் பசுவிற்கு இரண்டு பக்கமும் முகங்கள் இருக்கும். இதனை நாரதர் உதவியோடு கண்டுவந்து முதலில் சொன்ன கௌதமருக்குப் பிரம்மதேவர் அகலிகையைத் திருமணம் செய்து வைத்தார். பொறாமை கொண்ட இந்திரன் எப்படியாவது அகலிகையை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். ஒருநாள் தமது குடிலில் கௌதமரும் அகலிகையையும் உறங்கிக் கொண்டிருந்தபோது, சேவல் வடிவில் வந்த இந்திரன் கொக்கரிக்க, பொழுது விடிந்தது எனக் கருதிய கௌதமர் ஆற்றங்கரைக்கு நீராடச் சென்று விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்திரன் அகலிகையோடு கூடி இன்பம் அனுபவித்து விட்டான். அதனை அறிந்த கௌதமர், அகலிகையைக் கல்லாகப் போகும்படி சாபம் கொடுத்துவிட்டார். பல ஆண்டுகளாகக் கல்லாய்க் கிடந்த அகலிகை, இராமனின் கால் மாசுப் பட்டவுடன் பெண்ணாக மாறினாள். இடையனான கிருட்டிணனின் உடன்பிறவாத சகோதரியும். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியின் சகோதரியும் ஆனவளே! கௌரவர்களை வெற்றி கொண்ட மகிழ்ச்சியோடு சிறப்பாகப் புதுநீராடுக. பாண்டு மக்கள் ஐவரோடும் மகிழ்ந்து புதுநீராடுக.

பதினான்குசீர் விருத்தம் 

( மா விளம் மா விளம் மா விளம் விளம் )

நெருப்புப் பந்தென வானில் இருந்துதன் 
ஒளியை உமிழ்ந்திடும் சூரியன்
உலகில் உள்ளவர் இயக்கம் கொண்டிட
ஓய்வில் லாமலே இயங்குவான்
இரவுப் பொழுதிலே உலவி வந்திடும்
ஒற்றை விளக்கென சந்திரன்
இருளில் உள்ளவர் துன்பம் துடைத்திட
ஒளியை வாங்கியே உமிழ்கிறான்
இரண்டு விளக்குகள் சிறப்பாய் தன்னுடை
கடமை இயல்பென செய்யுது
அறிவு பெற்றநாம் தயக்க மின்றியே
பிறர்க்கு உழைத்திட வேண்டுமே.
கருத்த அழகியே சிரித்த முகத்துடன்
பொறுப்பாய் மகிழ்ந்துநீ ராடுக
கற்றோர் மிகுதியாய் இருக்கும் ஊரிலே
வாழும் அன்னைநீ ராடுக 82

நெருப்புப் பந்தாக வானத்தில் இருந்துகொண்டு தனது ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூரியன், உலகத்தினர் இயக்கம் கொன்வதற்காக ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறான். இரவு நேரத்தில் ஒற்றை விளக்காக உலவிக் கொண்டுவரும் சந்திரன், இருளில் இருப்பவர்களின் துன்பத்தைப் போக்க சூரியனின் ஒளியினை வாங்கி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். பகல் இரவு என இரண்டு நேரங்களிலும் சூரிய சந்திரர்கள் மாறிமாறி வந்து சிறப்பாகத் தங்களுடைய வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, அறிவு பெற்றவர்களாகிய நாமும் தயங்காமல் பிறருக்காக உழைத்திட வேண்டும். கருப்பான நிறமுடைய அழகியே. சிரித்த முகத்துடன் பொறுப்பாக மகிழ்ந்து நீராடு. கற்றோர் மிகுதியாக இருக்கும் ஊரான இரட்டணையில் கோவில் கொண்ட அன்னையே நீராடு. 

பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )

அன்னை தந்தை சொல்கேட்டு 
அடங்கி நடக்க நீவேண்டும்
ஆசான் சொல்லைத் தட்டாமல் 
அறிவைப் பெருக்கி உயர்ந்திடனும்
சின்னச் சின்ன தோல்விகளை
தாங்கிக் கொள்ளும் திறன்வேண்டும்
நல்ல நண்பர் சிலபேரை 
துணையாய்க் கொண்டு நடந்திடணும்
தன்னைச் சார்ந்த உறவோடு
சேர்ந்து வாழப் பழகிடணும்
உயிர்க ளிடத்து அன்புகொன்டு
உயிர்க்கொ லைதவிர்த் துவாழ்ந்திடணும்
முன்னோர் வழியில் நடந்தவளே
அன்பாய் புதுநீ ராடுகவே
தரும வழியில் நடந்தவளே
சிறப்பாய் புதுநீ ராடுகவே 83

நம்மைப் பெற்றவர்களாகிய அன்னை, தந்தை ஆகிய இருவரின் சொல்லை ஏற்று அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அறியாமையை நீக்கி அறிவு ஒளி ஏற்றும் ஆசிரியர்களின் சொல்லைத் தட்டாமல் கேட்டு அறிவைப் பெருக்கி வாழ்வில் உயர்ந்திட வேண்டும். சின்னச் சின்ன தோல்விகளையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். நல்ல நண்பர்கள் சிலரைத் தனக்குத் துணையாக ஏற்று நல்முறையில் நடந்துகொள்ளவேண்டும். தன்னைச் சார்ந்த உறவுகளோடு சேர்ந்து வாழப் பழகவேண்டும். உயிர்களிடம் அன்பு கொள்ளவேண்டும். எந்த உயிர்களையும் கொலை செய்யாமல் வாழவேண்டும்.   இவ்வாறு முன்னோர்கள் கூறிய நல்வழியில் நடப்பவளே! அன்பாக புதுநீராடு. தருமத்தின் வழியில் நடப்பவளே! சிறப்பாக புதுநீராடு.

எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் மா )

மரங்களிலே கூடுபின்னி சிட்டினங்கள் வாழும்
ஒருன்றுக்கு ஒன்றுஎன வரையறையில் கூடும்
வரமாகப் பெற்றெடுத்த குழந்தைகளுக் காக
ஒற்றுமையாய் உணவுதேடி பரிவோடு ஊட்டும்
பெரிதாக வளர்ந்தவுடன் ஓரிடத்தைக் காட்டி
தனியாக வளர்வதற்கு துணையாக இருக்கும்
கிருட்டிணனைத் துணைகொண்ட அன்னைநீரா டுகவே
பாண்டுவின்நல் மருமகளே புனிதநீரா டுகவே 84

மரக்கிளைகளில் கூடுகள் கட்டி சிட்டுக்குருவிகள் வாழும். அவை ஓர் ஆண் குருவிக்கு ஒரு பெண் குருவி என்று வகுத்துக் கொண்டு ஒன்றோடு ஒன்று கூடும். வரங்களின் மூலம் பெற்ற நமது குழந்தைகளுக்காக ஒற்றுமையுடன் உணவுகளைத் தேடி, பாசத்தோடும் பரிவோடும் ஊட்டி மகிழும். தம் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தவுடன் அவைகள் தங்குவதற் கான ஓரிடத்தைக் காட்டி தனியாக வளர்வதற்கு துணையாக இருக்கும். அத்தகைய ஊரில் வாழும் கிருட்டிணனைத் துணையாகக் கொண்ட அன்னையே நீராடு. பாண்டுவின் நல்ல மருமகளே புனித நீராடு.

பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )

தருமதேவர் அம்சத் தோடு 
குந்திதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்நல் மூத்த மைந்தன் 
தருமரெனும் பெயரைக் கொண்டோன்
தருமத்தைத் தலைமேற் கொண்டு 
நல்லாட்சி நடத்தும் வேந்தன்
பெரியோரின் சொல்லைத் தட்டா 
விரதத்தை கொண்டு வாழ்ந்தான்
திரௌபதியின் கணவ ராகி 
சிறப்போடு குடும்பம் நடத்தி
பிரதிவிந்தி யனென்ற மகனும் 
சுதனுஎன்ற மகளும் பெற்றோன்
கௌரவர்கள் வெற்றி கொண்டு 
அத்தினாபு ரத்தை ஆளும்
யுதிட்டிரர்தே வியேநீ ராடு 
சிகண்டியின் தங்கைநீ ராடு 85

எமதர்மரின் தன்மைகளைக் கொண்டு குந்திதேவி பெற்றெடுத்த, பாண்டுவின் முதல் மகன். தருமர் என்னும் பெயரைக் கொண்டவன். தருமத்தையே முதன்மையாகக் கொண்டு நல்லதொரு அரசாட்சியை நடத்திய அரசன். பெரியவர்களின் சொல்லைத் தட்டுவதில்லை என்ற கொள்கை உடையவன். திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டு, பிரிதிவிந்தியன் என்ற மகனையும் சுதனு என்ற மகளையும் பெற்றெடுத்தவன். கௌரவர்களைப் போரில் வென்று அத்தினாபுரத்தை ஆளும் யுதிட்டரோடு தேவியே நீராடு. சிகண்டியின் தங்கையே நீராடு.

காற்றரசன் அம்சத் தோடு 
குந்திதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்இ ரண்டாம் மைந்தன் 
வீமனெனும் பெயரைக் கொண்டோன்
ஆற்றலிலே பத்தா யிரம்நல் 
யானைபலம் கொண்ட வீரன்
கதாயுதத்தில் பயிற்சி பெற்றோன் 
யாருமஞ்சும் தோற்றம் கொண்டோன் 
ஆற்றல்சார் கிருட்டி ணையோடு 
அரக்கரின இடும்பி மணந்து
சுதசோமன் கடோற்க சஎனும் 
இரண்டுபெரும் வீரர் பெற்றோன் 
காற்றுபோல துரியோ தனனைச் 
தூக்கிதொடை அடித்து கொன்ற
பீமனின்தே வியேநீ ராடு 
பாஞ்சாலன் மகள்நீ ராடு 86

காற்றின் அரசனான வாயுவின் தன்மைகளைக் கொண்டு குந்திதேவி பெற்றெடுத்த பாண்டுவின் இரண்டாவது மகள். வீமன் என்னும் பெயரைக் கொண்டவன். பத்தாயிரம் யானை பலம் கொண்ட ஆற்றல்மிகுந்த வீரன். கதை ஆயுதப் பயிற்சியில் கைதேர்ந்தவன். காண்பவர் அச்சம் கொள்ளும் தோற்றம் கொண்டவன். ஆற்றல் மிகுந்த கிருட்டிணையோடு, அரக்கர் குலத்து இடும்பியையும் மணந்தவன். சுதசோமன், கடோற்கசன் என்னும் இரண்டு பெரும் வீரர்களைப் பெற்றெடுத்தவன். காற்றைப் போல சுழற்றி துரியோதனனைத் தனது தொடையில் வைத்து அடித்துக் கொன்றவன். இத்தகைய சிறப்புமிகுந்த பீமனின் தேவியே! நீராடு. பாஞ்சாலன் மகளே! நீராடு.

இந்திரனின் அம்சத் தோடு 
குந்திதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்நல் மூன்றாம் மைந்தன் 
பார்த்தீபன் பெயரைக் கொண்டோன்
பிந்துகின்ற நிலையில் லாத 
வில்லாற்றல் மிக்க வீரன்
கிருட்டிணனின் இனிய நண்பன் 
குருதுரோணர் முதன்மைச் சீடன்
இந்துநுதல் யாக சேனி 
சுபத்திரைநல் உலுப்பி யோடு
சித்திராங்க தையை மணந்தோன் 
சுருதகீர்த்தி அபிமன் யுவுடன் 
மைந்தரில் சிறந்தோன் அரவான் 
பாப்புருவா கனனின் தந்தை
அர்ச்சுனனின் தேவிநீ ராடு 
துருபதனின் மகள்நீ ராடு 87

இந்திரனின் அம்சத்தோடு குந்திதேவி பெற்றெடுத்த பாண்டுவின் மூன்றாம் மகன் பார்த்தீபன் என்னும் பெயரைக் கொண்டவன். பின் செல்லுகின்ற நிலை இல்லாதவன். வில்லாற்றலில் சிறந்த வீரன். கிருட்டிணனின் இனிய நண்பன். குருதுரோணரின் முதன்மையான சீடன். சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய யாகசேனி, சுபத்திரை, உலுப்பி, சித்திராங்கதை ஆகிய மூவரையும் திருமணம் செய்துகொண்டவன். சுருதகீர்த்தி, அபிமன்யு, அரவான், பாப்புருவாகனன் ஆகியோரின் தந்தைதையாக விளங்கும் அர்ச்சுனனோடு திரௌபதியே! நீராடு, துருபதனின் மகளே! நீராடு.

அசுவினிதே வரம்சத் தோடு 
மாத்ரிதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்நல் நான்காம் மைந்தன் 
நகுலனெனும் பெயரைக் கொண்டோன்
விசுவாசம் மிகுந்த நங்கை 
திரௌபதியை மணந்த பின்னர் 
சதாநீகன் தந்தை யாகி 
விராடமன்னன் பணியை ஏற்று
வசியமாகக் குதிரை பேசும் 
பேச்சதனை பேசி காத்தோன்
வாள்வீசும் போரில் சிறந்தோன் 
கர்ணனின் மக்கள் வென்றோன் 
வசுதேவர் மைந்த னான 
வாசுதேவன் அன்புத் தங்கை
கிராந்திகன் தேவிநீ ராடு 
துருபதனின் மகள்நீ ராடு 88

அசுவினி தேவர்களின் குணங்களைப் பெற்று, மாத்ரிதேவி பெற்றெடுத்த பாண்டுவின் நான்காம் மகன் நகுலன் என்னும் பெயருடையோன். விசுவாசம் மிகுந்த பெண்ணான திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டவன். சதாநீகன் என்பவனின் தந்தை. பாண்டவர்களின் அஞ்ஞான வாச காலத்தில் விராட நாட்டு மன்னன் ஆணையை ஏற்று குதிரைக் காப்பாளனாகப் பணியாற்றி, குதிரைபேசும் மொழியைப் பேசி(பரிபாசை), குதிரைகளைத் தம்சொற்படி நடக்கவைத்தவன். வாள் போரில் சிறந்தவன். கர்ணனின் பிள்ளைகளைப் போரில் கொன்றவன். வசுதேவரின் மகனான வாசுதேவனின் அன்புத் தங்கையே, கிராந்திகன் (நகுலன்) துணைவியே! நன்நீராடு. துருபதன் மகளே! நீராடு.

அசுவினிதே வரம்சத் தோடு 
மாத்ரிதேவி பெற்றெ டுத்த
பாண்டுவின்நல் ஐந்தாம் மைந்தன் 
சகாதேவன் பெயரைக் கொண்டோன்
பசுகுணத்து பாஞ்சா லியோடு 
மகதநாட்டு மகளை மணந்தோன் 
சுருதசேனன் தந்தை யாகி 
விராடமன்னன் பசுவைக் காத்தோன்
வசமாக வாளை வீசும் 
அறிவாற்றல் மிக்க வீரன்
முக்காலம் அறிந்து சொல்லும் 
சோதிடநல் கலையைக் கற்றோன்
வசியமாகப் பகடை உருட்டும் 
பாதகனாம் சகுனி வென்றோன்
தாத்திரிபா லனுடன்நீ ராடு 
பாஞ்சாலன் மகள்நீ ராடு 89

அசுவினி தேவர்களின் குணங்களைப் பெற்று, மாத்ரிதேவி பெற்றெடுத்த பாண்டுவின் ஐந்தாம் மகன் சகாதேவன் என்னும் பெயருடையோன். பசுவைப் போன்ற சாதுவான குணங்களைக் கொண்ட திரௌபதியையும் மகதநாட்டு மன்னன் மகளையும் திருமணம் செய்து கொண்டவன். சுருதசேனனின் தந்தையானவன். விராட நாட்டு மன்னனின் பசுக்கூட்டங்களைத் காத்தவன். வசமாக வாள் வீசும் பயிற்சி பெற்ற வீரன். அறிவாற்றலில் சிறந்தவன். மூன்று காலங்களையும் அறிந்து சொல்லும் சோதிடக் கலையில் கைதேர்ந்தவன். வசியமாகப் பகடை உருட்டும் தன்மைகொண்ட சகுனியைப் போரில் வென்றவன். அத்தகு தாத்திபாலனுடன் (சகாதேவன்) நீராடு, பாஞ்சாலன் மகளே நீராடு.

துர்வாச முனிவர் தந்த 
சிறப்புமிகு வரத்தி னாலே
தேவர்கள் அம்சம் பெற்று 
குந்திமாத்ரி ஈன்றெ டுத்த 
தருமராதி பாண்டு மக்கள் 
சிறப்புடனே கலைகள் கற்று
யாவருமே மதிக்கும் வண்ணம் 
நல்லாட்சி நடத்தி வந்தார்
பெருங்குளத்தில் எறிந்த கல்லாய் 
விதிவழியே சென்று பின்னர்
போரினிலே வெற்றி பெற்று 
தன்பங்கை வென்றெ டுத்த
பெருமக்கள் ஐவ ரோடு 
ஒன்றிணைந்து நன்னீ ராடு
பெருமைமிக சொந்த பந்தம் 
சேர்ந்ததென நன்னீ ராடு. 90

துர்வாச முனிவர் குந்திதேவிக்குத் தந்த சிறப்பான ஐந்து வரத்தினால் தேவர்களின் குணங்களைக் கொண்டு குந்தியும் மாத்ரியும் பெற்றெடுத்த தருமர் முதலான பாண்டுவின் மக்கள் ஐவரும் சிறப்பாகக் கலைகளை எல்லாம் கற்று, யாவரும் மதித்து வணங்கும் தன்மையில் நல்லாட்சி நடத்தி வந்தனர். பெரிய குளத்தில் எறிந்த சிறியக் கல்லைப்போல, விதி காட்டிய வழியில் சென்று, இறுதியில் போரில் வெற்றி கொண்டு, தங்களின் நாட்டினைப் பெற்ற பெருமைக்குரிய மக்கள் ஐவரோடும் ஒன்றாக நன்னீராடு. பெருமை தரும் சொந்தபந்தங்களோடு சேர்ந்து நன்னீராடு

திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ் - அம்மானைப் பருவம்

March 20, 2025
அம்மானைப் பருவம்

முப்பத்தாறுசீர் விருத்தம் ( மா மா காய் )

இரண்ய கசிபு வம்சத்தில்
நிரும்பன் மகனாய் பிறந்துவந்த
கொடியோர் சுந்தன் உபசுந்தன்
எண்ணம் செயலும் ஒன்றாகி
இருவர் ஒருவர் போலிருந்து
உண்ப துறங்கு வதொன்றாகி
நாடு வீடு படுக்கையுடன்
பலவும் இவர்க்கு ஒன்றேயாம்.
வீரம் மிகுந்த இரட்டையர்கள்
மூன்று உலகம் வென்றிடவே
கட்டை விரலை தரைஊன்றி
காற்றை மட்டும் உணவாக்கி
கரங்கள் இரண்டும் தலைகூப்பி
வெகுநாள் தவத்தில் இருந்தனரே.
தவத்தை மெச்சி பிரம்மதேவர்
வேண்டும் வரத்தைக் கேள்என்றார்.
அறிவு மிகுதி உடையவராய்
நினைத்த உருவம் எடுத்திடவும்
வலிமை மிகவும் பெற்றிடவும்
எங்கள் இருவர் தவிரவேறு
யாரும் மரணம் உண்டாக்க
கூடா தென்று வரம்பெற்றார்
பெற்ற வரத்தால் ஆசிரமம்
யாகம் வேள்வி பலவற்றை
வருத்தம் கொள்ளும் அளவிற்கு
நாசம் செய்து தொல்லைதந்தார்
மூன்று உலகை அடைந்திடவே
மக்கள் ஞானி தேவரொடு
பயிர்கள் விலங்கு பறவைஎன
பலவும் அழித்து துயர்தந்தார்
ரிசிகள் முனிவர் வேண்டுதலில்
பிரம்ம தேவர் ஆணைபடி
விசுவ கருமா திலோத்தமையைப்
படைத்துப் பகைவர் இடம்நோக்கி
அனுப்பி வைக்க இருவருமே
அழகில் மயங்கி உரிமைகொண்டு
ஒருவர் ஒருவர் அடித்துகொண்டு
பெற்ற வரத்தால் மாய்ந்தனரே
அதுபோல் இன்றி வரைமுறையில்
நார தமுனி வழிகாட்ட
ஆண்டு ஒன்று ஒருவருடன்
வாழ்தல் வேண்டி முறைவைத்து
தமக்குள் விதியை வகுத்துகொண்டு
இல்லற இன்பம் கண்டுவந்த
பாண்ட வரில்லத் துணைவியே! 
ஆடி அருளாய் அம்மானை.
குந்தி மாத்ரி மருமகளே!
ஆடி அருளாய் அம்மானை. 71

இரண்ய கசிபின் பரம்பரையில் நிரும்பன் என்பவனின் மகனாகப் பிறந்த கொடியவர்கள் சுந்தன், உவசுந்தன். இவர்களின் எண்ணம், செயல் மட்டுமன்றி உண்பது, உறங்குவது, நாடு, வீடு, படுக்கை என யாவும் ஒன்றாகவே இருந்தது.  வீரம் மிகுந்த இந்த இரட்டையர்கள் இந்த மூன்று உலகையும் தாங்களே ஆளவேண்டும் என்ற நோக்கில், காற்றை மட்டும் உணவாக உண்டு. கால்கட்டை விரலை மட்டும் தரையில் ஊன்றி, கைகள் இரண்டும் தலைமேல் தூக்கி வெகுநாட்களாகக் கடுமையாகத் தவம்செய்தனர். இவர்களின் தவத்திற்கு மனம் இரங்கிய பிரம்மதேவர். வேண்டிய வரங்களைக் கேள் என்றார். அறிவில் சிறந்தவர்களாகவும் வலிமை மிக்கவர்களாகவும் தாங்கள் நினைத்த உருவத்தை எடுக்குத் திறம் கொண்டதாகவும் எங்களைத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் ஏற்படக் கூடாது என்றும் வரங்களைப் பெற்றனர். வரங்கள் கிடைத்தவுடன், முனிவர்கள், அந்தணர்கள் வாழும் இல்லங்களையும் யாகங்களையும் அழித்தனர். மக்கள் வருந்தும் அளவிற்கு நாசங்களையும் தொல்லைகளையும் தந்தனர். மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகையும் ஆளவேண்டும் என்ற நோக்கில் அங்குள்ள மக்கள், ஞானிகள், தேவர்கள், பயிர்கள் வகைகள், விலங்குகள், பறவைகள் என அனைத்தையும் அழித்தனர். இதனால் மனமுடைந்த முனிவர்கள், அந்தணர்களின் வேண்டுகோளின்படி பிரம்மதேவர் விசுவகர்மாவை அழித்து, திலோத்தமை என்ற அழகிய பெண்ணைப் படைத்துப் பகைவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். திலோத்தமையைக் கண்ட சுந்தன், உபசுந்தன் இருவரும் அவளது அழகில் மயங்கி தனக்குதான் இவள் என உரிமைகொண்டு, இருவரும் சண்டையிட்டுக் கொண்டு அவர்கள் பெற்ற வரத்தாலேயே இறுதியில் மாய்ந்தனர். அவ்வாறு இன்றி, தங்களுக்கும் வரைமுறைகளை வகுத்துக் கொண்டு, நாரதரின் வழிகாட்டுதலின்பேரில் ஓராண்டுக்கு ஒருவர் என்ற வீதம் வாழ்ந்து இல்லறம் கண்ட பாண்டவர்களின் இல்லத் துணையே! அம்மானை ஆடுவாயாக. குந்தி மாத்ரி மருமகளே! அம்மானை ஆடுவாயாக.

பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )

உலுபியெனும் நாக ராணி
மனிதபாம்பு வடிவம் தாங்கி
அர்ச்சுனன்மேல் இச்சை கொண்டு
மனைவியாக ஏற்க வாழ்ந்தாள்
வில்லிற்கு விசயன் என்று 
பேர்படைத்த பாண்டு மைந்தன்
தன்னுடைய அத்தை மகளாம் 
சுபத்திரையை மனதுள் எண்ணி
மலைபோன்ற ஆசை யாலே 
பொய்யான வேடம் இட்டு
கிருட்டிணனின் உதவி யோடு 
சுபத்திரையை மணந்து வந்தான்
வில்லாளி அன்பு துணையே!
அம்மானை ஆடி அருளே!
சுபத்திரையின் ஓர கத்தி! 
அம்மானை ஆடி அருளே! 72

வில்லிற்கு விசயன் என்று பெயர்கொண்ட அர்ச்சுனனை, மேல் பாதி மனித உருவமும் கீழ்ப்பாதி பாம்பின் வடிவமும் கொண்டு வசித்து வந்த  உலுபி என்னும் நாகராணி, அர்ச்சுனன் மேல் ஆசை கொண்டு இணங்காத அவனை இணங்கவைத்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாள். அர்ச்சுனனோ, தன்னுடைய அத்தை மகளான சுபத்திரையின்மேல் அளவில்லாத ஆசைகொண்டு, முனிவன்போல் பொய்யான வேடமிட்டு, கிருட்டிணனின் துணையோடு சுபத்திரையை மணந்தான். அத்தகைய வில்லாளியான அர்ச்சுனனின் அன்புத் துணைவியே! அம்மானை ஆடுக. சுபத்திரையின் ஓரகத்தியே! அம்மானை ஆடுக.

சொர்க்கமுள்ள காண்டீ மரத்தால் 
பிரம்மதேவர் சக்தி யாலே 
படைத்துதந்த காண்டீ பத்தை 
அக்னிதேவன் வேண்டு கோளால்
வருணதேவன் பார்த்த னுக்கு 
அம்பறா தூணி யோடு
நல்தேரையும் பரிசாய் தந்தான் 
தான்பெற்ற வில்லைக் கொண்டு
துரியோத னனுக்கு துணையாய் 
நின்றகர்ணன் எதிர்த்து வென்றும் 
செயத்திரதன் தலையைக் கொய்தும்
போரினிலே வெற்றி கண்ட
அர்சுனனின் அன்பு துணையே!
அம்மானை ஆடி அருளே!
சாரதியின் அன்புத் தங்கை!
அம்மானை ஆடி அருளே! 73

சொர்க்கலோகத்தில் உள்ள காண்டீ என்னும் மரத்தில் பிரம்மதேவர் தன்னுடைய ஆற்றலினால் உருவாக்கிய ‘காண்டீபம்’ என்னும் வில்லை நெருப்புக்கடவுனின் வேண்டுகோளை ஏற்று, மழைக்கடவுளான வருணதேவன் அர்ச்சுனனுக்கு அம்பறாத் தூணியோடு தன் தேரையும் பரிசாகத் தந்தான். தான் பெற்ற வில்லைக் கொண்ட துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணனையும் செயந்திரனையும் போரில் வென்ற அர்ச்சுனனின் அன்புத் துணையே! அம்மானை ஆடுக. பார்த்தனுக்குச் தேரோட்டியாக விளங்கிய கண்ணனின் அன்புத் தங்கையே! அம்மானை ஆடுக.

இருபத்துநான்குசீர் விருத்தம் ( மா மா காய் )

கண்கள் மூன்றும் கைநான்கும்
கழுதைக் குரலைப் பெற்றவனாய்
சேதி நாட்டு மன்னனுக்கு
மகனாய்ப் பிறந்தான் சிசுபாலன்
கண்ணன் அத்தை மகனாக
உறவு முறையில் இருந்தாலும்
கிருஷ்ணன் தனது எதிரிஎன்று
விரோதம் காட்டி வளர்த்துவந்தான்.
மண்ணை வெல்லும் யாகத்தை
சிறப்பாய் செய்து முடித்ததனால்
முதல்ம ரியாதை கிருஷ்ணனுக்குக்
கொடுத்துச் சிறப்புச் செய்தனரே
இதனை எற்க மறுத்தவனாய்
தருமர் முதலா யாவரையும்
மதியா திழிசொல் பலபேசி
கண்ணன் போருக் கழைத்திட்டான்
பண்டை பிறப்பில் சிசுபாலன்
இரண்ய கசிபாய் இராவணனாய்
பிறந்து எதிர்த்து மாண்டதனால்
இந்தப் பிறப்பில் மறுபடியும்
அரியை எதிர்க்கத் துணிந்துவிட்டான்
பிறவி தோறும் வரும்பகையை
முடித்து விடவே நினைத்தஅரி
ஆழி ஏவி அழித்தாரே!
மண்ணை அளந்த கண்ணபிரான்
மண்மேல் அகந்தை கொண்டவரைத்
தன்னுள் சேர்த்துக் கொண்டவர்க்கு
மோட்சம் தன்னைக் கொடுப்பாரே
கண்ணன் தங்கை ஆனவளே!
ஆடி அருளாய் அம்மானை.
பெண்ணின் நல்லாள் திரௌபதியே!
ஆடி அருளாய் அம்மானை. 74

மூன்று கண்களையும் நான்கு கைகளையும் கொண்டவனாக, கழுதைக் குரலைப் பெற்றவனாக, சேதி நாட்டை ஆண்ட மன்னனுக்கு மகனாகப் பிறந்தவன் சிசுபாலன். இவன் உறவு முறையில் கண்ணனின் அத்தை மகனாக இருந்தாலும் கிருட்டிணனைத் தன்னுடைய பகைவனாகவே பாவித்து பகையைக் காட்டி வந்தான். பல நாட்டு மன்னர்களோடு போரிட்டு வெற்றி பெற்று,  மாமன்னன் தான் என்பதை உணர்த்துவதற்காகச் செய்யப்படும் யாகமே இராசசூய யாகம். இந்த யாகத்தைத் தருமர் வெற்றிகரமாக முடித்தபின்னர், முதல் மரியாதையைக் கண்ணனுக்குக் கொடுத்துச் சிறப்புச் செய்தார். இதனை ஏற்க மறுத்த சிசுபாலன், கண்ணனையும் அவையில் உள்ளோரையும் இழிவாகப் பேசி கண்ணனைப் போருக்கு அழைத்தான். இந்தச் சிசுபாலன் முற்பிறவியில், இரணிய கசிபாகவும் இராவணனாகவும் பிறந்து திருமாலை எதிர்த்து மாண்டவன். அதனுடைய எச்சமாக இப்பிறப்பிலும் கண்ணனை அவன் எதிர்க்கத் துணிந்துவிட்டான். பிறவிதோறும் வரும் பகையை முடித்துவிட எண்ணிய கண்ணன், தன்னுடைய சக்கரப் படையை ஏவி அவனை அழித்தார். வானையும் மண்ணையும் அளந்த கண்ணபிரான் மண்மேல் வாழும் மனிதர்களின் செருக்கை அழித்து அவர்களைத் தன்னுள் சேர்த்துக் கொண்டு வீடுபேறு வழங்கும் ஆற்றலுடையவர். அத்தகைய கண்ணணின் தங்கையானவளே! அம்மானை ஆடுக. பெண்களின் சிறந்தவளே! அம்மாணை ஆடுக.

பன்னிருசீர் விருத்தம் ( விளம் மா மா )

சனகரின் முன்னோ ருக்கு
விரிசடை கடவுள் தந்த
பலவகை ஆற்றல் கொண்ட
சிறப்புடை வில்லே தனுசு
அனந்தனும் சிவனும் மட்டும்
வளைத்திடும் திறமை கொண்டோர்.
இராமனைத் தனது மகற்கு
திருமணம் செய்ய எண்ணி
சனகரும் திட்டம் தீட்டி
தனுசுவை வளைப்ப வருக்கே
சீதையை மணமு டித்து
தருவதாய் துணிந்து நின்றார்
அன்புடை சீதை உறவே
ஆடிஅ ருளாய்அம் மானை
இராமனின் அன்பு தங்கை
ஆடிஅ ருளாய்அம் மானை 75

சனகரின் முன்னோருக்கு சிவபெருமான் பரிசாகத் தந்த பலவகையான ஆற்றல் கொண்ட சிறப்புடைய சிவதனுசை, கண்ணனும் சிவனும் மட்டுமே வளைக்கும் திறன் கொண்டவர்கள். இதனை அறிந்த சனகர், இராமனையே தனக்கு மருமகனாகக் கொண்டு வரவேண்டும் என்று தனக்குள் ஒரு திட்டம் தீட்டி, இந்த சிவதனுசை வளைப்பவருக்கே என்மகளைத் திருமணம் செய்து தருவேன் என்று அறிவித்தார். அவ்வாறு திருமணம் செய்துகொண்ட சீதையின் உறவான திரௌபதியே! அம்மானை ஆடுக. இராமனின் அன்புத் தங்கையே! அம்மானை ஆடுக.

பன்னிருசீர் விருத்தம் ( விளம் மா தேமா )

அரும்பெரும் செயல்கள் செய்து
அறிவிய லாளர் இன்று
இயற்கையில் நடவா வற்றை
இயல்பென செய்வார் நன்று
இருவரும் இணையா போதும்
அவரவர் அணுவைக் கொண்டு
கருவினைச் சுமந்து பெற்ற
அன்னையர் பலபே ருண்டு
ஒருவரின் வயிற்றி லுள்ள
கருவினை மாற்றி வைத்து
அடுத்தவர் பெற்ற பிள்ளை
வாசுகி ஏழாம் மைந்தன்
இராமனின் தமக்கை அன்னாய்
ஆடிய ருளாயம் மானை
ஐவரைப் பெற்ற அன்னை
ஆடிய ருளாயம் மானை 76

இன்றைய அறிவியல் யுகத்தில் இயற்கையின் நடவாத பலவற்றை இயல்பாகவே நடத்திக் காட்டுகின்றனர் அறிவியலாளர்கள். ஆணும் பெண்ணும்  இணையாமலேயே கருவினைச் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையும் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் சாத்தியமான ஒன்றாக அமைகிறது. ஆனால் ஒருவரின் கருப்பையில் உருவானக் கருவை அடுத்தவர் கருப்பைக்கு இடம் மாற்றிவைத்து பிறந்த வாசுகியின் ஏழாம் மைந்தன் இராமனின் தமக்கை யான அன்னையே! அம்மானை ஆடுக. ஐந்து மகன்களைப் பெற்ற அன்னையே! ஆடுக அம்மானை.

பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )

மாற்றார் செய்த சூழ்ச்சியாலே
காடு சென்ற பெண்மகளே!
உற்றார் உறவு இருந்தபோதும்
விதியின் வழியில் நடந்தாயே!
ஆற்றல் மிகுந்த உன்சொல்லால்
அழித்தி ருப்பாய் எதிரிகளை
கணவன் மாரின் வீரத்தால்
வீழ்த்த வேண்டும் என்றெண்ணி
போற்றி காத்து இருந்திட்டாய்
பொறாமை வஞ்சம் சூழ்ச்சியினால்
நல்லோர் மனதை நோகடித்து
வாழ்ந்தார் இல்லை பூமியிலே
மாற்றார் அழித்த மாண்புடையாள்
ஆடி அருளாய் அம்மானை
குந்தி பாண்டு மருமகளே
ஆடி அருளாய் அம்மானை 77

பகைவர்கள் செய்த சூழ்ச்சியின் காரணமாக வனவாசம் சென்ற பெண்மகளே. உனக்கு உறவாகப் பலர் இருந்தபோதும் விதியின் காரணமாகப் பல துன்பங்களை அடைந்தாய். ஆற்றல் தரும் உன் சொல்லாலேயே நீ பகைவர்களை அழித்திருக்கலாம். ஆனால் உன் கணவன்மார்களின் வீரத்தாலேயே பகைவர்க் கூட்டங்கள் அழியவேண்டும் என்று நினைத்து பொறுமை காத்து இருந்தாய். பொறாமை வஞ்சம் சூழ்ச்சியினால் நல்லவர்கள் மனதை துன்புறுத்தி வாழ்ந்தவர்கள் இந்த பூமியில் நிலையாக இருந்ததில்லை. பகைவர்களை அழித்த பெருமைக்கு உரியவளே! ஆடுக அம்மானை. குந்தி, பாண்டு மருமகளே! ஆடுக அம்மானை.

பெரும்போர் செய்து வெல்வதரி
தென்ற எண்ணம் படைத்தவர்கள்
சூதில் மூலம் உடமைகளைச்
சூழ்ச்சி யாலே வென்றுவிட்டார்
தரணியில் சிறந்த பெண்மகளைச்
சபையின் நடுவே முன்நிறுத்தி
மானம் காக்கும் ஆடைதனை
மதியி ழந்து களைத்திட்ட
துரியோ தனனின் கூட்டத்தை
வேரோ டறுக்க பாண்டவர்கள்
சபதம் கொண்டு காத்திருந்து
பின்னை நாளில் வெற்றிகண்டார்
உரிமை பெற்று மகிழ்ந்தவளே!
ஆடி அருளாய் அம்மானை
பாண்டு மக்கள் துணையாளே!
ஆடி அருளாய் அம்மானை 78

போர் செய்தால் வெற்றி கொள்ள முடியாது என்று நினைத்த பகைவர்கள், சூதாட்டத்தின் மூலம் பொன், பொருள், நாடு, நகரம் முதலான உடமைகள் யாவற்றையும் சூழ்ச்சியால் வென்று, இந்த பூமியில் சிறப்பானதொரு பெண்ணான திரௌபதியை அரசர்கள் சபையின் நடுவே நிறுத்தி, மானம் காக்கும் ஆடைகளை அறிவை இழந்த மூடர்களாய் களைந்திட்ட துரியோதனனின் கூட்டத்தினர் யாவரையும் போரில் அழிப்பேன் என்று சபதம் ஏற்று, காலம் வரும்வரைக் காத்திருந்து, பின்னைய நாளில் போரிட்டு வெற்றி கொண்டனர். இழந்த உரிமைகள் அனைத்தையும் பெற்று மகிழ்ந்த திரௌபதி! அம்மானை ஆடுக. பாண்டு மக்களின் துணையாளே! அம்மானை ஆடுக.

இரத்தி னமாலை பொற்காசு
புலித்தோல் செய்த தேரோடு
குதிரை யானை பணிப்பெண்கள்
வேலை ஆட்கள் நாட்டுடனே
உருட்டி அனைத்தும் வென்றதுடன் 
இளையோன் நகுலன் சகாதேவன்
வில்லில் சிறந்த விசயனொடு
பீமன் தருமன் திரௌபதியைத்
துரியோ தனனின் திட்டத்தால்
சூழ்ச்சி செய்து சகுனிவென்றான்
விதியின் பிடியில் இருந்துதப்பி
பிழைத்தார் உலகில் யாருமில்லை.
உரிமை வென்று பெற்றவளே!
ஆடி அருளாய் அம்மானை
விரித்தக் கூந்தல் முடிந்தவளே!
ஆடி அருளாய் அம்மானை 79

தருமரை வஞ்சகமாய் ஏமாற்றி இரத்தினமாலை, பொற்காசுகள், புலித்தோலால் செய்த தேர், குதிரைகள், யானைகள், பணிப்பெண்கள், வேலையாட்கள் என அனைத்தையும் பகடை உருட்டி வெற்றி கொண்டதோடு மட்டுமின்றி நகுலன், சகாதேவன், வில்லாற்றலில் சிறந்தவனான அர்ச்சுனன், பீமன், தருமன், திரௌபதியையும் துரியோதனன் செய்த திட்டத்தின் பேரில் வென்றெடுத்தான் சகுனி. விதியின் வழியில் இருந்து தப்பித்துப் பிழைத்தார் யாருமில்லை. ஆதலினால் விதியால் தோற்று பின்னர் போரில் வென்றவளே! ஆடுக அம்மானை. துரியோதனன் முதலானோரை வெற்றி கொண்ட பின்னரே என் கூந்தலை முடிவேன் என சபதம் ஏற்று, வென்றபின் கூந்தலை முடிந்தவளே! ஆடுக அம்மானை.

இருபத்துநான்குசீர் விருத்தம் ( காய் மா தேமா )

காந்தார நாட்டு மன்னன் 
சுபலனின் அன்பு மைந்தன்
காந்தாரி உடன்பி றப்பு 
துரியோத னனின்தாய் மாமன்
பீசுமரின் சூழ்ச்சி யாலே 
தன்குடும்பம் அழிந்த தற்கு
கௌரவர்கள் குலம ழிக்க 
உறவென்று சகுனி வந்தான்
காந்தாரன் விரலைக் கொண்டு 
கச்சிதமாய் செய்தெ டுத்த
உருட்டுகின்ற தாயக் கட்டை 
சகுனியது சொல்லைக் கேட்கும்
துரியோத னனாசை தூண்டி 
தருமரைச்சூ துக்க ழைத்துத்
தன்னுடைய திட்டத் தோடு 
பாண்டவரை வென்றெ டுத்தான்
காந்தார நாட்டு மைந்தன் 
இளையவனாம் சகுனி தன்னால்
பீசுமரின் குடும்பம் வீழ்த்த 
முடியாது என்று எண்ணி
பகையாளி குடும்பந் தன்னை 
உறவாடி கெடுத்தா ரைப்போல்
  பாண்டவரைக் கோபம் ஏற்றி 
தான்நினைத்த செயலைச் செய்தான்
மாந்தளிரின் மேனி கொண்டும் 
பூமணத்தின் வாசம் ஏற்றும்
வெற்றிமாலை சூடி நித்தம் 
முழுநிலவாய் வீற்றி ருக்கும் 
இரட்டணைவாழ் யாக சேனி 
ஆடிஅரு ளாய்அம் மானை
குலம்காக்க வந்த அன்னை 
ஆடிஅரு ளாய்அம் மானை 80

காந்தார நாட்டை ஆண்ட சுபலனின் இளைய மகனும் காந்தாரியின் உடன்பிறந்தவனும் துரியோதனின் தாய்மாமனுமாகியவன் சகுனி. பீசுமரின் சூழ்ச்சியால் தன் குடும்பம் அழிந்ததற்குக் கௌரவர்களின் குலத்தை அழிக்கவே உறவினனாகத் துரியோதனிடம் சேர்ந்தான் அவன். காந்தாரனின் கைவிரலைக் கொண்டு உருட்டி விளையாடும் தாயக்கட்டைகளைச் செய்தான் சகுனி. இத்தாயக்கட்டைகள் சகுனியின் பேச்சைக் கேட்டு அவன் சொல்லும் எண்ணிக்கையே விழும் தன்மை கொண்டது.  ஆதலினால் துரியோதனனின் ஆசையினைத் தூண்டி, தருமரைச் சூதாடச் செய்து தன்னுடையத் திட்டத்தின்படி பாண்டவர்களை வென்றான் சகுனி. தன்னால் பீசுமரின் குடும்பத்தை அழிக்க முடியாது என முடிவு செய்து, பாண்டவர்களைக் கோபப்படுத்தி பீசுமரின் குலத்தை அழிக்கும் செயலைக் கச்சிதமாய் செய்து முடித்தான். போரில் வெற்றிபெற்று, மாந்தளிர் போல மினுமினுப்பான உடலையும் பூக்களின் மணங்களை உடல் முழுவதும் தடவியும் வெற்றி என்னும் மாலையைச் சூடி, முழு நிலவுபோல அமர்ந்திருக்கும் இரட்டணையில் கோவில்கொண்ட யாகசேனியே! ஆடுக அம்மானை. எம்குலம் காக்க வந்த அன்னையே! ஆடுக அம்மானை.